பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து அறிவிக்கின்றன.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால், பெட்ரோல் மீதான கலால் வரி, லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசலுக்கு ரூ.10 ஆகவும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்ளாகவே, வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலையையும் அதிரடியாக ரூ.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன.
உஜ்வாலா பயனர்களுக்கும் பொருந்தும்
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று வெளியிட்டார். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்காக, தற்போது சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வானது, சாதாரண மானியம் பெறும் பயனாளர்கள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் சிலிண்டர் பெறும் பயனாளர்களுக்கும் பொருந்தும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதலே அமலுக்கு இந்த விலையுயர்வு வந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இம்மாதத்தின் முதல் தேதியின்போது (ஏப்ரல் 1ம் தேதி), சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்பட்ட போது,
வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை, ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ.1921.50க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி மாற்றம்
2024ம் ஆண்டு மகளிர் தினத்தின் போது, வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலையை, ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக குறைந்தது. இடையில் பலமுறை வணிக உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட போதும்கூட, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த ஓராண்டாக அதே விலையில் தொடர்ந்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது அதிரடியாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை, ரூ.818.50-ல் இருந்து ரூ.50 உயர்ந்து, ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் இந்தப் புதிய விலை உயர்த்தப்பட்ட சிலிண்டரின் விலை ரூ.853ஆக உள்ளது. இதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ், பெறப்படும் சிலிண்டர்களுக்கு ரூ.550ஆக விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.879க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, விலைவாசிக்கு உயர்வதற்கு ஏற்ப மக்களின் வருவாய் உயரவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் என அனைத்தின் விலை உயர்வும், அவர்களது சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
ஸ்டாலின் கண்டனம்
வீட்டு உபயோக சிலிண்டரின் இந்த அதிரடி விலை உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், மக்களும் தங்களது கண்டனங்களையும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகப் பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிலிண்டர் விலை உயர்வு, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் என கெஞ்சும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டனர். தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திருக்காமல் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்,“ என்று அவர் தெரிவித்துள்ளார்.