+

SIR கணக்கெடுப்பு படிவத்தை வாக்களர்கள் நிரப்புவது எப்படி? - YS தமிழ் Explainer

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. இந்த பணியின் கீழ் கணக்கெடுப்பு படிவத்தை (Enumeration Form) வாக்காளர்கள் ஒவ்வொருவரும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.  இந்த படிவத்தை வாக்குச்சா

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’யை (Special Intensive Revision - SIR) அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. இந்த பணியின் கீழ் கணக்கெடுப்பு படிவத்தை (Enumeration Form) வாக்காளர்கள் ஒவ்வொருவரும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடு வீடாக நேரில் வழங்கி வருகிறார். இணையவழியிலும் இந்த கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்கள் நிரப்பி சமர்ப்பிக்க முடியும். இந்த படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள் என்னென்ன? அதை நிரப்புவது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம். 

SIR

Special Intensive Revision (SIR) என்றால் என்ன?

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) தொடங்கி உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட SIR பணியில் சுமார் 68 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நவம்பர் 4-ம் தேதி அன்று தொடங்கிய SIR 2.0 பணியில் வாக்காளர்கள் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து வழங்கினால் போதும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர வேறு எந்தவொரு ஆவணத்தையும் படிவத்துடன் வக்காளர்கள் சேர்த்து வழங்க வேண்டிய அவசியமில்லை, என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வீடு வீடாக வழங்கப்படும் SIR கணக்கெடுப்பு படிவங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதற்கான படிவத்தை வீடு வீடாக வழங்கி வருகின்றனர். வரும் டிசம்பர் 4-ம் தேதி வரையில் இந்த பணி நடைபெறும். 

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வழங்கும் இந்த படிவம் பகுதியளவு முன்கூட்டியே நிரப்பப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு பிரதிகள் கொண்ட படிவங்கள் வழங்கப்படும். அதில் இரண்டையும் நிரப்ப வேண்டும். அதாவது, வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டையின் எண், முகவரி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளரின் வரிசை எண், பக்கம், வாக்குச்சாவடியின் பெயர், சட்டமன்ற / பாராளுமன்ற தொகுதியின் பெயர், மாநிலம் உள்ளிட்ட விவரங்கள் அந்த படிவத்தில் முன்கூட்டியே நிரப்பப்பட்டு இருக்கும்.

இதில், வாக்காளரின் புகைப்படமும் (முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற புகைப்படம்) இருக்கும். அதன் பக்கத்தில் புதிய புகைப்படத்தை ஓட்டுவதற்கான இடமும் இருக்கும். படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது வாக்காளர்கள் தங்களது புதிய புகைப்படத்தை (வேண்டுமானால்) ஒட்டி சமர்ப்பிக்கலாம். அந்த படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வழங்குவார். இந்த நடைமுறையில் இது மிகவும் முக்கிய பகுதியாகும். இந்த ஒப்புகையை வாக்காளர்கள் பெற வேண்டியது அவசியம், என அரசியல் கட்சி பிரமுகர்கள் சொல்கின்றனர். 

இந்த பணிகள் முடிந்ததும் டிச.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது விண்ணப்பத்துடன், உரிய ஆவணங்களை கொடுத்து வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கலாம், என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

SIRR

SIR கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி?

அலுவலர்கள் SIR படிவத்தை கொடுத்தவுடன், அதில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள உங்கள் பெயர், போட்டோ சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு படிவத்தை பூர்த்தி செய்யத் தொடங்குங்கள்.

  • பகுதியளவு நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் மொத்தம் மூன்று பாக்ஸ்கள் இருக்கும். 
  • அதில் மேற்புறம் உள்ள முதல் பாக்ஸில் வாக்காளரின் அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். 
  • வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பமிருந்தால்), கைபேசி எண் (இருந்தால்), தந்தை / பாதுகாவலரின் பெயர் மற்றும் அவரது வாக்காளர் அடையாள அட்டையின் எண் (இருந்தால்), தாயார் பெயர் மற்றும் அவரது அவரது வாக்காளர் அடையாள அட்டையின் எண் (இருந்தால்), துணைவர் பெயர் அவரது வாக்காளர் அடையாள அட்டையின் எண் (இருந்தால்) உள்ளிட்டவற்றை இந்த முதல் பாக்ஸில் நிரப்ப வேண்டும். 
  • இரண்டாவது பாக்ஸில் ‘முந்தைய தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில்’ உள்ள வாக்காளரின் விவரம் கேட்கப்படும். 
  • இதில் 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்கள் அந்த விவரத்தை நிரப்ப வேண்டும். 
  • இதிலும் வாக்களர் பெயர், வாக்காளரின் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினர் பெயர், உறவு முறை, மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதியின் பெயர் மற்றும் எண், பாகம் எண், வரிசை எண் உள்ளிட்டவற்றை வாக்காளர்கள் நிரப்ப வேண்டும். 
  • இந்த விவரத்தை https://erolls.tn.gov.in/electoralsearch/ என்ற வலைதளத்தில் இருந்து எளிதில் வாக்காளர்கள் பெற முடியும். இதில் வாக்காளர் அடையாள அட்டையின் எண் அல்லது வாக்காளரின் பெயர் உள்ளிட்டவற்றை கொடுத்து அந்த விவரத்தை பெறலாம். இதற்கு வாக்காளரின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியின் பெயர், வாக்காளரின் பெயர் மற்றும் அவரது பெற்றோர் / பாதுகாவலரின் பெயர் தமிழில் உள்ளிட்டு, பாலினம் மற்றும் வெரிபிகேஷன் கோடினை கொடுத்து விவரத்தை பெறலாம். 
  • முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது 18 வயது நிறைவடையாதவர்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இரண்டாவதாக உள்ள பாக்ஸை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. 
  • மூன்றாவது பாக்ஸில் ‘முந்தைய தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினர் பெயர்’ கேட்கப்படும். இந்த விவரத்தையும் https://erolls.tn.gov.in/electoralsearch/ தளத்தில் இருந்து பெற்று பூர்த்தி செய்யலாம்.
  • முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த மூன்றாவது பாக்ஸை நிரப்பலாம். இதில் பெற்றோர் அல்லது உறவினர்களின் வாக்காளர் விவரத்தை நிரப்பலாம். 
ECR

வாக்குச்சாவடி நிலை அலுவலரை தொடர்பு கொள்வது எப்படி?

இந்த SIR கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யும் போது பெரும்பாலான வாக்காளர்களுக்கு சந்தேகங்கள் எழும். அதற்கு வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரை (பிஎல்ஓ) தொடர்பு கொள்வதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தொடர்பு கொள்வது எப்படி என்பதை பார்ப்போம். இது நகர்ப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரிதும் உதவும். 

  • https://voters.eci.gov.in என்ற இணையதள பக்கத்தில் ‘Book a call with BLO’ அம்சத்தை வாக்காளர்கள் பயன்படுத்தலாம். இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்கப்படுகிறது. அதை கொடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மொபைல் எண்ணை பெற முடியும். 

  • ECINET App என்ற செயலியிலும் Book a call with BLO அம்சத்தை இதற்கு பயன்படுத்தலாம்.

  • 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் பிஎல்ஓ விவரத்தை வாக்காளர்கள் பெற முடியும். 
BLO

இணையவழியிலும், மொபைல் செயலி மூலமாகவும் வாக்காளர்கள் SIR கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிப்பது எப்படி?

  • வாக்காளர்கள் https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் ECINET App என்ற மொபைல் செயலியின் மூலமாகவும் ஆன்லைனில் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். 
  • இதற்கு https://voters.eci.gov.in தளத்தில் உள்ள Services பிரிவில் ‘SIR - 2026’ Tab-ல் உள்ள ‘Fill Enumeration Form’ லிங்கை பயன்படுத்தலாம். 
  • அதை கிளிக் செய்ததும் வாக்காளர்கள் தங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • பின்னர் வாக்காளர் அடையாள அட்டை எண் விவரத்தை உள்ளிட வேண்டும். 
  • அதில் ஆப்லைன் கணக்கெடுப்பு படிவத்தில் இருப்பது போலவே வாக்காளரின் விவரங்கள் முன்கூட்டியே பகுதியளவு நிரப்பட்டு இருக்கும். இது இணையதள பக்கத்தில் ‘Prefilled Information’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். 
  • அதை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொண்ட பின்னர் SIR கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்ய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அதில் வரும் OTP-யை உள்ளிட்ட வேண்டும். 
  • வாக்காளர் அடையாள அட்டை உடன் மொபைல் எண்ணை லிங்க் செய்யாதவர்கள் ‘படிவம் 8’-னை சமர்ப்பித்து மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ள முடியும். இதற்கான லிங்கும் அதன் கீழே இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். 
  • OTP சரிபார்ப்புக்கு பின்னர் மூன்று ‘கேட்டகிரி’ கொடுக்கப்படும். 
  • முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் வாக்களரின் பெயர் இடம்பெற்றுள்ளது, முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் உறவினரின் பெயர் இடம்பெற்றுள்ளது, முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் அல்லது வாக்காளரின் உறவினரின் பெயர் இடம்பெறவில்லை என மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். 
  • அதில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 
  • 38 வயதுக்கு குறைவானவர்கள் இணையவழியில் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யும் போது மேற்கூறிய மூன்று முதல் ஆப்ஷனை (Self) தேர்வு செய்ய முடியாது. அவர்கள் உறவினர்களின் பெயர் முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதை குறிப்பிடலாம். 
  • முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர் அல்லது அவரது உறவினரின் விவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதிலும் ஆப்லைனை போலவே மாநிலம், சட்டப்பேரவை தொகுதி, வாக்குச்சாவடி விவரம், வரிசை எண், உறவு முறை உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். அதை ‘Search’ ஆப்ஷன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். 
  • பின்னர் ‘Continue’ ஆப்ஷன் மூலம் வாக்காளர்கள் தங்கள் சுய விவரத்தை பூர்த்தி செய்யலாம். ஆப்லைன் படிவத்தில் உள்ளது போலவே வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பமிருந்தால்), தந்தை - தாயார் - பாதுகாவலர் - துணைவரின் பெயர் மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையின் எண், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இடம், புகைப்படத்தை அப்லோட் செய்யலாம். 
  • அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் ப்ரிவ்யூ செய்து கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்கலாம். 
  • இதனை பிஎல்ஓ சரிபார்த்த பின்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த கணக்கெடுப்பு படிவம் ஏற்கப்படும் என தகவல்.

பொதுவான சந்தேகங்கள் என்னென்ன?

  • SIR கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வதில் இன்னும் பிற பொதுவான சந்தேகங்கள் பெரும்பாலான வாக்காளர்களுக்கு எழுவது உண்டு. அது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 
  • வாக்காளர் அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்கும் பிஎல்ஓ-க்கள் நேரடியாக வந்து SIR கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாக்காளர்கள் பணி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான படிவத்தை சம்பந்தப்பட்ட வாக்காளரின் குடும்ப உறுப்பினர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதை பிஎல்ஓ உறுதி செய்ய வேண்டும். 
  • முகவரி மாறி வசித்து வரும் வாக்காளர்களுக்கு பிஎல்ஓ-க்கள் இடமிருந்து கணக்கெடுப்பு படிவத்தை பெற முடியாது. அவர்கள் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, படிவம் 6-னை பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • முகவரி மாறி வசித்து வரும் வாக்காளர்களை பிஎல்ஓ-க்கள் குடிபெயர்ந்தவர் என குறிப்பிடுவார். இதே போல உயிரிழந்தவர்கள் இருந்தால் அதையும் பிஎல்ஓ குறிப்பிடுவார். 
  • புதிய வாக்காளர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க டிசம்பர் 9ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, படிவம் 6-னை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Induja Raghunathan

More News :
facebook twitter