
தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழல் என்பது வெறுமனே மற்ற மாநிலங்களோடு ஒன்றாக சேர்ந்து பயணிக்கவில்லை. மற்ற மாநிலங்களை முன்னணியில் இருந்து வழி நடத்துகிறது. முன்பு, உற்பத்தித் துறைக்கு மட்டுமே பெயர்பெற்றிருந்த தமிழகம், இப்போது இந்தியாவின் பலதரப்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது. இங்குள்ள ஸ்டார்ட்அப்கள் விண்வெளித் தொழில்நுட்பம், சமூக நலன், விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த மறுசுழற்சிப் பொருளாதாரம் எனப் பல துறைகளில் பரவி நிற்கின்றன.
அரசின் ஆதரவான கொள்கைகள், முதலீட்டாளர்களின் ஆர்வம், மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோரின் வருகை ஆகியவை தான் இந்த மாற்றத்திற்குக் காரணம். இந்த மாற்றம் வெறும் எண்ணிக்கையால் மட்டும் அளவிடப்படுவதில்லை, மாறாக மக்களின் வாழ்க்கையிலும், தொழில்துறைகளிலும் ஏற்படுத்தும் முன்னேற்றத்தால் அளவிடப்படுகிறது.
இந்த வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் உள்ளது. வெறும் மூன்றே ஆண்டுகளில், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (DPIIT) பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ல் 2,300 என்ற எண்ணிக்கையில் இருந்தது, அதுவே 2025-ல் 12,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த எழுச்சிக்குப் பின்னால் ஒரு தொலைநோக்குப் பார்வை உள்ளது. துணிச்சல் மிக்க, நடைமுறைக்கு உகந்த, மற்றும் இலக்குடன் செயல்படும் யோசனைகளின் துணைகொண்டு, 2032-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் முதல் 20 ஸ்டார்ட்அப் மையங்களில் தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதே அந்த தொலைநோக்கு பார்வை.
இந்த வேகமான வளர்ச்சி, ‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-க்கான களத்தை அமைக்க வைத்துள்ளது. இந்த மாநாட்டில், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்குப் புதிய இலக்கணம் வகுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து ஸ்டார்ட்அப்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
செயற்கைக்கோள்களின் ஆயுளை அதிகரிப்பது, இந்தியக் குழந்தைப் பருவத்தை பிரதிபலிக்கும் பொம்மைகளை உருவாக்குவது, ஸ்மார்ட் விவசாயக் கருவிகளை உருவாக்குவது, உள்நாட்டிலேயே தள்ளுவிசை அமைப்புகளை (propulsion systems) உருவாக்குவது மற்றும் கழிவுகளை உயிரிப் பொருட்களாக மாற்றுவது போன்ற பல்வேறு செயல்களை இந்த ஸ்டார்ட்அப்கள் செய்கின்றன.
இந்த ஸ்டார்ட்அப்கள், புதுமை கண்டுபிடிப்புகள் லாபகரமாகவும் அதேசமயம் குறிக்கோளுடனும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, பெரிய அளவிலான வளர்ச்சி, நீடித்த நிலைத்தன்மையுடன் இணையும்போது தொழில்துறைகள் எவ்வாறு புதுப்பிக்கப்பட முடியும் என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன.

ஆர்பிட்ஏஐடி ஏரோஸ்பேஸ் (OrbitAID Aerospace)
பெரும்பாலும் செயற்கைக்கோள்களின் எரிபொருள் தீர்ந்துபோகும்போதோ அல்லது சிறிய பழுதுகள் ஏற்படும்போதோ செயற்கைக்கோள்கள் ஆயுள்காலத்தை விட முன்கூட்டியே விடைபெறும். செயற்கைக்கோளின் பெரும்பாலான பொருட்கள் சிதைந்துவிடும் விண்வெளியில் குப்பைகளாக மாறும். இந்தச் சவாலைச் சமாளிக்க, 2021-ம் ஆண்டு சக்திகுமார் இராமச்சந்திரன் என்பவரால் சென்னையில் தொடங்கப்பட்டதுதான் ’ஆர்பிட்எய்ட் ஏரோஸ்பேஸ்’ (OrbitAID Aerospace) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்.
இந்த நிறுவனம், விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்துள்ளது. இவர்களின் SIDRP என்ற புதிய டாக்கிங் எனப்படும் இணைப்புத் தொழில்நுட்பம் எந்த நிறுவனத்தின் செயற்கைக்கோளாக இருந்தாலும் அவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், விண்வெளிக் குப்பைகளை குறைக்கவும் உதவுகிறது.

OrbitAID Aerospace குழுவினர்
இந்த நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவின் முதல் வர்த்தக ரீதியிலான டாக்கிங் மற்றும் எரிபொருள் நிரப்பும் சோதனைக் கூண்டை உருவாக்கியுள்ளது. மேலும், இவர்களின் SIDRP தொழில்நுட்பத்தை இரண்டு பூஜ்ஜிய ஈர்ப்பு விசை விமானப் பயணங்களில் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர்.
"விண்வெளி என்பது ஒரே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் இடமாக இருக்க முடியாது; நாங்கள் செயற்கைக்கோள்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சொத்துக்களாக இல்லாமல், தேவைப்படும்போது சேவை செய்யக்கூடிய அடிப்படை அமைப்புகளாக மாற்றி வருகிறோம்," என்று ஆர்பிட்எய்ட் நிறுவனர் இராமச்சந்திரன் தங்களது கனவை விவரித்துள்ளார்.
StartupTN நிதியுதவியாக ரூ.5 லட்சம் மற்றும் ஃபோர்ப்ஸ் டி குளோபலிஸ்ட் டிஜிஇஎம்எஸ் 2024-ல் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுள்ள ஆர்பிட்எய்ட் நிறுவனம், இப்போது இந்தியாவின் முதல் விண்வெளிச் சேவை இயக்கத்திற்காக தயாராகி வருகிறது.
தி குட் டால் (The Good Doll):
இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான பொம்மைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, பிளாஸ்டிக்கால் ஆனவை, மேலும், இந்தியப் பண்பாட்டுடன் தொடர்பில்லாதவை. இந்தக் கதையை மாற்றியமைக்கிறது ஊட்டியைச் சேர்ந்த சுனிதா சுஹாஸ் மற்றும் சுஹாஸ் ராமேகௌடா தொடங்கிய 'தி குட் டால்' (The Good Doll) என்ற நிறுவனம்.

The Good Doll நிறுவனர்கள் சுனிதா சுஹாஸ் மற்றும் சுஹாஸ் ராமேகௌடா
இவர்கள் நைலா என்ற 10 வயது இந்தியக் கதாபாத்திரத்தை, அவளுடைய எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துடன் உருவாக்கியுள்ளனர். நீலகிரியில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடிப் பெண்களால், பழைய துணிகளை மறுசுழற்சி செய்து இந்தப் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் பொம்மைகள் இந்திய மக்களின் நிறங்கள், உடைகள், மற்றும் அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன.
தி குட் டால் நிறுவனத்தின் இந்த துணிகர முயற்சி 95-க்கும் அதிகமான பெண்களைக் கொண்ட உற்பத்தியாளர் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. இவர்களில் பலர் இப்போது தங்கள் குடும்ப வருமானத்தில் பாதிக்கும் மேல் இந்த வேலையின் மூலமே ஈட்டுகின்றனர்.
"நைலா என்ற இந்த பொம்மை, குழந்தைகளின் சொந்தக் கதைகளும் முக்கியம் என்பதை அவர்களுக்குக் காட்டுகிறது. அதே சமயம் இந்த பொம்மையை செய்யும் பெண்களுக்கு நிலையான வருமானத்தையும், மரியாதையும் கிடைக்கிறது," என்று நிறுவனர் சுஹாஸ் பெருமை தெரிவிக்கிறார்.
வருடத்திற்கு 1.2 கோடி ரூபாய் வருமானம், மற்றும் Rainmatter, TNIFMC, Villgro போன்ற போன்ற முதலீட்டாளர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியதன் மூலம், 'தி குட் டால்' நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், இவர்கள் 10,000 சதுர அடி பரப்பளவில் ஒரு தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தியாவுக்கான முதல் உலகளாவிய பொம்மைக் காப்புரிமை உரிமையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை 'தி குட் டால்' அமைத்து வருகிறது.
ஹார்வ்டெக் (HARVTECH):
சிறு விவசாயிகள் பெரும்பாலும் அதிக சாகுபடி செலவு, பழைய இயந்திரங்கள், மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கான குறைந்த வாய்ப்பு ஆகிய சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க, சென்னையில் ஸ்ரீனிவாசன், முகமது இம்ரான், மற்றும் அனூப் நிஷாந்த் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனமே ஹார்வ்டெக். இந்த நிறுவனம், உரப் பயன்பாட்டைக் குறைக்கும், விவசாயத்தை நீடித்த நிலையான நடைமுறைகளை நோக்கி நகர்த்தும் ரோபோடிக் கருவிகளை உருவாக்குகிறது. இந்த கருவிகள் செலவுகளைக் குறைப்பதையும், அதிக விளைச்சலையும் தருவது சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் இணைப்பதாக கூறும் ஸ்ரீனிவாசன்,
"உலகிற்கு முதலில் விவசாயத்தைக் கற்றுக் கொடுத்த மண்ணில் இருந்து வந்தவர்கள் நாங்கள். பழங்கால அறிவுடன் மேம்பட்ட இயந்திரங்களை இணைத்து, விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்," என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு அரசின் TANSEED 4.0 திட்டத்தின் ஆதரவு, ஐ.ஐ.டி மெட்ராஸின் 'கார்பன் ஜீரோ சேலஞ்ச்' போட்டியில் அங்கீகாரம், மற்றும் BIRAC BIG மானியம் ஆகியவற்றைப் பெற்றுள்ள ஹார்வ்டெக் நிறுவனம், இப்போது தனது விவசாயம் 4.0 (Agri 4.0) இயந்திரங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து அதனை பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தயாராகி வருகிறது.
ட்ரீம் ஏரோ ஸ்பேஸ் (DreamAerospace):
இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உந்துவிசை (propulsion) மற்றும் டாக்கிங் சிஸ்டத்தை சார்ந்தே இருந்தன. இந்த நிலையை மாற்றும் வகையில், ஹரி கிருஷ்ணன் கே.ஜே. மற்றும் ரோகித் எஸ். ஆகியோரால் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் ட்ரீம்ஏரோஸ்பேஸ் டெக்னாலஜீஸ். இந்த நிறுவனம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இதில், HAN எனப்படும் ஹைட்ராக்ஸிலமோனியம் நைட்ரேட்டை அடிப்படையாகக் கொண்ட பசுமை எரிபொருட்கள், சிறிய உந்துவிசைகள் மற்றும் ரோபோடிக் டாக்கிங் தடங்கள் ஆகியவை அடங்கும்.

DreamAerospace நிறுவனர்கள் ஹரி கிருஷ்ணன் கே.ஜே. மற்றும் ரோகித் எஸ்.
ட்ரீம் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் கியூப்ஹூட் என்ற உந்துவிசை சாதனம் மற்றும் ATOM என்ற உந்துவிசை ஆகியவை ஏற்கெனவே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்காக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டி.ஆர்.டி.ஓ (DRDO) மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ட்ரீம் ஏரோ ஸ்பேஸ் பணிபுரிந்து வருகிறது.
"இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தின் எதிர்காலம், உள்நாட்டுப் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் நீடித்த நிலையான தொழில்நுட்பங்களில்தான் உள்ளது. நாங்கள் அந்தப் பாதையைத்தான் உருவாக்கி வருகிறோம்," என்கிறார் இதன் நிறுவனர் கிருஷ்ணன்.
Inflection Point Ventures நிறுவனத்திடமிருந்து 3 கோடி ரூபாயும் மற்றும் GAIL இந்தியா நிறுவனத்திடமிருந்து 2 கோடி ரூபாயும் நிதி திரட்டியுள்ள ட்ரீம் ஏரோ ஸ்பேஸ் விண்வெளி உந்துவிசைத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி இடத்தில் நிலைநிறுத்தி வருகிறது.
டிக்ளட்டர் சொலுயூஷன்ஸ் (Declutter Solutions)
நீது ஜோசப் என்பவருக்குக் கழிவு என்பது ஒரு சுமையல்ல. மாறாக அது தவறான இடத்தில் வைக்கப்பட்ட ஒரு வளம் என்பதே அவரின் எண்ணம். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜோசப்பின் 'டிக்ளட்டர் சொல்யூஷன்ஸ்' (Declutter Solutions) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், மீன் வளத் தொழிலில் கிடைக்கும் துணைப் பொருட்களைப் பயன்படுத்தி, 'அக்வாகோல்' (Aquacol) என்ற கடல் சார்ந்த கொலாஜனை உற்பத்தி செய்கிறது. இந்த அக்வாகோல், ஒவ்வாமை ஏற்படுத்தாதது, உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கூட. இந்த நிறுவனம், ஒரு சிறப்பு வாய்ந்த 'NADES' பிரித்தெடுக்கும் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. இதனால், எஞ்சிய கழிவுகளை உரக் குச்சிகள் மற்றும் மீன் தீவனமாக மாற்றி கழிவுகள் இல்லாத உலகிற்கு முன்னோடியாக விளங்குகிறது.
இப்படியான பயோ மெட்டீரியல் பொருட்களை தயாரிப்பதைத் தவிர, டீக்ளட்டர் நிறுவனம் பல பணிகளைச் செய்கிறது. குறிப்பாக, கழிவுகளைச் சேகரிக்கும் சிறிய மையங்களை அமைக்கிறது. மேலும் கழிவு குறித்த கணக்கெடுப்பு மற்றும் பயிற்சி அளிக்கிறது. மேலும் மீனவ மற்றும் கழிவுகளை சேகரிக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வாதாரங்களை உருவாக்குகிறது. அந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இதன் நிறுவனர் ஜோசப்,
"கழிவு என்பது தவறான இடத்தில் இருக்கும் ஒரு மூலப்பொருள் மட்டுமே; அதன் பயணத்தை மாற்றி அமைப்பதே எங்கள் வேலை," என்கிறார்.
BIRAC அமைப்பின் ஆதரவு, பல விருதுகள் மற்றும் தமிழக அரசின் TANSEED 5.0 திட்டத்தின் உதவி ஆகியவற்றைப் பெற்றுள்ள டிக்ளட்டர் நிறுவனம், இப்போது கழிவிலிருந்து மதிப்பு கூட்டியே பொருட்களை உருவாக்கும் புதுமையான தயாரிப்புகளை சர்வதேசச் சந்தைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
StartupTN:
மேலே குறிப்பிட்ட ஐந்து வெவ்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மாறுபட்ட வெற்றிக் கதைகளை இணைக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால், தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு'-இன் (StartupTN) 'டான்சீட்' (TANSEED) திட்டம்தான். டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது. தமிழக அரசின் இந்த அரசின் ஆதரவு, தொழில்முனைவோரின் ஆர்வத்தைத் தடுக்காமல், புதுமைக் கண்டுபிடிப்புகளை எப்படி வேகமாக வளர்க்க முடியும் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களின் கதையின் பலம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லை. அதனையும் தாண்டி தொழில்துறையுடன் பண்பாட்டையும், நீடித்த நிலைத்தன்மையுடன் பெரிய அளவிலான வளர்ச்சியையும் எப்படிச் சமன் செய்கிறது என்பதில் தான் தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களின் பலம் உள்ளது.
ஆராய்ச்சி மையங்களில் இருந்து சந்தை வரை, இங்குள்ள தொழில்முனைவோர்கள் சந்தைகளுக்குத் தேவைப்படுவதையும், மக்களுக்கும் சேவை செய்யும் வகையிலும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து, குறிக்கோள் நிறைந்த ஒரு வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை வகுக்கிறார்கள். இந்தத் திட்டம், இன்று வளரும் ஒரு ஸ்டார்ட்அப் சூழலாக இருக்கும் தமிழகத்தை, நாளை உலகளவில் அறியப்பட்ட ஒரு புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாற்றி அமைக்கும் என்பதில் ஐயமில்லை.
Edited by Induja Raghunathan