பதிவு செய்யப்பட்ட வங்கிசாரா நிதி நிறுவனம் ’ஃபின்வே’-யின் (Finway) துணை நிறுவனமான ‘ஃபின்வே ஆக்சிலரேட்டர்’, இந்திய ஸ்டார்ட் அப் சூழலின் வளர்ச்சிக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.100 கோடி முதலீடு செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
புதுமையாக்கம் சார்ந்த, வளர்ச்சி வாய்ப்பு கொண்ட நிறுவனங்களில் கவனம் செலுத்தி வரும் ஃபின்வே ஆக்சிலரேட்டர் பல்வேறு துறைகளில் உள்ள பிரகாசமான ஆரம்ப நிலை அல்லது வளர்ச்சி நிலையில் உள்ள, ரூ.100 கோடிக்கும் குறைவான மதிப்பீடு கொண்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய உள்ளது.
ஃபின்வே ஆக்சிலரேட்டர் ஏற்கனவே இந்திய தொழில்முனைவு சூழலில் வியூக நோக்கிலான முதலீடுகள் வாயிலாக வலுவான இருப்பை பெற்றுள்ளது. சிறார்களுக்கான தரமான உள்ளடக்கத்தை உருவாக்கும் விஎப்.எக்ஸ், அனிமேஷன் நிறுவனம் ஸ்பிரவுட் ஸ்டூடியோ, மறுசுழற்சி ஸ்டார்ட் அப் ஜெலேனோ, இயற்கை அழகுசாதன பிராண்ட் காஸ்மெடோபுட் உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது.
மேலும், கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஜீப்ரா லேர்னுக்கு நிதி அளித்துள்ளது. இந்நிறுவனம் ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தது.
ஃபின்வே ஆக்சலரேட்டர் ரூ.1 கோடி முதலீட்டில் துவங்கப்பட்டு ஓராண்டு செயல்பாட்டில் ஏழு மடங்கு விற்றுமுதலை எட்டியுள்ளதாக இது தொடர்பான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. நிறுவனம் தற்போது, 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன், ரூ.200 கோடி அளவிலான கடனை நிதிச்சேவை நிறுவனம் ஃபின்வே மூலம் வழங்கியுள்ளது.
தற்போதைய ரூ.100 கோடி முதலீடு திட்டம், ஸ்டார்ட் அப் சூழல் மற்றும் தற்சார்பை வலுவாக்கும் இந்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. நிறுவனம், தொழில்முனைவோருக்கு மூலதன ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மூலம் ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளது.
“ஃபின்வே ஆக்சலரேட்டரில், இந்தியாவின் அடுத்த அலை பொருளாதார வளர்ச்சி, புதுமையாக்க ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சியால் நிகழும் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் 100 கோடி முதலீடு திட்டம் நிதி அளித்தலை மட்டும் கொண்டிருக்கவில்லை. நிறுவனர்கள் தங்கள் எண்ணங்களை தாக்கம் மிக்க வர்த்தகமாக மாற்ற ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கம் கொண்டது. உலக ஸ்டார்ட் அப் மையமாக விளங்கும் இந்திய நோக்கத்திற்கு பங்களிக்க விரும்புகிறோம்,” என்று நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ரச்சித் சாவ்லா கூறியுள்ளார்.
வெற்றிகரமான வர்த்தகத்தை உருவாக்குவதோடு, சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்களிப்பு செலுத்தும் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பது எங்கள் இலக்கு. புதுமையாக்கம் மற்றும் பொறுப்புணர்வில் சமநிலை காணும் ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம், என்று இணை நிறுவனர் ஆனந்த் சிங் கூறியுள்ளார்.
“குறிக்கோள் கொண்ட, பிரகாசமான தொழில்முனைவோரை ஆதரிக்கும் உத்தியை எங்கள் முதலீடு திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது,” என இன்னொரு இணை நிறுவனர் அக்ஷய் கபூர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan