பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளை சீர்திருத்தும் 4 தமிழக ஸ்டார்ட்அப்கள்!

05:00 PM Oct 08, 2025 | YS TEAM TAMIL

தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் வளர்ச்சிப் பயணம் எப்போதுமே நிஜமான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆழமாக வேரூன்றி இருந்துள்ளது. 2032-க்குள் உலகின் முதல் 20 உலகளாவிய ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக ஆக வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், புதிய தலைமுறை நிறுவனர்கள் தொழில்நுட்பத்தையும் நோக்கத்தையும் இணைக்கும் இடத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் செழிக்கின்றன என்பதை நிரூபித்து வருகின்றனர்.

More News :

தொழில்துறை பாதுகாப்பு, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு, நிதிச் சேர்க்கை மற்றும் குழந்தை மேம்பாடு எனப் பல துறைகளில், இந்தப் புதிய முயற்சிகள் தமிழ்நாட்டின் தொழில்முனைவோர் சக்தி எவ்வாறு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-ல் இந்தப் புதிய வளர்ச்சி வேகம் மைய இடத்தைப் பிடிக்கிறது. Quantic Tech, Diagno Intelligent Systems, IppoPay, மற்றும் Kathaipetti போன்ற ஸ்டார்ட்அப்'கள் இந்த மாநாட்டில் கவனம் பெறுகின்றன. இந்த ஒவ்வொரு நிறுவனமும் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அதே நேரத்தில் வளர்ச்சியடையக்கூடிய, நீடித்த வணிகங்களையும் உருவாக்கி வருகின்றன.

தொழில்துறை பாதுகாப்பில் குவான்டிக் டெக் (Quantic Tech):

தொழில்துறை விபத்துகளைத் தடுக்க முடியும், இருந்தும் அவை தொடர்ந்து உயிர்களைப் பலிகொள்கின்றன. இதனால் தொழில்துறை செயல்பாடுகள் தடைபடுகின்றன. இந்தச் சவாலைச் சமாளிக்க, சென்னையைச் சேர்ந்த ’குவாண்டிக் டெக் அனாலிசிஸ்’ (Quantic Tech)

நிறுவனம் களமிறங்கியுள்ளது. 2021-ல் செந்தில் குமார் மற்றும் ஸ்ராவணி ராவ் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் வீடியோ பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்துகிறது. இது, ஏற்கெனவே உள்ள சிசிடிவி அமைப்புகளை புத்திசாலித்தனமான பாதுகாப்பு அமைப்புகளாக மாற்றுகிறது.

இந்தத் தளமானது ரசாயன ஆலைகள், உருக்காலைகள், கட்டுமான இடங்கள் மற்றும் எண்ணெய் - எரிவாயு வசதிகள் போன்ற தொழில் துறை சூழல்களை ரியல்டைமில் கண்காணிக்கிறது. இதில், பாதுகாப்பு விதிகள் மீறப்படுதல், தரக் குறைபாடுகள் மற்றும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிகிறது. நடைமுறையில் உள்ள மேற்பார்வையிடும் வழக்கமான அமைப்புகளைப் போலல்லாமல், குவான்டிக்கின் சாஃப்ட்வேர் ஆட்டோமேட்டிக் அலர்ட், உடனடியாகச் செயல்பட உதவும் தகவல்களையும் வழங்குகிறது. இது பாதுகாப்பை எளிதில் விரிவாக்கக்கூடியதாகவும் மற்றும் குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடியதாகவும் ஆக்குகிறது.

“குவான்டிக்கில், AI என்பது வெறும் ஆட்டோமேஷனைப் பற்றியது மட்டுமல்ல, உயிர்களைக் காப்பாற்றுவது, அபாயங்களைக் குறைப்பது மற்றும் தொழில்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியது,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அதன் நிறுவனர் குமார்.

குவான்டிக் நிறுவனத்தின் தாக்கம் தெளிவாகவும், கண்கூடாகத் தெரியக்கூடியதாகவும் உள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற இந்தியாவின் அரசுப் பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து தனியாக ஒரு ஒப்பந்தத்தைப் பெற்ற ஒரே இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் குவான்டிக். தற்போது, இது மூன்று ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. உலக எல்பிஜி சங்கம் மற்றும் TiE தமிழ்நாடு ஆகியவற்றின் அங்கீகாரம், குவான்டிக் நிறுவனத்தின் அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது.

அதேசமயம், இந்நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா வரை விரிவடைவது அதன் உலகளாவிய லட்சியத்தைக் காட்டுகிறது. 100-க்கும் மேற்பட்ட தொழில்துறை ஆலைகளுக்கு அதன் சேவையை விரிவுபடுத்தவும், ஓமனில் ஒரு தனி நிறுவனத்தை நிறுவவும் திட்டமிட்டுள்ள குவான்டிக், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தொழில்துறை நுண்ணறிவுக்கு தமிழ்நாட்டை ஒரு மையமாக நிலைநிறுத்தி வருகிறது.

எலும்பு ஆரோக்கிய பரிசோதனையில் ’டயாக்னோ’ (Diagno)

ஆஸ்டியோபோரோடிக் எனப்படும் எலும்பு வலுவிழப்பதால் ஏற்படும் முறிவுகள் (Osteoporotic fractures) ஆண்டுதோறும் 89 லட்சம் பேருக்கு ஏற்படுகிறது. மேலும், 2050-க்குள் இதில் பாதியளவுக்கு மேல் ஆசியாவில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கண்டறிய உதவும் மிகச் சிறந்த கருவியான DXA எலும்பு அடர்த்திமானியான டென்சிடோமீட்டர்ஸ் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒரு மில்லியன் மக்களுக்கு 12 முதல் 24 DXA அலகுகள் இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு வெறும் 0.26 DXA அலகுகள் மட்டுமே உள்ளன.

ஆஸ்டியோபோரோடிக் எனப்படும் எலும்பு வலுவிழப்பால் ஏற்படும் முறிவுகளால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு நபர் இறக்கிறார். இப்படியான நிலையில் பெரும்பாலான மக்களுக்கு ஆரம்பத்திலேயே இந்த நோயைக் கண்டறிவது என்பது எட்டாக்கனியாக உள்ளது.

இந்த நிலையை மாற்றும் முயற்சியில், சென்னையைச் சேர்ந்த ’டயாக்னோ இன்டெலிஜென்ட் சிஸ்டெம்ஸ்’ (Diagno Intelligent Systems) நிறுவனம் செயல்படுகிறது. டாக்டர். ஃபெலிக்ஸ் எனிகோ மற்றும் டாக்டர். அன்பரசன் மரிய மைக்கேல் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், ஐஓஸ்டியோபோரோஸ் ஸ்கிரீன் (iOsteoporos Screen) என்ற ஒரு புதிய சாப்ஃட்வேர் கருவியை கொண்டு வந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு கருவி. இது வழக்கமாக எடுக்கப்படும் மார்பக எக்ஸ்ரேக்களை மாற்றியமைத்து, குறைந்த செலவில், அதிக அளவில் எலும்பு முறிவு அபாயத்தை கண்டறிய உதவும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

காப்புரிமை பெற்ற ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தத் தளம் செயல்படுகிறது. இது கிளவிகல் ரேடியோகிராமெட்ரி, எலும்பின் அம்சங்கள் மற்றும் அதன் அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்கிறது. இந்த முறையின் மூலம், எலும்பு முறிவு அபாயத்தை 30 முதல் 50 சதவீதம் முன்னதாகவே கண்டறிய முடிகிறது. ஒரு சோதனைக்கு வெறும் 100 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இது DXA பரிசோதனையின் செலவுடன் ஒப்பிடுகையில் 95 சதவீதம் குறைவான செலவாகும்.

இந்தக் கருவியை மொபைல் செயலி, கிளவுட் சாஸ் மற்றும் டெஸ்க்டாப் மூலம் பயன்படுத்த முடியும். இது PACS மற்றும் பிற மருத்துவமனை அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், சுகாதாரப் பணியாளர்களும் எந்த ஒரு சிறப்புப் பயிற்சியும் இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம். இதற்கான PCT விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க IDS தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. டையர்-1 மருத்துவமனைகளில் CDSCO சோதனை உரிமத்தின் கீழ் இதன் செயல்பாடு சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

“வழக்கமாக நாம் எடுக்கும் மார்பு எக்ஸ்ரேக்களில் பயன்படுத்தப்படாத ஆற்றல் இருக்கிறது. அட்வான்ஸ் ஏஐ-யை பயன்படுத்தி, அந்த ஆற்றலை நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம். இதன் மூலம், எலும்பு முறிவு அபாயத்தைக் கண்டறியும் சோதனையை குறைந்த செலவில், எளிதில் விரிவாக்கக்கூடியதாகவும் மற்றும் உயிர் காக்கும் கருவியாகவும் மாற்றுகிறோம்,” என்கிறார் இதன் நிறுவனர் மருத்துவர் எனிகோ.

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 கோடிக்கும் அதிகமான வழக்கமான மார்பு எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுவதால், இந்தத் தளத்தின் மூலம் சென்றடையக்கூடிய மக்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் உள்ளது. டயாக்னோ நிறுவனம் தற்போது இரண்டு மருத்துவமனைகளில் சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

மேலும், இரண்டு மருத்துவமனைகளில் சோதனைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. BIRAC மற்றும் StartupTN அமைப்புகளிடம் இருந்து மொத்தம் ரூ.1.23 கோடி மதிப்புள்ள மானியங்கள் மற்றும் நிதியுதவியைப் பெற்றுள்ளது. Mayo Clinic Platform Accelerate Program-க்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிறுவனம், முழுமையான சட்ட அங்கீகாரத்தையும் மற்றும் உலகளாவிய பயன்பாட்டையும் நோக்கி வேகமாகச் செல்கிறது.

சிறு வணிகர்களுக்கான IppoPay-வின் நிதிப் புரட்சி

தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறச் சந்தைகளில் உள்ள லட்சக்கணக்கான சிறு வணிகர்களுக்கு, முறையான கடன் வசதி என்பது நீண்ட காலமாக ஒரு தடையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் விதமாக, சென்னையைச் சேர்ந்த ’இப்போபே’ (IppoPay) டெக்னாலஜிஸ் நிறுவனம்’ செயல்படுகிறது. 2020-ல் மோகன் மற்றும் ஜெய்குமார் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கடன் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் கடன் வழங்கும் தளத்தை உருவாக்கியுள்ளது. இது குறிப்பாக, போதிய வசதிகள் கிடைக்காத சிறு வணிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளமானது யுபிஐ பணப்பரிமாற்றங்களைச் செய்ய உதவுகிறது. அதே நேரத்தில், வணிகர்களின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி, உடனடியாக, எந்த ஒரு பிணையமும் இல்லாமல் கடன் வசதியையும் வழங்குகிறது.

Ippopay நிறுவனர் கே மோகன்

இப்போபே-யை மற்ற பேமண்ட் நிறுவனங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் வெளிப்படைத்தன்மை ஆகும். மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை, ஆவணங்கள் இல்லாமை மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை வணிகர்கள் தாங்கள் செலுத்தும் மற்றும் பெறும் பேமெண்ட்களை என்ன என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உறுதி செய்கிறது. இந்த தளத்தில் புதிய வணிகரைச் சேர்ப்பது முதல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நினைவூட்டல்கள் வரை, முழுச் செயல்பாடும் உள்ளூர் மொழியில் உள்ளது. மேலும், இது சிறு வணிகர்களின் தினசரி வேலைச் சூழலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இப்போபே-யின் கதை சாத்தியக்கூறுகளைப் பற்றியது. நாங்கள் மிகச் சின்னஞ்சிறிய வணிகர்களுடன் தொடங்கினோம். அவர்களுடைய நம்பிக்கை எங்களை முன்னோக்கிக் கொண்டு சென்றுள்ளது. இப்போது எங்கள் இலக்கு பெரியதாக உள்ளது. ஆனால் எங்கள் வாக்குறுதி மாறாது. அது மரியாதை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நம்பிக்கையுடன் சேவை செய்யும் நிதித் தீர்வுகளை உருவாக்குவதே எங்கள் இலக்கு,” என்று இதன் நிறுவனர் மோகன் கூறுகிறார்.

கடன் வழங்கும் வசதியை தொடங்கி வெறும் 24 மாதங்களில், இப்போபே நிறுவனம் ரூ.120 கோடி கடன்களை விநியோகித்துள்ளது. இதன் ஆண்டுச் செயல்பாட்டு மதிப்பு ரூ.250 கோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5,00,000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களை இந்த நிறுவனம் சென்றடைந்துள்ளது. மேலும், 100 சதவீத டிஜிட்டல் வசூல் என்ற இலக்கை எட்டியுள்ளது. Global Business Conclave 2025-ல், நிதிச் சேவைகளுக்கான ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் என்ற அங்கீகாரமும், ஆனந்த விகடனின் தமிழ்நாட்டின் சிறந்த 10 இளைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்ததும் இப்போபே-வின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

தற்போது, இப்போபே நிறுவனம் தனது யுபிஐ மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர் தளத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் தளமானது தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன், முதலில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இப்போபே திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான குரல் வழிக் கதைகள்: ’கதைபெட்டி’

ஆர்வத்தை அதிகமாக தூண்டும் கன்டென்ட்கள் நிறைந்த இந்தக் காலத்தில், குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற, கலாச்சாரத்தில் வேரூன்றிய கதை சொல்லும் உள்ளடக்கத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக உள்ளது. இந்தச் சவாலைச் சமாளிக்க, சென்னையைச் சேர்ந்த ’கதைப்பெட்டி’ (Kathaipetti) நிறுவனம் தொடங்கப்பட்டது. நித்யா கணபதி சுப்ரமணியன், ஹரிகிருஷ்ணன் பிரகாசம் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து இந்நிறுவனத்தை நிறுவினர். ஆரம்பத்தில், இது ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மென்மையான மாற்றைக் கண்டறியும் தேடலாகத் தொடங்கியது. பின்னர், இது 3 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான, ஏஐ மூலம் இயங்கும், தனிப்பயனாக்கப்பட்ட கதைகளாக வளர்ந்துள்ளது.

இந்தத் தளம் குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர்களுக்குப் பழகிய குரல்களையே கதைகள் சொல்ல அனுமதிக்கிறது. அது பெற்றோரின் குரலாக இருக்கலாம், தாத்தா பாட்டியின் குரலாக அல்லது குழந்தையின் சொந்தக் குரலாகக் கூட இருக்கலாம். கதையில் வரும் கதாபாத்திரங்களையும் அவர்கள் விரும்பியபடி மாற்றியமைக்கலாம். மேலும், இந்தக் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்ற, பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் செயலி கதைகளை அவர்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றியமைக்கிறது. இதன் விளைவாக, இது பாதுகாப்பான அதேநேரம் சினிமாத்தனம் இல்லாத வகையில் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கும் கதைத் துணையாக அமைகிறது. இது குழந்தையின் தினசரி வழக்கத்தில் இயல்பாகப் பொருந்துகிறது.

ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, கதைப்பெட்டி ஆப், 18,000 பயனர்களை கடந்தது. தற்போது iOS மற்றும் Android ஆகிய இரண்டு தளங்களிலும் பயன்பாட்டில் உள்ள கதைப்பெட்டி செயலிக்கு, ஏழு நாடுகளில் பயனர்கள் உள்ளனர். இது, கலாச்சாரத்தில் வேரூன்றிய கல்வியுடன் கூடிய பொழுதுபோக்கு தேடும் குடும்பங்களிடையே அதன் வலுவான ஈர்ப்பைக் காட்டுகிறது.

இந்தக் குழு தற்போது, உள்ளூர் கதாநாயகர்கள் மற்றும் பண்டிகைகளை மையமாகக் கொண்ட கதைகள் மூலம் தமிழ் மொழி கதை சொல்லும் அம்சத்தை இன்னும் ஆழமாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதன் பின்னரே, மற்ற இந்திய மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்களின் எதிர்காலத் திட்டம் தனிப்பயனாக்கம், பாதுகாப்பு மற்றும் தரமான உள்ளடக்கத்தை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் இறுதி இலக்கு, குழந்தைகள் அதிகமாக கற்பனை செய்யவும், சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும், மற்றும் அவர்கள் விரும்பும் குரல்களுடன் நெருக்கமாக உணரவும் உதவும் ஒரு மகிழ்ச்சியான, தனிப்பட்ட கதைத் துணையை உருவாக்குவதே ஆகும்.

StartupTN:

மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மாறுபட்ட வெற்றிக் கதைகளை இணைக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால், தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு'-இன் (StartupTN) 'டான்சீட்' (TANSEED) திட்டம்தான். டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.

StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.

மக்களுக்குத் தேவையானதைக் கட்டமைத்தல்

இந்த நான்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒரு எளிய உண்மையை நிரூபிக்கின்றன. நீண்ட காலம் நிலைத்து நிற்கும் புதுமைகள் , மக்களுக்குத் தேவையான சிக்கல்களுக்குத் தீர்வு காண்கின்றன. பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மரணங்களைத் தடுப்பது, முறிவுகளை முன்கூட்டியே கண்டறிவது, சிறு வணிகர்களுக்கு மரியாதையான கடன் வழங்குவது மற்றும் குழந்தைகளுக்கான உணர்வுப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குவது என தமிழ்நாட்டின் நிறுவனர்கள், சந்தைக்குத் தேவைப்படும் அதே அளவு மக்களுக்கும் சேவை செய்யும் வணிகங்களை உருவாக்கி வருகின்றனர்.

தமிழ்நாடு 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகள் வெறும் வளர்ச்சியின் அளவீடுகளை விட மேலான ஒன்றைக் குறிக்கின்றன. அது, மக்களின் உணர்வுகளை மையமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, மற்றும் குறிப்பிட்ட நோக்கத்துடன் விரிவாக்கப்படும் புதுமைகளின் மாதிரி வடிவத்தை கோடிட்டுக் காட்டுகின்றன. மொத்தத்தில், இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சிஸ்டத்தை விரிவடைய வைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் தொழில்முனைவுத் துறையின் எதிர்காலத்தை வரையறுக்கும் வகையில் வளர்ந்து வருகிறது என்பதையும் நிரூபிக்கின்றன.


Edited by Induja Raghunathan