+

PM E-DRIVE திட்டத்தின் கீழ் மின்வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க புதிய நெறிமுறைகள் வெளியீடு!

அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 100 % மானியத்துடன் மின்வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 72,300 பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது. மொத்தம் ரூ.10,900 கோடி மதிப்புள்ள PM E-DRIVE திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்கள், குடியிருப்பு வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் சார்ஜிங் வசதிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்படும் மையங்களுக்கு Upstream கட்டமைப்பு மற்றும் EV சார்ஜிங் உபகரணங்கள் இரண்டிற்கும் 100% மானியம் வழங்கப்படும்.

EV charging

அரசு அலுவலங்கள் தவிர மற்ற இடங்களில் அமைக்கப்படும் மின்வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மானியங்கள் 2 விதங்களில் பிரிக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் (AAI), அரசுச் சொந்த எரிபொருள் நிலையங்கள், அரசுப் பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், மாநகராட்சியின் பார்க்கிங் மையங்கள், பொதுத் துறை துறைமுகங்கள், NHAI / மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டோல் பிளாசாக்கள் போன்றவற்றில் அமைக்கப்படும் சார்ஜிங் மையங்களுக்கு 80% upstream உள்கட்டமைப்பு மானியமாகவும் சார்ஜிங் உபகரணங்களில் 70% மானியமும் வழங்க விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தளங்களான தெருக்கள், ஷாப்பிங் மால்கள், வர்த்தக வளாகங்கள், நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள் அனைத்திலும் Upstream செலவில் 80% மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி ஸ்வாப்பிங் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கு 80% மானியம் கிடைக்கும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பிராந்திய EV தேவைகளை ஒருங்கிணைப்பதற்காக நோடல் முகவர்களை நியமிக்க உள்ளது. அவர்கள் முன்னுரிமை உள்ள இடங்களை அடையாளம் கண்டு முன்மொழிவுகளை உருவாக்கி உள்துறை இணையதளத்தின் மூலம் கனரக தொழில்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இந்த திட்டத்திற்கான செயலாக்க முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.

நிதி வழங்கும் முறை

திருப்பிச் செலுத்தல், செயல்திறன் மற்றும் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், மின்வாகன சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கான மானியம் இரு கட்டங்களாக (Two-tranche system) வழங்கப்படும்.

10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், மெட்ரோ இணைப்புள்ள செயற்கை நகரங்கள், மாநில தலைநகரங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடர்த்தியான பகுதிகள், இரயில்நிலையங்கள், விமான நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள் என இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. தொடர் அமலாக்கம் இந்தியாவின் EV மாற்றத்தில் பெரிய முன்னேற்றத்தை வழங்கும் என அரசு நம்புகிறது.

More News :
facebook twitter