+

ஆன்லைன் சூதாட்ட கேம்களுக்கு தடை, தண்டனை விதிக்கும் மசோதா - விளையாட்டுக் கூட்டமைப்புகள் எதிர்ப்பு!

சூதாட்டம் போல பணத்தை வைத்து விளையாடப்படும் ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 1 கோடி ரூபாய் அபராதம் என கடுமையான தண்டனைகள் வழங்கவும் மசோதா வழிவகுக்கிறது.

பணத்தை பெட்டிங் செய்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யும் புதிய மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் பணத்தை இழந்து பாதிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அவர்களை பாதுகாப்பதோடு, இந்த சேவை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த உதவும்.

நாடாளுமன்றம்

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

மத்திய அரசு முன்வைத்துள்ள இந்த "ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா" பல கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

  • ஆன்லைன் பண விளையாட்டுகளை வழங்கும் அல்லது விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து கடுமையான தண்டனை விதிக்கப்படலாம்.

  • விதிகளை மீறி இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

  • இந்த விளையாட்டுகளுக்காக நிதி பரிமாற்றங்களில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

  • ஆன்லைன் பண விளையாட்டுகளை விளையாடுபவர்களைக் குற்றவாளிகளாக இந்த மசோதா கருதுவதில்லை. மாறாக, அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறது. குற்றத்தைத் தூண்டுபவர்கள் மற்றும் அதை ஊக்குவிப்பவர்களை மையப்படுத்தி அவர்கள் மீதே மசோதா அதிக கவனம் செலுத்துகிறது.

  • ஆன்லைன் பண விளையாட்டுகள் தொடர்பான விதிமீறல்களில் மீண்டும் மீண்டும் தண்டனை பெறும் நபர்களுக்கு 3-5 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.


பண விளையாட்டுகள் vs. மற்ற ஆன்லைன் விளையாட்டுகள்

இந்த மசோதா, ஆன்லைனில் பணத்தை இழக்கச் செய்யும் விளையாட்டுகளுக்கும் e-sports மற்றும் ஆன்லைனில் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக விளையாடும் விளையாட்டுகளுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.

"ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா" பணம் அல்லது பந்தயம் கட்டி விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே தடை செய்கிறது. திறன் வளர்க்கும் விளையாட்டுகள், வாய்ப்பு அல்லது இரண்டும் சார்ந்ததாக விளையாட்டுகுள் மற்றும் e-sports இவற்றில் அடங்காது. e-sports-க்கு முறையான அங்கீகாரம் அளிப்பதன் மூலம், இந்தியா சர்வதேச அளவில் போட்டி நிறைந்த கேமிங் உலகில் நுழைய முடியும். இது இந்திய ஸ்டார்ட்அப் சூழலுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும், என்றும் மசோதா குறிப்பிடுகிறது.

ஆன்லைன் கேமிங் தளங்களை மேற்பார்வையிட ஒரு சட்டப்பூர்வ ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மசோதா முன்மொழிந்துள்ளது. இந்த ஆணையம், ஒரு குறிப்பிட்ட விளையாட்டு 'ஆன்லைன் பண விளையாட்டு' தானா என்பதை விசாரித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

Online gaming rules

மசோதாவின் நோக்கம்

இந்தியாவில் கேமிங் துறையின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பு தெளிவில்லாமல் உள்ளது. ஆன்லைன் பண விளையாட்டுகளால் ஏற்படும் நிதி இழப்புகள், மனநலப் பிரச்சினைகள், போதை பழக்கம், மனச்சோர்வு, தற்கொலை போன்ற பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துக்குப் பல புகார்கள் வந்துள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் பணமோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சிக்கல்களைக் களைவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

எதிர்ப்பு

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்கிழமையன்று ஆன்லைன் கேமிங் ஒழங்குமுறை மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா ஆன்லைன் கேமிங் துறைக்கு ஒரு "மரண அடி" என்று இந்திய ஆன்லைன் கேமிங் கூட்டமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளன. இந்த மசோதா குறித்து விவாதிக்க ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு, இ-கேமிங் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஃபெண்டசி ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு ஆகியவை அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அமைச்சர் அஸ்வினி

அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

இந்தியாவில் ஆன்லைன் ஸ்கில் கேமிங் துறையானது ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடையது. இது ஆண்டுக்கு ரூ.31,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதுடன், ரூ.20,000 கோடிக்கும் மேல் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அரசாங்கத்துக்கு செலுத்துகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கோடிக்கணக்கான பயனர்கள் சட்டவிரோத மற்றும் வெளிநாட்டு சூதாட்ட வலைத்தளங்களுக்குச் செல்ல நேரிடும். இதனால், அரசாங்கத்துக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த வலைத்தளங்கள் எந்தவிதமான நுகர்வோர் பாதுகாப்பும் இல்லாமல் செயல்படுகின்றன எனவே மசோதா குறித்து ஆலோசிக்க ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேமிங் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

facebook twitter