பஞ்சர் முதல் பூட்டு வரை: அன்றாட சவால்களுக்கு தீர்வாக 5 தமிழக ஸ்டார்ட்அப்கள்!

02:32 PM Oct 10, 2025 | YS TEAM TAMIL

இந்திய ஸ்டார்ட்அப்கள் அன்றாட சவால்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நிலைத்து நிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சவால்கள் மக்கள் தினம் தினம் அனுபவிக்கக் கூடியவை. ஆனால், யாரும் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்காதவை. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், தினசரி வாழ்க்கையை மேலும் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மற்றும் நிலையானதாகவும் மாற்றக்கூடிய பிசினஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

More News :

‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-ல் சவால்களுக்குத் தீர்வு காணும் இதுமாதிரியான ‘நடைமுறை அணுகுமுறைகள்’ தான் மையக் கருத்து. இங்கு பல புதிய தொழில் முயற்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு இந்த ஒவ்வொரு முயற்சியும் தீர்வு காண்கிறது. மக்கள் உண்மையில் எதைத் தேடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்துதான் பயனுள்ள கண்டுபிடிப்பு தொடங்குகிறது என்பதை இது மாதிரியான முயற்சிகள் நிரூபிக்கிறது.

டோமேன் (TowMan)

சாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சரியான உதவி கிடைக்காமல் இருப்பது இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. அப்படியே உதவிகள் கிடைத்தாலும் உள்ளூர் மெக்கானிக்குகளைச் சார்ந்து அதன் சேவை தரம் மற்றும் விலை இருக்கின்றது.

இந்த சிக்கலை தீர்க்க 2021-ம் ஆண்டில், சிலம்பரசன் ராமகிருஷ்ணன் என்பவர் ‘டோமேன்’ (TowMan) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் 24/7 இயங்கும் சாலையோர உதவிச் சேவைகளை வழங்குகிறது. இது ரியல் டைம் ட்ராக்கிங், கால் சென்டர் போன்ற சேவைகள் அடங்கும். இந்திய வாகன ஓட்டிகளுக்கு சாலையோர உதவி எப்போதும் அருகில் உள்ளது என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ள டோமேன் தளம் இந்தியா முழுவதும் பஞ்சர், பேட்டரி ஜம்ப்ஸ்டார்ட் (வண்டி ஸ்டார்ட் செய்ய உதவுவது) மற்றும் வாகனங்களை இழுத்துச் செல்லும் சேவைகளை வழங்குகிறது.

“எங்கள் நோக்கம் மிகவும் எளிமையானது. அது மக்கள் சாலையில் பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் தொடர்ந்து பயணிக்க உதவுவதே. உதவி தேவைப்படும்போது, ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில் ‘டோமேன்’ (TowMan) இருக்கும் என்பதை உறுதிசெய்வதே எங்கள் வேலை” என்கிறார் இதன் நிறுவனர் ராமகிருஷ்ணன்.

டோமேன் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்துள்ளது. மேலும், StartupTN, STPI, மற்றும் அமெரிக்கன் தமிழ் ஃபண்ட் ஆகியவற்றிடம் இருந்து மூன்று கட்ட ஆரம்ப முதலீடுகளை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பல துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் வாகனச் சேவைத் துறையில் டோமேன் உருவாக்கியுள்ள கட்டமைப்பு மிகவும் அரிதானது. MSME தமிழ்நாடு அமைப்பிடம் இருந்து 2023-ம் ஆண்டின் ‘வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப்’ அங்கீகாரம் மற்றும் TiE சிலிக்கான் வேலி, VIVATECH 2025 மாநாடுகளில் பங்கேற்பு ஆகியவை, முதலீட்டாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சூழலின் நம்பிக்கை ‘டோமேன்’ மீது வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

டோமேன் நிறுவனர் ராமகிருஷ்ணன்

டோமேன் நிறுவனம் இப்போது இன்னும் கூடுதலான நகரங்களில் அதன் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், குறைந்த நேரத்தில் சேவை வழங்குவதையும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் வகையில் ஏஐ மூலம் இயங்கும் வாகனங்களை அனுப்பும் தொழில்நுட்பத்தையும் கொண்டுவர உள்ளது.

டோக்கல் ( Tocal)

இந்தியாவின் அதிவேகமாக வளரும் இ-காமர்ஸ் மற்றும் குயிக்-காமர்ஸ் (Quick-commerce) துறைகள் லட்சக்கணக்கான டெலிவரி வேலைகளை உருவாக்கியுள்ளன. ஆனால், இதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பொருளாதாரச் சவால்கள் இன்னும் நீடிக்கின்றன. டெலிவரி ஓட்டுநர்கள் தங்கள் சொந்த வாகனங்களை வாங்கி, பராமரித்து, எரிபொருள் நிரப்ப வேண்டியுள்ளது. இதனால், அவர்களின் மாத வருமானத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் செலவாகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு டெலிவரியின்போதும் ஒரு வாகனம் 285 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. தினமும் லட்சக்கணக்கான டெலிவரிகள் நடப்பதால், இதன் சூழலியல் தாக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், 2021-ல் தைரியஷீல் தேஷ்முக் என்பவரால் டி.பி.ஒய்.டி டைனமிக்ஸ் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் (DBYT Dynamics Mobility Solutions) என்ற நிறுவனத்தின் கீழ், பெங்களூருவைச் சேர்ந்த ‘டோக்கல்’ ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஓட்டுநர்களுக்கு எந்தவித முன் பணமும் இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்குவதுடன், அவர்களுக்கு டெலிவரி வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் ஒரு தளத்தையும் இது கொண்டுள்ளது. அதேநேரம், வணிக நிறுவனங்களை பொறுத்தவரை டோக்கல் டெலிவரிகளை வழங்கும் ஒரு பசுமை கூட்டாளராக மாறுகிறது. இப்படி டோக்கல் நிறுவனம் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதுடன், கார்பன் வெளியீட்டையும் கணிசமாகக் குறைக்கிறது.

இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் எப்படியானது என்றால், இந்த ஸ்டார்ட்அப் 24 லட்சம் டெலிவரிகளை நிறைவு செய்துள்ள அதேவேளையில் ரூ.6.1 கோடி மொத்த வருவாயை ஈட்டியுள்ளது. மேலும், 15.7 லட்சம் கிலோ கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியேற்றத்தைத் தவிர்த்துள்ளதோடு 2,500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

“நகரங்களுக்குள் செயல்படும் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க்குகளில் டோக்கல் நிறுவனம் மிக நம்பகமான, தொழில்நுட்ப ரீதியில் திறன் கொண்ட ஒன்றாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சுயமாகத் தொழில் செய்யும் 10 லட்சம் ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானத்துடன் கூடிய கௌரவமான வேலை வாய்ப்பை வழங்குவதே எங்கள் இலக்கு” என்கிறார் தேஷ்முக்.

ஸ்டார்ட்அப் இந்தியா அமைப்பு மற்றும் StartupTN-இன் TANSEED 3.0 ஆகியவற்றில் நிதியுதவி மற்றும் ஐஐடி மெட்ராஸின் சிறந்த ஸ்டார்ட்அப் என்ற அங்கீகாரம் ஆகியவற்றின் ஆதரவுடன், டோக்கல் ஒரு ‘சூப்பர் ஆப்’-ஐ உருவாக்கி வருகிறது. இந்தச் சூப்பர் ஆப், டெலிவரி ஓட்டுநர்களுக்கு பல தளங்களில் வேலைகளைப் பரிமாறிக்கொண்டு பயன்படுத்தும் வசதியை அளிக்கிறது. இதன் மூலம், ஓட்டுநர்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகச் சம்பாதிக்க உதவுவதுடன் 1,00,000 மின்சார வாகனங்களை இயக்கும் இலக்கை நோக்கியும் வளர்ந்து வருகிறது.

ஃபார்மெரெட் (Farmerette):

பொதுவான உணவுப் பொருட்களில் பெண்களின் உடல்நலத் தேவைகள் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. மாதவிடாய் கால அசௌகரியங்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான எலும்பு ஆரோக்கியம், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான நொறுக்குத் தீனி விருப்பங்கள் எனப் பல விஷயங்களில், தேவையான ஊட்டச்சத்து என்பது பொதுவாகக் கிடைக்கும் பொருட்களைப் போல முக்கியத்துவம் பெறுவதில்லை.

மதுரையைச் சேர்ந்த ‘ஃபார்மரெட் ஹெல்த் ஃபுட்ஸ்’ (Farmerette Health Foods) நிறுவனம், சுந்தரே ராஜு மற்றும் மீனா ராமு ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம், குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான சத்துகளை அளிக்கும் உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் அந்தக் குறைபாட்டிற்குத் தீர்வு காண்கிறது. இவர்களின் தயாரிப்பு வரம்பில், மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான பொருட்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான தசை வலிமையை அதிகரிக்கும் பொருட்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கான கால்சியம் நிறைந்த பொருட்கள் மற்றும் உயர்தரப் பொருட்களால் செய்யப்பட்ட ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்திலும் பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் மைதா ஆகியவை சேர்க்கப்படவில்லை.

இந்த ஐடியாவை தாண்டி ஃபார்மெரெட் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக்கி சமூக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“நோயிலிருந்து எளிதாக விடுபட உதவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும் உணவுகளை அளித்து, பெண்களின் ஆன்மாவைப் பிரகாசமாக்கி புன்னகையை ஒளிரச் செய்வதே ஃபார்மரெட் நிறுவனத்தின் கனவு” என்கிறார் அதன் நிறுவனர் ராஜு.

வி சேஃப் (V SAFE)

நாம் இப்போது வீடுகளில் பயன்படுத்தும் பாரம்பரியப் பூட்டுகள் பாதுகாப்பற்றதாகவும் பயன்படுத்துவதற்கு சிரமமானவையாகவும் இருக்கின்றன. மறுபுறம், விலையுயர்ந்த ஸ்மார்ட் பூட்டுகள் பேட்டரியை சீக்கிரமாக காலி செய்துவிடுகின்றன. இதனால் அடிக்கடி அவற்றை சார்ஜ் செய்ய வேண்டிய தேவை உள்ளது. பிறநாட்டை விட இந்தியாவில் மின்சார விநியோகத்தில் இருக்கும் சிக்கல், மக்களின் பழக்கங்கள் மாறுபட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் இதுபோன்ற ஸ்மார்ட் பூட்டுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன.

விக்னேஷ் வடிவேல் என்பவரால் தொடங்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த ‘தும்பிக்கை பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம், மைக்ரோஆம்பியர் மின் நுகர்வுடன் ஒரு வருடம் வரை பேட்டரி நீடிக்கும் திறன் கொண்ட, இந்தியாவின் முதல் மேக்-இன்-இந்தியா ஸ்மார்ட் லாக்கர் மற்றும் கதவுப் பூட்டான ‘வி சேஃப்’ (V SAFE)-ஐ உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டம் கைரேகை, மொபைல் செயலி கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது சாவிகளுக்கான தேவையை நீக்குவதுடன், திருட்டு எச்சரிக்கைகள் மற்றும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்பையும் வழங்குகிறது.

விக்னேஷ் வடிவேல்

வி சேஃப் (V SAFE)-ஐ மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் முழுமையான சங்கிலியே. அசெம்பிள் செய்வதில் தொடங்கி பேக்கேஜிங் மற்றும் லாகிஸ்டிக்ஸ் வரை எனப் பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவை மெட்ரோ சிட்டியை தாண்டி, சிறு நகரங்களிலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.

“தஞ்சாவூர் பெரிய கோயிலைப் போன்ற உலகத் தரமான அதிசயங்களை நம்மால் உருவாக்க முடியும் என்பதை நமது முன்னோர்கள் ஏற்கெனவே உலகுக்குக் காட்டியுள்ளனர். ‘வி சேஃப்’ மூலம், நமது சொந்த மண்ணில் இருந்து உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம், அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்” என்கிறார் இதன் நிறுவனர் வடிவேல்.

வி சேஃப் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்தும், ஐஐடி டெல்லியின் தொழில்நுட்ப அமைப்பிடம் இருந்தும் நிதியுதவியைப் பெற்றுள்ளது. மேலும், டையர் 2 சிட்டியில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக, பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பாராட்டு கடிதத்தையும் பெற்றுள்ளது.

கரோதிமம் (Karotimam):

மின்னணுக் கழிவுகள் எனப்படும் எலெட்ரானிக் வேஸ்ட் (Electronic Waste) உலகில் மிக வேகமாக வளரும் மாசுபாடுகளில் ஒன்று. இதற்குக் காரணம், வழக்கமான சர்க்யூட் போர்டுகள் பெரும்பாலும் பெட்ரோலிய அடிப்படையிலான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இவை பல நூற்றாண்டுகளாக மண்ணில் அழியாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் விதமாக, சென்னையைச் சேர்ந்த ‘கரோதிமம் இன்னோவேஷன்ஸ்’ ஸ்டார்ட்அப் நிறுவனம், டாக்டர் சித்ரா லேகா, சனல் மோகனன் ஆகியோரால் 2023-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், அச்சிடப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ்களுக்கான (Printed Electronics) மக்க செய்வதற்கான அடித்தளங்களை உருவாக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் FR-4 மற்றும் காப்டன் போன்ற பொருட்களை மாற்றி, மக்கும் தன்மை கொண்ட அச்சிடக்கூடிய அடித்தளங்களைப் பயன்படுத்துகிறது. இவை இன்க்ஜெட், ஸ்கிரீன் மற்றும் 3D பிரிண்டிங் முறைகளுக்கு ஏற்றவை. இவை குறைந்த செலவில் ஹீட்டர்கள், சென்சார்கள் மற்றும் எரிசக்தி சாதனங்களை உருவாக்க உதவுகின்றன. இதனால், செயல்திறனில் சமரசம் செய்யாமல், உண்மையான சுழற்சித் தன்மையை இவை வழங்குகின்றன.

“உயர்ந்த செயல்திறன் கொண்ட சாதனங்களை மக்கும் பொருட்களில் அச்சிட முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து வருகிறோம். இதன் மூலம், கண்டுபிடிப்புகள் இனி சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்கிறோம்” என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான சித்ர லேகா.

தனது கண்டுபிடிப்புகளுக்காக கரோதிமம் பல விருதுகளை வென்றுள்ளது. அவற்றில் FICCI-ன் வள திறன் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் விருது, ரோல்ஸ் ராய்ஸ் இன்னோவேஷன் சேலஞ்ச் 2024 மற்றும் பாஷ் இன்னோவேஷன் சேலஞ்ச் 2024 ஆகியவை அடங்கும். இந்திய காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ள இந்நிறுவனம் அதன் அடித்தளப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. மேலும், மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட ஹீட்டர்களை பேக்கேஜிங் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.

StartupTN:

டோமேன் (TowMan), டோக்கல் (Tocal), ஃபார்மரெட் (Farmerette), வி சேஃப் (V SAFE) மற்றும் கரோதிமம் (Karotimam) ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசின் StartupTN-ன் TANSEED திட்டம் மிகவும் முக்கியமான ஆரம்பக்கட்ட நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.

StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.

சேவைக்கான கண்டுபிடிப்பு:

மேலே சொன்ன இந்த ஐந்து ஸ்டார்ட்அப்களும் ஒரு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. அது “நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வணிகங்கள், மக்கள் நிஜமாகவே எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்கின்றன” என்பதே. ஸ்டார்ட்அப் கதைகளில் இது பெரும்பாலும் மறக்கப்படுகிறது. சாலையில் சிக்கலை சந்திக்கும் வாகன ஓட்டிகள், அதிக வேலைப்பளு உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள், கவனிக்கப்படாத சுகாதாரத் தேவைகள், போதிய பாதுகாப்பு இல்லாத வீடுகள் மற்றும் பெருகிவரும் மின்னணுக் கழிவுகள் எனப் பல சவால்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், நிலைத்து நிற்கக்கூடிய வணிகங்களையும் உருவாக்கி வருகின்றனர்.

தமிழ்நாடு 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகள் ஒரு புதுமையை வெளிப்படுத்துகின்றன. அதாவது, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்துடன் ஒரு தெளிவான நோக்கத்துடன் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள். இந்த நிறுவனங்கள் அனைத்தும், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலுக்கான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதுடன், அன்றாடம் சந்திக்கும் சவாலுக்கும் தீர்வு கண்டு மக்களுக்குச் சேவை செய்கிறது என்பதை நிரூபிக்கின்றன.


Edited by Induja Raghunathan