+

52,000 ஏழை எளிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி வழங்கி சாதிக்க வழி செய்த Beehive ஷ்யாம்ராஜ்!

ஆங்கிலம் என்றால் அது தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத்தான் நன்றாக வரும் என்ற கூற்றை உடைத்து, ஏழை எளிய மாணவர்களையும் ஆங்கிலத்தை முறையாக கற்றுக்கொண்டு சாதிக்க உதவுகிறார் ‘Beehive Communication Club’ தலைவர் ஷியாம்ராஜ். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் வாழ்வை இவர்கள் எப்படி மாற்றி வருகிறார்?

எளிய மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிமையாகக் கொண்டு சேர்க்கும் விருதுநகரைச் சேர்ந்த ஏ.ஷியாம்ராஜ்

ஆங்கிலம் என்றால் அது தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத்தான் நன்றாக வரும் என்ற கூற்றை உடைத்து, ஏழை எளிய மாணவர்களையும் ஆங்கிலத்தை முறையாக கற்றுக்கொண்டு சாதிக்க உதவுகிறார் ‘Beehive Communication Club’ நிறுவனர் ஷியாம்ராஜ்.

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் வாழ்வை இவர் எப்படி மாற்றி வருகிறார் என அவருடனான உரையாடலிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த ஏ.ஷியாம்ராஜ், சாப்ட்வேர் துறையில் கிடைக்கும் நல்ல சம்பளத்தை விட்டுவிட்டு, தனக்கு பிடித்தமான ஆங்கிலம் கற்றுத்தரும் செயலை முழுநேரமாகச் செய்ய நினைத்து ‘Beehive Communication Club’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கினார் ஷியாம்ராஜ்.

கல்வி அறிவை மட்டுமே மூலதனமாகக்கொண்டு 2013ல் வெறும் இரண்டு ஆங்கில டிரெய்னர்களுடன் அவர் துவங்கிய நிலையில், இன்று 80 பேர் அந்நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இவர்கள் தமிழகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கின்றனர். தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் இவர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கும், கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமின்றி ஆங்கிலம் கற்றுத்தந்து அவர்களின் வாழ்வை வளமாக்கி, முன்னேற்றி வருகின்றனர்.

Beehive Communication Club CEO Shyamraj.

Beehive Communication Club CEO Shyamraj.

பீஹைவ் மூலம் ஆங்கிலம் பயின்ற பல எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், இன்று பல நல்ல பதவிகளிலும், கல்வி நிலையங்களிலும் பயின்று வருகின்றனர். ‘Beehive Communication Club’ உருவான கதை, மாணவர்களின் வாழ்வை வளமாக்கும் முயற்சி குறித்து நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் ஷியாம்ராஜ்.

‘‘என் சொந்த ஊர் விருதுநகர், என் தந்தை பி.எஸ்.என்.எல் ஊழியராக இருந்தார், அம்மா தனியார் பள்ளி ஆசிரியை. 2004ம் ஆண்டு விருதுநகரிலுள்ள கே.வி.எஸ் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 முடித்து, 2008ம் ஆண்டு காமராஜ் பொறியியல் கல்லூரியில் B.Tech (IT) படிப்பு முடித்திருந்தேன்.

பள்ளியில் இருக்கும் போதே எனக்கு அனைவரது முன்பு பேசுவதும், மேடையில் கவிதைகள் பேசியும், பேச்சுப்போட்டியில் பங்கேற்று விருதுகள் வாங்குவது மிகவும் பிடிக்கும். பள்ளியில் நான் சிறிய அளவிலான வெற்றிகளை பெற்று வந்தேன். கல்லூரியில் நான் மூன்றாமாண்டு பயிலும் போது FineArt குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டேன். பொதுவாக இறுதியாண்டு மாணவர்களுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு, எனது ஆர்வம் ஈடுபாடு மூலமாக மூன்றாமாண்டிலேயே கிடைத்தது.

”இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகப்படியான மேடைப்பேச்சு, பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றதுடன், எங்கள் கல்லூரியை கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் 15ல் 12போட்டிகளில் வெற்றி பெறச்செய்தேன்.”

இப்படியே நாட்கள் செல்ல கல்லூரிப்படிப்பு முடித்து 2008ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள Infosys நிறுவனத்தில் Software Engineerஆக பணியில் இணைந்தேன், என தனது தொடக்கக்காலத்தை பகிர்ந்தார்.

தினமும் வேலை, Routine ஆன வாழ்க்கை செல்லச்செல்ல அதில் ஷ்யாமுக்கு ஒரு சளிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரியில் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்ற போது தனக்கு கிடைத்த ஆத்மார்த்தமான திருப்தி, தற்போது கிடைக்கவில்லை என்று தோன்றியுள்ளது. வேலைக்குச் சென்று சம்பாதிப்பதை தவிர, வேறு எந்தவிதமான மகிழ்ச்சியுமே இல்லாத சூழல் ஏற்பட்டதாக உணர்ந்துள்ளார் ஷ்யாம்.

Beehive Communication Club

Beehive Communication Club

அப்போது தான், Infosys நிறுவனத்தில் Toast Masters எனப்படும் போட்டி நடப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

“Toast Masters Club என்பது சர்வதேச அளவில், பொதுமேடைப்பேச்சு மூலம் தகவல் தொடர்பு மற்றும் தங்களுக்கான தலைமைப்பண்பு வளர்த்துக்கொள்ளும் ஒரு போட்டியுடன் கூடிய கிளப். இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு மீண்டும் பள்ளி, கல்லூரி நினைவு வந்தது. இதில் பங்கேற்று பழையை வாழ்வை வாழ முடியுமென்று தோன்றியதால் Toast Masters Club போட்டிக்கு தயாரானேன்,’’ என்கிறார் அவர்.

ஐ.டி துறையில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்து வந்த அவரின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டதும் அந்தப்போட்டி தான்.

ஐ.டி நிறுவன ஊழியர் டு ஆங்கில மொழி ட்ரெய்னர்!

‘‘Toast Masters Club போட்டியானது தென்னிந்திய அளவு, தேசிய அளவு, இந்தியா – இலங்கை வரையிலான நிலை, இன்டர்நேஷனல் என பல நிலைகளைக் கொண்ட ஒரு சர்வதேச போட்டி. இதில், ஆங்கிலத்தில் புலமை பெற்ற பல துறைகளைச்சார்ந்த வல்லுநர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அவர்கள் தான் பங்கேற்று கடும் போட்டியையும் தருவார்கள்.

நான் சிறுவயது முதலே ஆங்கிலத்தை நன்கு கற்று, மேடைகளில் பேசி பயிற்சி பெற்றிருந்ததால், முதன் முதலாக இப்போட்டியில் பங்கேற்ற நான், தென்னிந்திய அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பெற்று, இந்தியா – இலங்கை நிலைக்குச் சென்று அங்கு தோல்வியடைந்தேன். முதல்முதலாக சென்ற எனக்கு இந்தப்போட்டியும், அந்த பழைய வாழ்வும் வந்ததை நினைத்து பெருமகிழ்ச்சியாக இருந்தது, என்றார்.

இப்படியே வாழ்க்கை செல்ல காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷ்யாம்ரஜ், Infosysயில் Software Engineer–ஆகவும், அவரது மனைவி IBM நிறுவனத்தில் Software Engineer–ஆகவும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மனைவி பிரசவித்திருந்ததால் ஓய்வு வேண்டும் என்பதற்காக பெங்களூரை விட்டு 2012ம் ஆண்டு திரும்பவும் விருதுநகர் வந்துவிட்டார்கள்.

‘‘வீட்டில் இருந்தபோது ஒரு யோசனை தோன்றியது. நாம் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தையும், மேடைப்பேச்சையும் ஏன் மற்றவர்களுக்கு கற்றுத்தரக்கூடாது? இந்த ஐடியா தான் இன்று ‘Beehive Communication Club’ நிறுவனமாக வளர்ந்துள்ளது.’’

துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல, மெல்ல மெல்ல வளர்ந்ததாக தன்னுடைய பயணம் குறித்து விவரிக்கிறார் ஷியாம்ராஜ்.

‘‘ஆரம்பம் முதலே என் வீட்டில் இருந்தவர்களின் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் அதிகம். 2012ல் மாதம் 40,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும் ஐ.டி துறையை விட்டு ஆங்கிலம் கற்றுத்தரும் பயிற்சி நிலையத்தை துவங்கப்போகிறேன் என பெற்றோர், மனைவியிடம் தெரிவித்தேன். நான் ஏற்கனவே இவற்றில் வெற்றி பெற்றிருந்ததால் வீட்டில் அனைவரும் மறுப்பு தெரிவிக்காமல் Support செய்தனர்.”
Beehive Communication Club

Beehive Communication Club

ஆரம்பத்தில் விருதுநகரில் சென்டரை துவங்கிய நான், விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் வாரம் மூன்று நாட்கள் வகுப்பு எடுப்பது, மாலை நேரங்களில் எனது சென்டரில் பயிற்சி கொடுப்பதென வாழ்க்கை மாறியது. அப்போது, AOE என எனக்கென தனியானதொரு English Syllabus உருவாக்கினேன், AOE என்றால் ABACUS of English என அர்த்தம், இந்த சிலபஸ் மூலம் மிக எளிதாக ஆங்கில Grammar, Phonetics, Spoken English போன்றவற்றை கற்றுத்தர ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் 4 டிரெய்னர்களை நியமித்து ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் எனது டிரெய்னர்கள் வாரம் 30 Periods பயிற்சி கொடுப்பார்கள். இதற்கு ஒரு டிரெய்னருக்கு ஒரு பள்ளியில் அதிகபட்சமாக மாதம் 35 ஆயிரம் கட்டணமாக பெற்று வந்தேன்.

“துவக்கத்தில் 4 பேர் இருந்த நிலையில் இன்று 85 டிரெய்னர்கள், HR மற்றும் Admins என, 92 பேர் பணியில் இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் 62 பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் ஊதியம் கொடுக்கிறேன்.”

தனியார் பள்ளிகளில் நான் பெறும் 35 ஆயிரத்தில், ஆண்டிற்கு ஒரு முறை நவம்பர் மாதம் Conference நடத்தி, ஒவ்வொரு தலைப்பின் கீழ் போட்டி நடத்தி அதில் பல பள்ளிகளின் மாணவர்களை கட்டணமில்லாமல் பங்கேற்கச் செய்து, அவர்களை சாதனையாளர்களாக மாற்றி வருகிறோம். அந்த நிகழ்ச்சியில் இதுவரையில், 3 Guiness World Record, 1 Asian Books of Records, Indian Books of Records என, 13 சாதனைகளைச் செய்துள்ளோம்,’’ என்கிறார் அவர்.

‘‘சாதாரணமாக ஆரம்பித்தது பெரிய சென்டராக மாறிய போது, அரசு உதவிபெறும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எங்களின் உண்மையான மகிழ்ச்சியை உணர முடிந்தது,’’ என்கிறார் ஷ்யாம்.

2013 முதல் தனியார் பள்ளிகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த போது தன்னார்வலர்கள் இணைந்து அவர்கள் கட்டணம் செலுத்தி, ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிற்சி கொடுக்கச் சொன்னார்கள்.

அப்போது, விருதுநகர், சிவகாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள, 13 அரசு உதவிபெறும் பள்ளிகளில் எங்கள் பயிற்றுநர்கள் பயிற்சி கொடுக்கத்துவங்கினர். இந்தப்பள்ளியில் படிப்பதில் பெரும்பாலானவர்கள் பட்டாசு தொழிற்சாலையில் பயிலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள், மிகவும் சிரமப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
Beehive Communication Club Students

Beehive Communication Club Students

”இந்த State Board பள்ளிகளில் நாங்கள் பயிற்சி கொடுக்கத்துவங்கி அவர்களை எங்களின் நவம்பர் Conferenceல் பங்கேற்கச் செய்தோம். அங்கு அவர்கள், Grammar, Spoken English, Phonetics என பலவித தலைப்புகளில் பங்கேற்றதுடன், அதிக பணவசதியுடன் ICSE, CBSE பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றார்கள், பல போட்டிகளில் அவர்கள் முதலிடத்தைப் பிடித்தார்கள். ஒரு பயிற்றுநராக இந்த வெற்றியை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை, ஏதுமற்ற இந்த மாணவர்கள் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.”

இவர்களின் பெற்றோர்கள் கல்வியறிவு கிடைக்காதவர்கள், வெறும் பயிற்சியில் கற்றுக்கொண்டு அவற்றை தாங்களாக பயிற்சி செய்து பார்த்து சாதித்ததைப் பார்த்த போது தான், State Board-இல் படிக்கும் மாணவர்கள் ஏழ்மையான சூழலில் இருக்கலாம். ஆனால், அவர்களின் திறமையும், வெற்றியும் பெரியது, வலிமையானது எனத்தோன்றியது.

”ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சமாக 500 பேர் என, 13 பள்ளிகளில் உள்ள 52 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். இவர்கள் Teaching, IT, Banking என பல துறைகளில் இன்று கோலோச்சி வருகின்றனர்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ஷ்யாம்ராஜ்.

கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கான முயற்சி

இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான முத்து, கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்குமாறு கூறி sponsor செய்தார்.

அப்போது, நாங்கள் கல்லூரிகள் தோறும் மூன்று நாட்கள் சிறப்பு வகுப்பெடுத்தோம், ஆங்கிலத்தில் எப்படி பேச வேண்டும், Self Development, Interview கலந்து கொள்வது என பல பயிற்சிகள் வழங்கினோம். கடந்த நான்கு ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே 151 பயிற்சி வகுப்புகள் நடத்தி, 16,200 கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலத்தை கொண்டு சென்றுள்ளோம்.

இதில், பலரும் இன்டர்வியூக்களை வென்று நல்ல நிறுவனத்தில் வேலைகள் பெற்று சாதித்துள்ளனர்.

“தொழில் ரீதியில் பார்த்தால் இன்று, 92 பேருடன் நாங்கள் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரையில் டர்ன்ஓவர் செய்யும் நிறுவனமாக Beehive Communication Clubயை மாற்றியுள்ளோம்.”

ஆனால், உண்மையில் எங்கள் குழுவுக்கான மகிழ்ச்சி என்பது, கிராமப்புற மற்றும் ஏதுமற்ற மாணவர்களின் வாழ்வை வளமாக்க எங்களின் குழு உதவியுள்ளது, எங்கள் கல்வியும், அறிவும், ஆங்கில புலமையும் பலரின் வாழ்வை வளமாக்கியுள்ளது என்பது தான். எங்கள் குழு தொடர்ச்சியாக அரசு உதவி பெறும் மாணவர்கள், கிராமப்புற கல்லூரி மாணவர்களைத் தேடி அவர்களுக்காக இயங்க உதவிகள் கிடைத்தால் போதும், நாங்கள் இன்னமும் பலரின் வாழ்வை மாற்றுவோம்,’’ என்கிறார் ஷியாம்ராஜ்.

facebook twitter