
பணி நேரம் முடிந்த பிறகு அலுவலக ரீதியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க ஊழியர்களை நிர்பந்திக்க கூடாது என்ற அம்சத்தை உள்ளடக்கிய பணியாளர் நலன் சார்ந்த முக்கிய தனிநபர் மசோதாவை அண்மையில் மக்களவையில் முன்மொழிந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே. இதை ‘Right to Disconnect’ என்ற மசோதாவாக அவர் அடையாளப்படுத்தினார்.
இதன் மூலம், பணி நேரம் முடிந்த பிறகு அலுவலக ரீதியான தொடர்புகளை தவிர்க்கும் உரிமையை இந்த மசோதா நிறைவேறினால் ஊழியர்கள் பெற முடியும். கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டில் இருந்து ஊழியர்கள் பணியாற்றும் சூழல் உருவானது. அதன் பிறகு, ஹைபிரிட் முறையில் வீடு, அலுவலகம் என மாறி மாறி பணியாற்றும் நிலை ஏற்பட்டது. இப்போதும் சில தனியார் நிறுவனங்களில் இந்த ஹைபிரிட் பணி முறை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என்பதை கடந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டி உள்ளது.
‘கோமாளி’ தமிழ் திரைப்படத்தில் வருவது போல உயர் அதிகாரிகள் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களை அலுவல் நேரத்துக்கு பிறகு தொடர்பு கொண்டு, சில வேலைகளை செய்து கொடுக்குமாறு கேட்பதும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது சுப்ரியா சுலேவின் Right to Disconnect மசோதா முன்மொழிவு.

Right to Disconnect மசோதா?
பணி நேரத்துக்கு பிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ தங்களுக்கு வரும் அலுவலக ரீதியான தொலைபேசி அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் இ-மெயில்களுக்கு ஊழியர்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை.
அப்படி வரும் அலுவல் ரீதியான தொடர்புகளை அவர்கள் அஞ்சாமல் தவிர்க்கலாம். இதனால் அவர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்க முடியாது. இதைதான் Right to Disconnect மசோதா முன்மொழிகிறது. இதன் மூலம் தனிநபர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையை சிறப்பானதாக அமைத்துக் கொள்ளலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணி நேரத்துக்கு பிறகு ஊழியர்களை நிறுவனங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் இருந்தால் அதற்கென பிரத்யேக விதிமுறையை அவசரகால அழைப்பு, என மேற்கொள்ளலாம். இதற்கும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் பரஸ்பர ஒப்புதல் அவசியம், என இந்த மசோதா முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்துக்கு பிறகும் ஊழியர்கள் பணியாற்ற சம்மதித்தால் அவர்களுக்கு அதற்கான கூடுதல் பணி நேர ஊதியமும் (Overtime Pay) வழங்க வேண்டும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஊழியர்களுக்கான இந்த உரிமையை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஏன் அவசியம்?
முழுவதும் ஊழியர்களின் நலன் சார்ந்ததாக இந்த மசோதா அமைந்துள்ளது. தற்போது இந்தியாவில் 8 மணி நேர வேலை என்பது நடைமுறையில் உள்ளது. சில தொழில் நிறுவனங்களும், சில முன்னணி தொழிலதிபர்களும் இந்த வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும், என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது இந்திய தேசத்தின் பொருளாதாரம் சார்ந்தது, என தங்களது நிலையை அவர்கள் அடையாளப் படுத்துகின்றனர்.
அதேநேரத்தில், இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஊழியர்களை ‘ரவுண்ட் தி கிளாக்’-ல் (எப்போது வேண்டுமானாலும்) நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த போக்கு படிப்படியாக பல்வேறு துறைகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் சுப்ரியா சுலே இந்த மசோதாவை முன்மொழிந்தார் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில ஆய்வுகளை இந்த மசோதா முன்மொழிவு சுட்டும் வகையில் உள்ளது. குறிப்பாக ஊழியர்களின் பணி வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மசோதா உள்ளதாக பார்க்கப்படுகிறது.
தூக்கமின்மை, மன அழுத்தம், பணி சார்ந்த அழுத்தம், பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தம், பணிச்சுமை மற்றும் Obesity போன்றவற்றை வேலை நேரத்துக்கு பிறகு அலுவல் ரீதியான பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் இது அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan