
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி மோசடி அதிகரித்து வரும் பிரச்சனையை வரித்துறை அதிகாரிகள் எதிர்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. செயல்படாத அல்லது முடங்கிய நிலையில் உள்ள நிறுவனத்தை புதுப்பித்து அதன் மூலம் போலி இன்வாய்ஸ் வழங்கி, உள்ளீடு வரி கடன் (ITC) அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த மோசடி அமைகிறது.
நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் சமர்பிக்கப்பட்ட தரவுகள், கடந்த நான்கு ஆண்டுகளில் மோசடி நிறுவனங்கள் மூலம் ஜிஎஸ்டி ஏய்ப்பு அதிகரித்து, 2017ல் அறிமுகமான இந்த வரி விதிப்பு முறைக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது, தெரிய வந்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதி அமைச்சகம், 2023 நிதியாண்டு மற்றும் நடப்பு ஆண்டு இடையே 55,000க்கும் மேலான போலி இன்வாய்ஸ் மற்றும் ஐடிசி வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. வரி அதிகாரிகள் 1.61 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கு உரிய பரிவர்த்தனைகளை கண்டறிந்துள்ளனர்.
அரிதாக நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த மோசடி இப்போது, ஒரு தொழில் போல நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜிஎஸ்டி மோசடி
நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமர்பித்த தரவுகள் ஜிஎஸ்டி மோசடி அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது:
- நிதியாண்டு 2022–23: 7,231 வழக்குகள்| ரூ.24,140 கோடி
- நிதியாண்டு 2023–24: 9,190 வழக்குகள் | ரூ.36,374 கோடி
- நிதியாண்டு 2024–25: 15,283 வழக்குகள் | ரூ.58,772 கோடி
- நிதியாண்டு 2025–26 (அக்டோபர் வரை): 24,109 வழக்குகள் | ரூ.41,664 கோடி
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மோசடிகள், மேம்பட்ட டிஜிட்டல் கண்டறிதல் மற்றும், மோசடி நிறுவனங்கள் அதிகரிப்பு இரண்டையும் உணர்த்துகின்றன. இந்த விசாரணை போக்கு குறித்து அறிந்த அதிகாரிகள் இந்த மோசடி நிறுவனங்கள் இணை சப்ளை சைன் போல செயல்படுகின்றன, என்கின்றனர். காகிதத்தில் மட்டுமே உள்ள இந்நிறுவனங்கள் பல நிறுவனங்களுக்கு ஐடிசி வழங்குகின்றன. இவை பதிலுக்கு செலுத்தாக வரி மீது பலன் பெறுகின்றன.
மருந்தக நிறுவனங்கள்
எஃகு முதல் மின்னணு வரை பல துறைகளில் இந்த பிரச்சனை இருந்தாலும், மருந்தக துறையில் அதிகமாக உள்ளது. மருந்தக துறையில், கட்டுப்பாடுகள் பதிவு சிக்கலாக இருப்பதோடு, செயலற்ற நிறுவனங்களை புதுப்பிப்பதும் எளிதாக உள்ளது.
பல ஜிஎஸ்டி மோசடி வழக்குகளில் செயலற்ற அல்லது தூங்கும் மருந்தக நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கிறது:
- நிதியாண்டு 2022–23: 3 வழக்குகள் | ரூ.31.71 கோடி
- நிதியாண்டு 2023–24: 0 வழக்குகள்
- நிதியாண்டு 2024–25: 2 வழக்குகள் | ரூ.5 கோடி
- நிதியாண்டு 2025–26 (அக்டோபர் வரை): 2 வழக்குகள் | ரூ.7.25 கோடி
இவை அளவில் சிறியதாக இருந்தாலும் தீவிர விசாரணை தேவை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில், மருந்தக நிறுவனங்கள் பெரிய அளவிலான லைசன்ஸ் வலைப்பின்னல் கொண்டுள்ளன மற்றும் கையிருப்பு அல்லது உற்பத்தி திறன் கொண்டிருப்பதால், போலி இன்வாய்ஸ்களை கண்டறிவது கடினமாக உள்ளது.
மருந்தக நிறுவனம் சார்ந்த விசாரணையை மேற்கொண்ட மூத்த அதிகாரி ஒருவர், நீண்ட காலமாக செயலற்று இருக்கும் நிறுவனத்தை புதுப்பித்து, சப்ளை பதிவுகளை உண்டாக்கி, காகிதத்தில் அதிக மதிப்பு ரசாயண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக இந்த போக்கு அமைந்துள்ளது, என்கிறார்.
“பதிவு நிறைவடைந்ததும், அதே செயலற்ற நிறுவனம் தனது கதவுகளை திறக்காமலே, கோடிக்கணக்கான மதிப்பிற்கு இன்வாய்ஸ்களை உருவாக்க முடியும்” என்கிறார். இந்த மோசடியாளர்களுக்கான லாப விகிதமும் அதிகம்.

புதிய டிஜிட்டல் அறன்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிமுறைகள் கீழ்படிதல் மற்றும் ஜிஎஸ்டி பதிவு படிமுறைகளை கடினமாக்கி இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
பல புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன:
இன்வாய்ஸ் பொருத்தம்: ஜிஎஸ்டிஆர்-1 ல் பதிவேற்றப்பட்டு, ஜிஎஸ்டிஆர்-2பியில் பிரதிபலிக்கும், இன்வாய்ஸ்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால், பொருந்ததாக ஐடிசி அம்சம் முடக்கப்படுகிறது.
கட்டாய தொடர் தாக்கல்: வர்த்தகங்கள் ஜிஎஸ்டிஆர்-3பி க்கு முன்னதாக ஜிஎஸ்டிஆர்-1 தாக்கல் செய்யப்பட வேண்டும். நிறுவனங்கள் இன்வாய்ஸ் தகவல்களை தாமதமாக்குவதை இது தவிர்க்கும்.
பான் இணைப்பு சரிபார்ப்பு: பதிவு செய்ய இனி, அதிக இடர் வழக்குகளில் ஓடிபி சார்ந்த பான் கார்டு சரி பார்ப்பு ஆதார் சார்ந்த சோதனை தேவை.
பெளதீக சரி பார்ப்பு மற்றும் ஜியோ டேகிங்: சில பிரிவுகளில் புதிய ஜிஸ்டி பதிவுக்கு நேரடி பரிசோதனை, ஜியோ டேகிட்ட முகவரி, வங்கி கணக்கு சரி பார்ப்பு உள்ளிட்டவை அவசியம்.
இ-இன்வாய்ஸ் விரிவாக்கம்: ரூ.5 கோடி விற்றுமுதலுக்கு மேல் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கான அனைத்து பி2பி பரிவர்த்தனைகள் இன்வாய்ஸ் மின்னணு வடிவில் இருக்க வேண்டும். நிகழ்நேர கண்காணிப்புக்கு இது உதவும்.
கடுமையான குற்றவியல் அம்சங்கள்: மோசடி ஐடிசி கோரிக்கைகள் தண்டைக்கு உரிய குற்றமாக கருதப்படும். பினை கிடையாது.
புதிய சாதனம்: இன்வாய்ஸ் நிர்வாக அமைப்பு (IMS)
2024ல் அறிமுகமான மிகப்பெரிய சீர்திருத்தமாக இன்வாய்ஸ் நிர்வாக அமைப்பு அமைகிறது. இது வாங்குபவர்கள் இன்வாய்ஸை ஏற்க, நிராகரிக்க அல்லது நிலுவையில் வைக்க வழி செய்கிறது. போலி நிறுவனங்களின் பொய் இன்வாய்ஸ்களை தவிர்க்க இந்த நிகழ்நேர செயல்முறை உதவுகிறது.
இந்த அமைப்பு ஏற்கனவே பொருந்ததாத கிரெடிட்களை குறைத்து, இன்வாய்ஸ் செயல்முறையை மேலும் வெளிப்படையாக மாற்றியுள்ளது, என அதிகாரிகள் கூறுகின்றனர்.
போலி பதிவுகளை கண்டறிய 2023 மற்றும் 2024 பின் பகுதியில் இரண்டு தேசிய அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில வரி அதிகார்கள் இணைந்து ஈடுபட்டனர். நேரடி சோதனை, இல்லாத ஜிஎஸ்டி.ஐஎன் பதிவுகள் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கை இது, என வரி அதிகாரி ஒருவர் கூறினார். இதில் ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் கண்டறியப்பட்டன.
வேகமாக வளரும் மோசடி வலைப்பின்னல்
அதிகரிக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மீறி, மோசடி வலைப்பின்னல்கள், கட்டுப்பாடு முயற்சிகளை விட வேகமாக பெருகி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஷெல் நிறுவனங்கள் அல்லது தூங்கும் நிறுவனங்களை போலி பான் கார்டு, இல்லாத முகவரிகள் கொண்டு உருவாக்கலாம். அதிகாரிகள் கண்டறிதலை விட வேகமாக இதை செய்ய முடியும்.
2026 நிதியாண்டில் ஏழு மாதங்களில் 24,109 வழக்குகள் அதிகரித்திருப்பது மோசடி வலைப்பின்னல் புதிய விதிகளுக்கு ஏற்ப மாறியிருப்பதை உணர்த்துகிறது. கண்டறிதலை தவிர்க்கும் வகையில் பெரிய அளவில் பரிவர்த்தனைகளை வேகமாக மேற்கொள்கின்றனர்.
வர்த்தக விவகாரங்கள் துறை, மருத்து கட்டுப்பாடு அமைப்புகள், வங்கிகள், ஜிஎஸ்டி அமைப்புகள் இடையிலான மேலும் ஆழமான ஒருங்கிணைப்பு தேவை என அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக மருந்தக துறையில் இது அவசியம்.
புதிய கட்டுப்பாடுகள்
ஐடிசி மோசடி போக்கு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களை தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. போலி இன்வாய்ஸ்கள் அமைப்பின் நம்பகத்தன்மையை நீர்த்துப் போக செய்கின்றன, போட்டியை பாதிக்கின்றன மற்றும் பகிர்வு வரி சார்ந்த திட்டங்களுக்கான வருவாய் இடைவெளியை அதிகரிக்கிறது என்று மத்திய அரசு உணர்த்தியுள்ளது.
மத்திய பட்ஜெட்டிற்கு முன்னதாக வருவாய் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் மோசடி முயற்சிகளை தடுக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏஐ சார்ந்த கண்டறிதல் மற்றும் ஒரு சில பிரிவுகளில் முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட தாக்கலை கொண்டு வரலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகிறது: பல ஆண்டு சீர்திருத்தங்களை மீறி இந்தியாவின் ஜிஎஸ்டி அமைப்பு, அதன் அடிப்படை வாக்குறுதியை கேள்விக்குள்ளாக்கும் மோசடி செயல்முறையை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.
ஆங்கிலத்தில்: அனுஜ் சுவர்னா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan