
கணவன் வேலைக்குச் செல்ல, மனைவி வீட்டைப் பார்த்துக் கொள்வார்கள் என்றிருந்த நம் முந்தைய பல தலைமுறைகளின் வாழ்க்கையை இப்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனென்றால், நாளுக்கு நாள் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் அளவிற்கு, சம்பளம் அந்தளவுக்கு உயர்வதில்லை. இதனால் வீட்டை நிர்வகிக்க, குழந்தைகளின் படிப்பு செலவிற்கு, மருத்துவச் செலவிற்கு என கணவன், மனைவி இருவருமே பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்ய உழைக்க வேண்டியதாக இருக்கிறது.
இப்படியான சூழலில் வெளியில் வேலையை அல்லது தொழிலை கணவன், மனைவி என இருவருமே சரிசமமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில், வீட்டு நிர்வாகத்தையும் அவர்கள் இருவரும் சரிசமமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமாகி விடுகிறது. இதனால் வீட்டையும் கவனித்து, வேலையையும் பார்த்து என மக்கள் பெரும், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இந்தச் சுமையைக் குறைக்க வீட்டில் உதவிக்கு வேலையாட்களை வைத்துக் கொள்ளும் நிலை, தற்போது நடுத்தரக் குடும்பங்களில்கூட அதிகரித்து வருகிறது. வேலையாட்களுக்கு தரும் சம்பளத்தோடு ஒப்பிடுகையில், தங்களுடைய நேரத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்.
ஆனால், இவர்களிலும் ஒரு படி மேலே போய், தன் வீட்டையும், தன் பெற்றோரையும் 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை நியமித்து, இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறார் கிரேலேப்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அமன் கோயல்.
இதில் என்ன அதிசயம், இது சாதாரண விசயம்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அமன் கோயல் இணையத்தில் பேசுபொருள் ஆனதற்கு காரணம், அவர் தனது வீட்டை நிர்வகிக்கும் பணிப்பெண்ணை, ஹோம் மேனேஜர் என்ற பதவியில் அமர்த்தி, அவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தருவதுதான்.

ஹவுஸ் மேனேஜர்
இந்தியாவின் பிரபல ஏஐ நிறுவனங்களுள் ஒன்றான 'கிரேலேப்ஸ் ஏஐ' ( greylabs ai) தலைமை நிர்வாக அதிகாரி அமன் கோயல். இவரும், இவரது மனைவி ஹர்சிதாவும் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கிரேலேப்ஸ் ஏஐ நிறுவனத்தை கட்டி எழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுச் செலவுகள் குறித்தப் பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அமன் வெளியிட்டிருந்தார். அதில், அவர் தன் சொந்த வீட்டை நிர்வகிப்பதற்காக மட்டும் ஹவுஸ்மேனேஜர் என்ற பதவியைக் குறிப்பிட்டு, அவருக்கு மாதச் சம்பளம் ஒரு லட்சம் எனக் கூறியிருந்தது நெட்டிசன்களை அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
எனவே, இது குறித்து அமன் கோயல் விளக்கமாக கமெண்ட்களைப் பதிவிட்டு வருகிறார். அதில்,
‘நானும் என் மனைவியும் எங்களது நிறுவனத்தை முன்னேற்றுவதில் பிஸியாக இருப்பதால், எங்களது வீட்டு நிர்வாகத்தையும், வயதான என் பெற்றோரையும் கவனித்துக் கொள்ள ஒரு நல்ல திறமையான நபர் தேவைப்பட்டது. எனவே, அவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தந்து எங்களுடனேயே தங்க வைத்துள்ளோம்,’ எனத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் மனைவியுடன் அமன் கோயல்
விமர்சனங்களுக்கு பதிலடி
அமனின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. வீட்டுப் பணியாளருக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்பதெல்லாம் ரொம்பவே அதிகம் என்றும், எங்களின் முதலீட்டுப் பணத்தை இப்படியெல்லாம் வீணாக செலவு செய்கிறீர்களா என்றும் பலர் தங்களது ஆதங்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதற்குப் பதிலடி தரும் விதமாக அமன் வெளியிட்டுள்ள பதிவில்,
“நான் என்னுடைய சொந்தப் பணத்தில், அதாவது என்னுடைய முந்தைய கம்பெனியை விற்பனை செய்த பணத்தில் இருந்துதான் இந்த சம்பளத்தைக் கொடுத்து வருகிறேன்.”
”நானும் என் மனைவியும் எங்களது நிறுவன வேலைகள் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். என் பெற்றோர்கள் இருவரும் மூத்த குடிமக்கள் என்பதால், அவர்களுக்கும் சுமை கொடுக்க விரும்பவில்லை. எனவே, வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள இப்படி ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறோம். எங்களது ஹவுஸ் மேனேஜர் முன்பு முன்னணி ஹோட்டல் நிர்வாகத்தில் முக்கியப் பதவியில் இருந்தவர். நல்ல கல்வித்தகுதி உடையவர், அதோடு வீட்டு நிர்வாகப் பணிகளை சரியான முறையில் கவனித்துக் கொள்ள முன் அனுபவம் உள்ளவர். வீட்டிலேயே தங்கி இருந்து அனைத்து வேலைகளையும் அவர் பார்த்துக் கொள்கிறார்.
வீட்டு உபயோகப் பொருட்கள் ஏதேனும் ரிப்பேரானால், அதைச் சரி செய்யும் வேலையில் இருந்து, வீட்டுக்கு பலசரக்குப் பொருட்கள் வாங்கி வருவது வரை அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்கிறார். உணவுத் திட்டமிடல், உடைகள் பராமரிப்பு, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வீட்டு நிர்வாகப் பணிகளையும் அவரே கவனித்துக் கொள்கிறார். மேலும், வீட்டு வேலைகளைச் செய்யும் பிற பணியாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களையும் அவரே நிர்வகிக்கிறார். அதோடு என் வயதான பெற்றோரையும் எவ்வித சிரமமும் இல்லாமல் கவனித்துக் கொள்கிறார்.
இப்படி ஒரு பொறுப்பான நபர் வீட்டைக் கவனித்துக் கொள்வதால், நானும் என் மனைவியும் எந்தவித சிரமமும் இல்லாமல் அலுவலக பணிகளை நிர்வகிக்க முடிகிறது. ஒரு லட்ச ரூபாயை விட, எங்களுக்கு எங்கள் மன நிம்மதிதான் முக்கியம்,” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய ஐடியாவிற்கு வரவேற்பு
இப்படி ஒரு பணியாளரை எப்படி அமன் கண்டுபிடித்தார் என்ற கேள்விக்கு, ‘Pinch.co.in என்ற தளத்தின் மூலம் இந்தப் பணியாளரை நியமித்துள்ளதாகவும், அவர் ஒரு படித்த பெண் என்றும், அவர் முன்பு ஒரு ஹோட்டல் நிறுவனத்தில் ஆபரேஷன்ஸ் ஹெட் (Operations Head) ஆகப் பணியாற்றியவர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூடவே, ‘இந்த ஐடியாவை வைத்து யாராவது புதிய தொழில் ஆரம்பித்தால் கூட பல லட்சம் லாபம் பார்க்கலாம்’ என தொழில் தொடங்க யோசனையும் தெரிவித்துள்ளார் அமன். மேலும், தங்களது பணியாளருக்கு திடீர் விடுப்பு தேவைப்பட்டால், அதையும் Pinch நிறுவனமே கவனித்து கொள்ளும் என்றும், அது மட்டுமின்றி, தற்காலிக ஓட்டுநர், சமையல்காரர் போன்றோரைக்கூட அவர்களே ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹவுஸ் மானேஜர் என்ற அமனின் இந்த புதிய யோசனைக்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், ‘பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல.. உங்கள் வாழ்க்கையையும் நீங்கள் வாழ வேண்டும். ஒரு நல்ல மகனாக, கணவனாக, குடும்பத் தலைவராக உங்கள் கடமைகளை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு சம்பளம் கொடுத்து ஆள் வைப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்” என்றும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
அமனின் இந்த முடிவு குறித்து, இப்படி சாதக, பாதகங்களை நெட்டிசன்கள் ஒருபுறம் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, மற்றொரு புறமோ, “வீட்டு வேலை செய்ய மாதம் ரூ.1 லட்சம் சம்பளமா.... இதோ நாங்கள் ரெடி.. அதற்கு எப்படி அப்ளை பண்ண வேண்டும் எனச் சொல்லுங்களேன்” என்றும் நகைச்சுவையாக கேட்டு வருகின்றனர்.