
தற்சார்பு என்பது இந்தியாவின் பெரும் கனவுகளில் ஒன்று. தற்சார்பு தன்னை ஆரவாரத்துடன் அறிவித்துக் கொள்வதில்லை. அது, விவசாயி ஒருவரின் வயலில், விதைகளைத் துல்லியமாகப் பயிரிடுவதில் வெளிப்படுகிறது. உற்பத்தி ஆலையில், லேசர் குழாய்களை இறக்குமதி செய்யாமல் உள்ளூரிலேயே பொருத்துவதில் காணப்படுகிறது. ஒரு ஆம்புலன்ஸில், தொலைதூரப் பகுதிகளிலும்கூடத் தடங்கல் இல்லாமல் செயல்படும் தகவல் தொடர்புக் கருவிகளில் தெரிகிறது. சமையலறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, சிறந்த சத்தான உணவுகளைப் பயன்படுத்துவதில் அது காட்டப்படுகிறது.
இவை வெறும் பெரும் அறிவிப்புகள் அல்ல. மாறாக, இவை நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளாகும். வெளிநாட்டுச் சார்பு நிலையை போக்க முடியும், உள்ளூரில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு இடைவெளிகளை நிரப்பலாம் என்று கண்டறிந்த நிறுவனர்களால் இவை உருவாக்கப்பட்டன.
‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-ல் நான்கு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த புரட்சியை வெளிப்படுத்தின. அவை ரோவர் இந்தியா (Rower India), கான் லேசர் டெக் (Caan Laser Tech), பரவாணி பிசினஸ் சொல்யூஷன்ஸ் (Paravani Business Solutions) மற்றும் நியூட்ரி ஃபுட்ஸீ இந்தியா (Nutri Foodzee India).

துல்லிய விதைப்புக்கு வித்திடும் Rower India
இந்திய விவசாயிகள் விதைகளை வீணடிக்கிறார்கள். இது அவர்கள் விருப்பப்பட்டுச் செய்வது அல்ல, மாறாகச் சரியான மாற்று வழிகள் இல்லாததே இதற்குக் காரணம். பாரம்பரியமான முறையில் விதைகளைத் தூவிப் பயிரிடுவதால், தேவைக்கு அதிகமாக விதைகள் பயன்படுத்தப்படுகின்றன, செடிகள் சமமாக முளைப்பதில்லை, மேலும் திறமையான வேலையாட்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. அந்த வேலையாட்கள் பற்றாக்குறையும் இப்போது விவசாயத்தில் தீராத பிரச்சினையாக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, ஒவ்வொரு பருவத்திலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ’ரோவர் இந்தியா’ நிறுவனம், 2019-ம் ஆண்டில் ஜான் ஜார்ஜ், ஜெயகுரு மற்றும் லோகுபிரசாத் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம் மிகவும் எளிமையானது: துல்லியமான விதைப்பு இயந்திரங்களை உருவாக்குவது. இந்த இயந்திரங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற பயிர்கள் என இரண்டிற்கும், விவசாயிகள் பயன்படுத்தும் விதையின் அளவைக் குறைக்கவும், வேலைக்கு ஆட்களைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், நேரத்தை சேமிக்கவும் உதவுகின்றன.
மூன்று இன்ஜினியரிங் கல்லூரி நண்பர்கள் சேர்ந்து, வெறும் ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கிய இந்த முயற்சி, தற்போது ரூ.80 லட்சம் வருவாயாக வளர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இது 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் விதைச் செலவுகள் மற்றும் கூலிச் செலவுகளைச் சேமிக்க உதவியுள்ளது.
இந்தத் தாக்கம் பொருளாதாரத்தை மட்டும் தாண்டிய ஒன்று. துல்லியமான விதைப்பு முறையானது, பயிர்களின் வளர்ச்சியைச் சீராக்குகிறது, இடு பொருட்கள் (உரம், மருந்து போன்றவை) வீணாவதைக் குறைக்கிறது, இதனால் விவசாயம் நீண்ட காலத்திற்கு நிலையானதாக மாறுகிறது. மேலும், ரோவர் இந்தியா இந்த இயந்திரங்களை விற்பனைக்கும், வாடகைக்கும் வழங்குவதால், முதலிலேயே பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாத விவசாயிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை எளிதில் கிடைக்கச் செய்துள்ளது.
“இந்திய விவசாயச் சமூகத்திற்கு சிறந்த தொழில்நுட்பங்களை மிகக் குறைந்த விலையில் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய அளவில் நம்மால் கொண்டு சேர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறுகிறார் அதன் நிறுவனர் ஜார்ஜ்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் டி.எஸ்.டி. நிதி பிரயாஸ் (DST NIDHI PRAYAS) மற்றும் தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான டேன்சீட் 6.0 (TANSEED 6.0) ஆகியவற்றின் ஆதரவுடன், ரோவர் இந்தியா நிறுவனம் இப்போது ஒரு படி மேலே செல்கிறது. அவர்கள் கையால் இயக்கும் இயந்திரங்களிலிருந்து மாறி, டிராக்டரில் பொருத்தப்படும் பெரிய இயந்திரங்களை உருவாக்கும் பணியில் உள்ளனர். இதன் நோக்கம், இந்திய விவசாயிகளுக்குக் குறைந்த விலையை உறுதி செய்யும் அதே வேளையில், உலகளாவிய விவசாய சமூகத்திற்கும் சேவை செய்வதாகும்.
இந்தியாவின் லேசர் முதுகெலும்பாக Caan Laser Tech
இந்தியாவில் லேசர் துறையானது நீண்ட காலமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் CO2 (கார்பன் டை ஆக்சைடு) லேசர் குழாய்களைச் சார்ந்தே இருந்தது. இதன் விளைவு என்னவென்றால்: அவை வந்து சேர அதிக நாட்கள் ஆகும், போக்குவரத்துச் செலவு அதிகம், பழுது நீக்கும் வசதி கிடையாது, மேலும் மிக முக்கியமான உற்பத்திப் பகுதிக்கு முற்றிலுமாக வெளிநாட்டு சப்ளையர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை.
இந்தச் சவாலைத் தகர்க்கும் விதமாக, திருப்பூரைச் சேர்ந்த ’கான் லேசர் டெக்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டில் நாகராஜ் என்., அஸ்வத் சி.என். மற்றும் டாக்டர் சித்ரா தேவி என். ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 10.6 நானோமீட்டர் அலைநீளத்தில் செயல்படும், இந்தியாவிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்படும் CO2 லேசர் குழாய்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்தச் சார்புநிலையை உடைக்கிறது.
இந்த கண்டுபிடிப்பில் லேசர் குழாய் உருவாக்கத்தில், உயர் மின்னழுத்த பிளாஸ்மாவை நிலைப்படுத்தும் தொழில்நுட்பமும், பாதி - தானியங்கி துல்லியமான அரைத்தல் முறையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த லேசர் குழாய்கள் நீண்ட ஆயுட்காலத்தையும், பழுது நீக்க வசதியுள்ள வடிவமைப்பையும் கொண்டுள்ளன.
முதல் உற்பத்திச் சுழற்சியிலேயே, கான் நிறுவனம் 100% உள்நாட்டு இணைப்பையும் மற்றும் 70% பாகங்களை உள்நாட்டிலேயே தயாரித்தல் ஆகிய இலக்குகளை எட்டியது. மேலும், 100W, 130W, 150W மற்றும் 200W திறன் கொண்ட குழாய்களை, சீரான மின் வெளியீட்டுடன் வெற்றிகரமாக உருவாக்கிச் சோதித்துள்ளது.
“நாங்கள் வெறுமனே லேசர் குழாய்களை மட்டும் உருவாக்கவில்லை. துல்லியமான உற்பத்தியில் இந்தியாவைத் தற்சார்புள்ள நாடாக மாற்றும் ஒரு முழு அமைப்பையே நாங்கள் உருவாக்குகிறோம். நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு குழாயும், புதிய கண்டுபிடிப்புக்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையேயான தூரத்தைக் குறைக்கிறது,” என்கிறார் அதன் நிறுவனர் அஸ்வத்.
இந்த நிறுவனம் ஒரு திறமையான உற்பத்தி அமைப்பை நிறுவியுள்ளது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இன்ஜினியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும், ஒளியியல் மற்றும் துல்லியமான பாகங்கள் பொருத்துதல் ஆகியவற்றில் செயல்முறைப் பயிற்சிக்காக உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
கோயம்புத்தூர், தமிழ்நாடு முழுவதும், இந்தியாவில் உள்ள முக்கியத் தொழில் மையங்கள் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் விநியோகக் கூட்டணிகளை அமைத்துள்ள கான் நிறுவனம், 12 மாதங்களுக்குள் ஒரு மாதத்திற்கு 200 லேசர் குழாய்கள் என்ற உற்பத்தித் திறனை எட்ட இலக்கு வைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இதை மாதத்திற்கு 500 குழாய்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
தொழில் செய்தி இதழான ‘தி இண்டஸ்ட்ரி அவுட்லுக்’ மேகசின் (The Industry Outlook Magazine), இவர்களை இந்தியாவின் சிறந்த 10 ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்ப உற்பத்தியாளர்களில் ஒருவராக அங்கீகரித்துள்ளது. இது அவர்களின் தொழில்நுட்பச் சாதனையை உறுதிப்படுத்துகிறது.
NIDHI PRAYAS மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN)-இன் TANSEED 6.0 ஆகியவற்றின் ஆதரவுடன், கான் லேசர் டெக் நிறுவனம் செமி ஆட்டோமேட்டட் உற்பத்திப் பிரிவை அமைத்து வருகிறது. அவர்களின் இலக்கு என்னவென்றால், 2028-ஆம் ஆண்டுக்குள் தயாரிப்பின் பாகங்களில் 95 சதவிகிதத்தை இந்தியாவிலேயே தயாரிப்பது மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏற்றுமதிச் சந்தைகளுக்குத் தயாராவது ஆகும்.
அவசரகால தொடர்பு அமைப்பில் அசத்தும் Paravani Business Solutions
தாமதமான தகவல், உயிரைக் கொல்லும். அவசர மருத்துவச் சிகிச்சையில், ஆம்புலன்ஸ் புறப்படுவதற்கும், மருத்துவமனை தயாராக இருப்பதற்கும் இடையேயான காலதாமதம், உயிருக்கும் இறப்புக்கும் உள்ள வித்தியாசம். ஆனாலும், பெரும்பாலான ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும், கடினமான நிலப்பரப்புகளிலும், பேரிடர்களின்போதும் நம்பகத்தன்மையுடன் செயல்படக்கூடிய, தானியங்கி தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் இல்லை.
சென்னையைச் சேர்ந்த ’பரவாணி பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம், 2022-ம் ஆண்டில் விமலன் சதாசிவம் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனைகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, உயர் தொழில்நுட்பத் தகவல் தொடர்பு அமைப்புகள் மூலம் இந்நிறுவனம் இந்தக் குறைபாட்டைச் சரிசெய்கிறது. இதன் உண்மையான சிறப்பு என்னவென்றால், இது தொலைதூர மற்றும் கடினமான சூழல்களில் கூட நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது. மேலும், OTP, வரைபடங்கள் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் உட்பட முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, வெளிநாட்டுச் சார்பு இல்லாமல் இயங்குகிறது.
இந்த அமைப்பு ஆய்வகச் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது, இது தனியார் ஆம்புலன்ஸ் சேவை வழங்குநர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து, களத்தில் பயன்படுத்தும் நிலைக்கு முன்னேறியுள்ளது. இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சுகாதாரப் பராமரிப்பில் தகவல் தொடர்பு அமைப்புகள் கிடைக்காமலோ அல்லது நம்பகத்தன்மையற்று இருப்பதாலோ தற்போது இழக்கப்படும் உயிர்களில் 40 முதல் 60 சதவிகிதத்தைக் காப்பாற்ற முடியும் என்று பரவாணி நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் (UNDP), STPI-இன் 'லீப் அஹெட் எடிஷன் II' மற்றும் 'கல்பதரு' திட்டங்கள், மற்றும் C-DoT-இன் 'சமர்த் திட்டத் தொகுதி I' ஆகியவற்றின் அங்கீகாரம் ஆகியவை இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப அணுகுமுறையின் தரத்தை உறுதிப்படுத்துகிறது. ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் டேன்சீட் 6.0 (TANSEED 6.0) ஆதரவு மற்றும் பல வழிகாட்டிகளின் உதவியுடன், இந்தத் தீர்வைப் பயன்படுத்துவதற்கான உத்தியை வகுத்து, பரவாணி நிறுவனம் முதலில் தமிழ்நாடு முழுவதும் அவசர சிகிச்சை உள்கட்டமைப்பை மாற்றுவதற்குத் தயாராகிறது. அதன் பிறகு நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
“உருவாக்கப்படும் எந்தவொரு அமைப்பும் அல்லது தீர்வும், அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், சமூக ரீதியாக விரும்பத்தக்கதாகவும், தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமானதாகவும், பொருளாதார ரீதியாக நிலைத்து நிற்கக் கூடியதாகவும், நிர்வாக ரீதியாகச் செயல்படுத்தக் கூடியதாகவும், சட்ட ரீதியாக நீடிக்கக் கூடியதாகவும், உணர்ச்சி ரீதியாக மக்கள் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடியதாகவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்,” என பரவாணி நிறுவனர் வகுத்த இந்த வழிகாட்டும் கொள்கை, ஒரு முழுமையான தீர்வை உருவாக்குவதில் உள்ள சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.
பாரம்பரிய ஊட்டத்துக்கு உறுதுணையாக Nutri Foodzee India
வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை மக்களைப் பாரம்பரிய இந்திய ஊட்டச்சத்துக்களில் இருந்து பிரித்துவிட்டது. தற்போதுள்ள உணவுத் தேர்வுகள் ஒன்று அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவை அல்லது உண்மையான இந்தியப் பொருட்கள் இல்லாதவை. அத்துடன், அவை நவீன உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த நியூட்ரி ஃபுட்ஸீ இந்தியா நிறுவனத்தை ராஜேஸ்வரி விஜய் ஆதித்தன் என்பவர் தொடங்கினார். இந்த நிறுவனம், இந்த இடைவெளியைக் குறைக்க ஒரு பாலமாகச் செயல்படுகிறது. அவர்கள் உள்ளூரிலேயே கிடைக்கும் தினை, முருங்கை, பாரம்பரிய அரிசி போன்ற சிறந்த சத்துள்ள உணவுகளைக் கொண்டு, ஊட்டச்சத்து சமநிலை கொண்ட, உடனடியாகச் சாப்பிடத் தயாராக இருக்கும் இந்திய உணவுகளையும், சிற்றுண்டிகளையும் தயாரிக்கிறார்கள். இவற்றில் பதப்படுத்தும் பொருட்கள் இல்லை, மைதா இல்லை, சர்க்கரை இல்லை, அனைத்தும் உண்மையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே, 15-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொருட்களை விற்று சாதனை புரிந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களில் 35 சதவீதம் பேர் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்குகிறார்கள். உற்பத்திக்கு அப்பால், நியூட்ரி ஃபுட்ஸீ நிறுவனம் 75-க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமாகப் பெண்களுக்கும் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பணிகளுக்காக, பெண்களைத் தலைமையாகக் கொண்ட சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது 300-க்கும் அதிகமான சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பொருட்களைக் கொள்முதல் செய்வதால், அவர்களுக்கு ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க உதவுகிறது.
“நீங்கள் எப்படி இருந்திருக்க வேண்டுமோ, அப்படி மாறுவதற்கு ஒருபோதும் தாமதம் இல்லை,” என்று இதன் நிறுவனர் ஆதித்தன் கூறுகிறார். இந்த வரிகள், தொழில்முனைவு மற்றும் சமூக நோக்கம் ஆகிய இரண்டும் இணைந்த அவரது பயணத்தைப் பிரதிபலிக்கின்றன.
இந்தியாவில் உள்ள நம்பிக்கைக்குரிய சிறந்த 10 உணவு ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாக FICCI அமைப்பால் 2024-ல் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம், மற்றும் பிராந்திய ஸ்டார்ட்அப் விருதுகள் 2023-இல் சிறந்த நீடித்த உணவுப் புத்தாக்கத்திற்கான விருதையும் வென்றுள்ளது. நியூட்ரி ஃபுட்ஸீ நிறுவனம், ஸ்டார்ட்அப் தமிழ்நாட்டின் டேன்சீட் 6.0 ஆதரவுடன் பொறுப்புடன் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் நீடித்த நிலைத்தன்மை, சமூக மேம்பாடு மற்றும் பண்பாட்டுத் தனித்தன்மை ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
StartupTN
ரோவர் இந்தியா, கான் லேசர் டெக், பரவாணி பிசினஸ் சொல்யூஷன்ஸ், மற்றும் நியூட்ரி ஃபுட்ஸீ ஆகிய நான்கு நிறுவனங்களுக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால், தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு'-இன் (StartupTN) 'டான்சீட்' (TANSEED) திட்டம்தான். டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.
StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.
வளர்ச்சிக்குத் தற்சார்பே அடித்தளம்
இந்த நான்கு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் நிரூபிப்பது என்னவென்றால், இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதும் தற்சார்பும் வெறும் கொள்கை முடிவுகள் அல்ல. வெளிநாட்டுச் சார்பு நிலையை கண்டறிந்து, அதற்கு உள்நாட்டிலேயே மாற்று வழிகளை உருவாக்கி, நிஜமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையே தங்கள் தொழிலின் அடிப்படையாகக் கொள்ளும்போது, இவை நடைமுறையில் சாத்தியமாகுகின்றன. துல்லியமான விவசாயம் முதல் லேசர் உற்பத்தி, அவசர மருத்துவத் தகவல் தொடர்பு மற்றும் பாரம்பரிய ஊட்டச்சத்து வரை தமிழகத்தின் தொழில்முனைவோர் இறக்குமதியைக் குறைத்து, அதே நேரத்தில் உள்ளூரிலேயே மதிப்பை உருவாக்கும் தீர்வுகளை வடிவமைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு 2032-ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 20 ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறும்போது, இந்த நிறுவனங்கள் ஒரு உண்மையை நிரூபிக்கின்றன. அவை வளர்ச்சிக்கான வலிமையான அடித்தளம் என்பது, இந்தியாவுக்குத் தேவையானது எதையோ, அதை உருவாக்குவதிலும்; இந்தியா எதைத் தயாரிக்கிறதோ, அதை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதிலும் மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் தான் உள்ளது. தற்சார்பு என்பது, தொழில்நுட்பங்களும் முக்கியப் பொருட்களும் எப்போதும் வெளிநாடுகளில் இருந்துதான் வரவேண்டும் என்ற நிலையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிறுவனர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது.
Edited by Induja Raghunathan