Foxconn நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்ததா? - நடந்தது என்ன?

06:00 PM Oct 17, 2025 | Chitra Ramaraj

வீதிக்கு ஒரு பொறியியல் கல்லூரி என பெருகி விட்ட நிலையில், பொறியியல் படித்த அனைவருக்குமே துறை சார்ந்த வேலை என்பது எட்டாக்கனியாகத்தான் உள்ளது. இந்நிலையில், பிரபல மின்னணு நிறுவனமான Foxconn, தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்கிறது, இதன்மூலம் பொறியியல் துறை சார்ந்தவர்கள் உட்பட சுமார் 14,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்ற தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது சமூகவலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பதிவு, வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

More News :

ஆனால், அந்த மகிழ்ச்சியை சில நாட்களுக்குக்கூட நீட்டிக்க விடாமல், இந்த முதலீடு குறித்த அறிவிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான விவாதம் நேற்று சட்டசபையில் எழுந்தது. அப்போது பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, ‘ஃபாக்ஸ்கான் முதலீடு உண்மையானது மற்றும் உறுதியானது,” என விளக்கமளித்தார்.

கடந்த சில நாட்களாக இந்த ஃபாக்ஸ்கான் முதலீடு குறித்து அடுத்தடுத்து வெளியாகி வரும் முரண்பட்ட தகவல்கள் மக்களைக் குழப்பி வருகிறது. இதில் யார் சொல்வது உண்மை, எது பொய்யான தகவல் என்ற குழப்பம் அவர்களுக்கு நீட்டித்து வருகிறது.

இதோ அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், ஃபாக்ஸ்கான் முதலீடு விவகாரத்தில் இதுவரை நடந்தது என்னென்ன, எங்கே குழப்பம் ஏற்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொல்ளலாம்.

அரசின் முதலீடு அறிவிப்பும், Foxconn மறுப்பும்

தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய தலைவர் ராபர்ட் வூ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் (அக்டோபர் 13ஆம் தேதி), தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூகவலைதளப் பக்கத்தில்,

“ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், அதன் மூலம் 14,000 உயர்மட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்,” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரவேற்று பதிவிட்டிருந்தார்.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பால், வேலை தேடி வரும் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சியை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க விடாமல், இந்த முதலீட்டு அறிவிப்பை மறுத்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்தது ஃபாக்ஸ்கான். அதில்,

‘ஃபாக்ஸ்கானின் புதிய இந்தியப் பிரதிநிதியான ராபர்ட் வூ மற்றும் அவரது குழு, தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது, புதிய முதலீடுகள் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை,’ என அறிவித்தது. ஆனால், அதன்கூடவே, ‘இது புதிய ஒப்பந்தமல்ல..’ என்ற ஒரு குழப்பமான தகவலையும் அது வெளியிட்டது.

ஃபாக்ஸ்கானின் இந்த மறுப்பு அறிவிப்பு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களை ஒருபுறம் ஏமாற்றமடையச் செய்ததென்றால், மற்றொருபுறம் இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் இந்த விவகாரத்தை மேலும் விவாதப் பொருளாக்கியது.

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த ஃபாக்ஸ்கான் இந்தியப் பிரதிநி ராபர்ட் வூ

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்

தமிழக சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டமான நேற்று (அக்டோபர் 16ம் தேதி) இந்த ஃபாக்ஸ்கான் விவகாரமும் எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு நூறுசதவீதம் உண்மையான மற்றும் உறுதியானது’ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்,

“ஃபாக்ஸ்கான் என்பது பல நிறுவனங்களை உள்ளடக்கியது. அதில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஊடகங்கள் ஒரு நிறுவனத்திடம் மட்டும் கேள்வி கேட்டு, அது இந்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளதாக செய்தி போட்டுள்ளது,” என்று சட்டசபையில் விளக்கம் அளித்தார் அமைச்சர்.

மேலும் பேசிய அவர், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது 100 சதவீதம் உறுதியானது. பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு 14,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை, என்றார்.

தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சை பற்றி பேசிய டி.ஆர்.பி.ராஜா,

”அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனம் எப்படி ஆந்திராவில் தனது புதிய முதலீட்டை வெளிப்படையாக அறிவித்தது, ஆனால் ஃபாக்ஸ்கான் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், கூகுள் சீனாவில் இல்லை. ஆனால் ஃபாக்ஸ்கான் அமெரிக்காவிலும் உள்ளது, இந்தியாவிலும் உள்ளது, சீனாவிலும் உள்ளது. எனவே, இந்த முதலீட்டு அறிவிப்பை அவர்களால் வெளிப்படையாக அறிவிக்க முடியவில்லை. இதனை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும், இவை ஜியோ-பொலிட்டிகல் விவகாரத்தை உள்ளடக்கியது,” என்றார்.

அவர்கள் அளித்த விளக்கத்தில்கூட, புதிய முதலீடு செய்யப்படவில்லை என்றுதான் ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளதே தவிர, முதலீடே செய்யப்படவில்லை என அது மறுக்கவில்லை. இதன்மூலமே இந்த ஒப்பந்தம் உண்மையானது எனத் தெரிகிறது. இது இனி வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும். இன்னும் ஒரு சில மாதங்களில் நாங்களே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை காத்திருங்கள், என இவ்வாறாக உறுதிபடத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

அமைச்சரின் இந்த விளக்கம் மூலம், ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்கிறதா இல்லையா என்ற குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது.

சட்டசபையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

ரகசிய ஒப்பந்தம்?

புதிய முதலீடுகளை ஈர்க்க மற்ற மாநிலங்களும் போட்டி போட்டு வரும் நிலையில், வீண் மனக்கசப்புகளைத் தவிர்க்கவே, ஃபாக்ஸ்கான் இந்த முதலீட்டு விசயத்தை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

எது எப்படியோ இந்த முதலீடுகள் குறித்து ஃபாக்ஸ்கான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில்தான் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதோடு, அப்போதுதான் வேலைக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளும் உண்மையான மகிழ்ச்சியை அடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.