பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் - 'அக்னிச்சிறகுகள்' தொடங்கி தன்னார்வலரான ஏரோநாடிகல் என்ஜினியர்!

02:30 PM Jan 09, 2025 | Gajalakshmi Mahalingam

டெல்லியில் நடுஇரவில் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயாவாக இருந்தாலும் சரி. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பிரதான கல்வி நிலையமான அண்ணா பல்கலைக்கழகமானாலும் சரி. எல்லா இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இன்றளவும் இருக்கிறது. வீட்டில் தொடங்கி எங்கு போனாலும் பெண்களுக்கு பல ரூபங்களில் பாலியல் கொடுமைகள் அரங்கேறுகின்றன.

தனக்கு அநீதி நடந்திருக்கிறது என்று வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணின் மீதே பதிலுக்கு பழிசுமத்தும் சமூகத்தால் பல பெண்கள் மவுனமாகி தங்களுக்குள்ளாகவே குற்ற உணர்வுகளோடு மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாரிடமும் சொல்ல முடியாத இது போன்ற கொடுமைகளை தங்களிடம் சொல்லி குற்ற உணர்வில் இருந்து மீண்டு புதிய வாழ்வை வாழ வழி வகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் 'அன்கிச்சிறகுகள்' தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் பிரபு.

சென்னை பூவிருந்தவல்லி கரையான்சாவடியச் சேர்ந்தவர் பிரபு. 3 அக்கா, அம்மான்னு பெண்கள் சூழ்ந்த குடும்பத்துல வளர்ந்தவரு. அரசுப் பள்ளியில படிச்சு பிஇ ஏரோநாடிகல் என்ஜினியராகி தனிப்பட்ட முறையில மென்பொருள் தயாரிப்பு பணியை செய்து கொண்டு வருகிறார். ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் தான் விரும்புகிற சமூக சேவையை செய்ய நேரம் ஒதுக்க முடியாது என்று தனிப்பட்ட முறையில தான் விரும்பிய நேரத்துல பணி செய்ய வேண்டுமென்று சுயமாக மென்பொருள் தயாரித்து கொடுப்பதை பணியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தன்னார்வலர் பிரபு

கல்லூரி காலத்துலேருந்தே நண்பர்களோடு சேர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது மரம் நடுவது போன்ற சேவைகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார். அப்படி தொடர்ந்து 6 மாதமாக ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு உணவு வழங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில், 12 வயசுள்ள ஒரு பெண் மட்டும் இயல்பாகவே இல்லாம இருந்தது அவருக்கு நெருடலைத் தந்திருக்கிறது.

சிந்திக்க வைத்த சிறுமி

தொடர்ச்சியா அங்க போனாலும் அந்த சிறுமி மட்டும் சாப்பாடு வாங்க வரமாட்டா, எங்க கிட்ட நெருங்கவே பயப்படுவா. அவளோட அந்த நடுக்கம் என்ன யோசிக்க வெச்சுது.

"அந்த காப்பகம் அனுமதியோட சிறுமி கிட்ட பேசினப்போ 2 வருஷமா அவ பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்குறது தெரிஞ்சது. அந்த சம்பவம் நான் பயணிக்க வேண்டிய திசைய மாத்துச்சுன்னு தன்னார்வலரா தான் செயல்படத் தொடங்கயதைப் பற்றி," யுவர் ஸ்டோரி தமிழிடம் தெரிவித்தார் பிரபு.

பசின்னு கேக்குறவங்களுக்கு சாப்பாடு தர பலரும் தயாரா இருக்காங்க. பாதுகாப்பு தேடுற பெண் குழந்தைகள் எங்கே போய் உதவி கேக்குறதுன்னு தெரியாம இருக்காங்க. அவங்களுக்கு எதாவது செய்யனுங்குறதுல கவனம் செலுத்தத் தொடங்கினதா, அவர் கூறி இருக்கிறார்.

பிரச்னைகளில் இருந்து விடுவிக்க

சின்ன வயசுல பெண் குழந்தைகளுக்கு ஏற்படுற பாலியல் கொடுமைகளால தங்களைத் தாங்களே கூட அவங்க அழிச்சிக்கிறாங்கங்குற ஒரு நிகழ்வு என்ன கலங்க வெச்சுது. செய்தித்தாள்கள்ல எங்கேயோ நடக்குதுன்னு படிச்ச சம்பவம் கண் முன்னயே நடந்தது என்ன ரொம்பவே கவலையடைய செஞ்சுது. பெண் குழந்தைகளின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செஞ்சப்போ 100க்கு 70 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுறாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனதளவுல தைரியம் குடுக்கனும்னு அக்னிச்சிறகுகள் 7 வருஷம் முன்னாடி தொடங்கினேன், என்கிறார் பிரபு.

பாலியல் குற்றம் இல்லாத தமிழகங்குற மாற்றத்த நோக்கி செயல்பட தொடங்கி, இன்று வரை செயல்பட்டும் வருகிறேன். பாலியல் குற்றம் நடந்தால் எங்களுக்கு தெரியப்படுத்த student Hub என்ற அமைப்பை உருவாக்கினேன். அரசுப் பள்ளி கல்லூரிகளில் புகார் பெட்டி இருப்பதைப் போன்று இந்த student hub மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளை தெரியபடுத்தலாம்.

7338833112 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் மாணவர்கள் அவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்கும் விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு பெறலாம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படுவதாகவும், கூறுகிறார் பிரபு.

விழிப்புணர்வு நிகழ்வுகளில் பிரபு

பெண்கல்விக்கு கை கொடுப்போம்

பெண்கல்வியில் தன்நிறைவு, விழிப்புணர்வு என்பது நகரங்களை மட்டுமே அலங்கரிப்பவையாக இருக்கின்றன. கிராமங்களில் அதிலும் குறிப்பாக பல மலைவாழ் கிரமங்களில் இன்றும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. பூப்பெய்திய உடன் பெண்களின் கல்விக்கு தடை போடும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'கல்விக்கு கைகொடுப்போம்,' என்ற திட்டத்தை பிரபு தன்னுடைய தன்னார்வ சேவையின் முதல் மைல்கல்லாக வைத்து செயல்படத் தொடங்கியுள்ளார்.

இடைநில்லா கல்வி, வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து திறன் வளர்த்தல் பயிற்சி, என தன்னால் முடிந்த மாற்றத்தை சிறு பங்களிப்பாக இந்த சமூகத்திற்கு செய்து வருகிறார். 

பெண்குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து தீர்வு பெறுவதற்காக கல்லூரிகளில், பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் மூலம் student hub திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் மாணவிகளுக்கு தக்க ஆலோசனை வழங்கப்பட்டு அவர்களுக்கு ஏற்படும் உயிரை மாய்த்துக் கொள்ளலாம், என்கிற தவறான எண்ணத்தை மாற்றி புதிய வாழ்வுக்கான அச்சாரமிட்டிருக்கிறார்.

பெண்கல்வி முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல் அக்னி சிறகுகளின் மூலம் இதுவரை 5,264 மாணவர்கள் கல்வி பெறுவதற்கான நிதியுதவியையும் செய்திருக்கிறார். 'Student hub' என்ற அமைப்பின் முயற்சியால் 634 பெண்கள் துயரங்களில் இருந்து தவறான முடிவுகளில் இருந்தும் மீட்சி பெற்றுள்ளனர்.

மாதவிடாய் கால விடுப்பின் அவசியம்

சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் மேல் கொண்ட பற்றால் ஆண்டுதோறும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விஷயம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் பிரபு. அதில் 2024 – 25ம் ஆண்டின் பிரச்சாரமாக

'lets talk about periods' என்பதைப் பற்றிய விழிப்புணர்வை தொடங்கி இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகளை பிரபு மற்றும் அவருடன் இணைந்து செயல்படும் 5,000 பேர் சேர்ந்து நடத்தி வருகின்றனர். அண்மையிர் திருநேல்வேலி ராணி அண்ணா கல்லூரியில் 4,500 மாணவிகளை கொண்டு world largest human image mensuration symbol உருவாக்கி பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகச்சி நடத்தியுள்ளனர் இந்த அமைப்பினர்.

இந்த நிழ்வின் முக்கிய நோக்கமாக மூன்று கோரிக்கைகள் அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

1.பொதுவெளியில் மாதவிடாய் ஒன்றும் தீட்டல்ல என்ற வாசகம் இடம் பெற வேண்டும். 

2.அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நாப்கின் முறையாக வழங்கப்பட வேண்டும் மேலும், அதனைப் பயன்படுத்தும் வகைமுறைகளையும், அதனை நீக்கும் கருவிகளையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

3.பெண்கள் பணிபுரிகின்ற அனைத்து இடங்களிலும் மாதவிடாய் காலங்களில் ஓய்வெடுக்க ஓய்வரை உருவாக்கப்பட வேண்டும் மற்றும் மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விருப்ப ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்களை நிறைவேற்ற உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். மாநில கொள்கையில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுவை மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து வருவதாக தெரிவித்துள்ளார் பிரபு.

மாதவிடாய் காலத்தில் விடுப்பு தேவையில்லை என்று 40 சதவிகிதம் பெண்கள் கூறுகின்றனர், ஆனால், விடுப்பு தேவை என்று 60 சதவிகிதம் பெண்கள் கருதுகின்றனர். மாதவிடாய் நாட்களில் விடுப்பு தேவையா என்பதைப் பற்றி பெண்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில் சென்னையில் மிகப்பெரிய அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர் அக்னிச்சிறகுகள் அமைப்பினர்.

2025 மார்ச் மாத மகளிர் தினத்திற்குள் Menstruation leave குறித்த புரிதலை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இதன் முக்கியத்துவத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டு அதனை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், பிரபு.