‘கடந்த சில தினங்களாக தினமும் அழுதேன்’ - மகளிர் கிரிக்கெட் அணியை பைனலுக்கு கொண்டு சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ்!

03:54 PM Oct 31, 2025 | Chitra Ramaraj

நேற்று முதல் திரும்பிய பக்கமெல்லாம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் அதன் ஆல் ரவுன்டர் ஆட்டக்காரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பற்றிய புகழாரங்களும் மற்றும் அவரது புகைப்படங்களும் தான் இந்தியா முழுவதும் வைரல். கண்ணீருடன் ஜெமிமா கைக்கூப்பி நன்றி தெரிவிக்கும் அந்த புகைப்படத்துக்குப் பின்னே பல வலிகளும், போராட்டங்கள் இருப்பதும் அனைவருக்கும் புரிந்தது. அப்படி ஜெமிமா கிரிக்கெட் அணிக்கு செய்த சாதனை என்ன? அவர் மீது இருந்து குற்றச்சாட்டுகள் என்ன என்பதை அறிய பலரும் ஜெமிமா பற்றி தேட ஆரம்பித்தனர்.

More News :

நேற்று மும்பையில் நடைபெற்ற ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பைக்கான அரை இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதிக்கொண்டது. அப்போது கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க சதத்தின் உதவியால், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியாவை ஜெயித்து விட்டோம் என இந்திய மகளிர் அணியினர் கண்ணீரோடு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளும், அதனைத் தொடர்ந்து சிறந்த ஆட்டத்திற்கான விருது பெற்ற ஜெமிமா கண்ணீரோடு நெகிழ்ச்சியாக பேசிய காட்சிகளும் தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங்காகி உள்ளது.

சாதித்துக் காட்டிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணி

இந்தியாவைப் பொறுத்தவரை, கிரிக்கெட் அணி என்றாலே ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் அணியைத்தான் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால், பெண்களுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது என்பதை இன்று தங்களது வரலாற்றுச் சாதனை மூலம் உரக்கச் சொல்லி இருக்கின்றனர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்.

2017ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அப்போதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. இந்தமுறை, வரும் ஞாயிறு (நவம்பர் 2) அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி.

சுமார் 14 ஆண்டுகளாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை, இன்று தங்களது கடின உழைப்பால் செய்து காட்டி, 2025 மகளிர்

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர் இந்தச் சிங்கப்பெண்கள்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த ஜெமிமா, கடைசி வரை ஆட்டமிழக்காமல், சதமடித்து தனது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகினார். அவர் எடுத்த 127 ரன்களோடு, 339 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனந்தக் கண்ணீரோடு இந்த வெற்றியை மகளிர் அணியினர் மைதானத்திலேயே கொண்டாடியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

கண்ணீரோடு பேசிய ஜெமிமா

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெமிமாவிற்கு, சிறந்த ஆட்டத்திக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது கண்ணீரோடு தான் கடந்து வந்த தடைகளைப் பற்றி உணர்ச்சி ததும்ப ஜெமிமா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

“முதலில் நான் இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது என்னால் மட்டுமே சாத்தியமாகவில்லை. என் பெற்றோர், என் பயிற்சியாளர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். இந்த வெற்றி ஒரு கனவு போல் இருக்கிறது,” என்றார் கண்ணீர் மல்க.

கடந்த உலகக்கோப்பையில் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தேன். இந்த முறை நான் நல்ல ஃபார்மில் இருந்தும், சில விசயங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு மாத காலமும் எனக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.

கிட்டத்தட்ட இந்தத் தொடர் முழுவதும் தினமும் நான் அழுதேன். பதட்டத்துடன் மனரீதியாகப் போராடினேன். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், “நீ அமைதியாக நில், கடவுள் உனக்காகப் போராடுவார்” என பைபிளில் இருந்து ஒரு வசனத்தை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

”நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய போகிறேன் என்பதே, களமிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியும். தற்போது எனக்குக் கிடைத்த இந்த பாராட்டுக்கள் எதையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்த வெற்றி எனக்கானது அல்ல, இந்தியாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஒரே நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு ரன்னுக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், உற்சாகமும் எனக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது,” என இவ்வாறு கண்ணீருடன் ஜெமிமா பேசினார்.

யார் இந்த ஜெமிமா?

25 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். அவரது தந்தை கிரிக்கெட் பயிற்சியாளர் என்பதால், தனது சிறுவயதில் இருந்தே ஜெமிமாவிற்கு கிரிக்கெட் மீது தீராக்காதல் உண்டானது. ஆனால், பள்ளிக்காலம் அவரை கிரிக்கெட்டில் இருந்து விலக்கி, ஹாக்கி பக்கம் இழுத்துச் சென்றது. மும்பை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது, ஜூனியர் அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாடினார் ஜெமிமா. அதோடு, கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுகளிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார்

ஆனால், வீட்டிலேயே கிரிக்கெட் பயிற்சியாளர் இருந்ததால், அவரால் தொடர்ந்து ஹாக்கியில் ஜொலிக்க இயலவில்லை. மீண்டும் கிரிக்கெட்டிற்கே திரும்பிய அவர், தனது 12 வயதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடினார். உள்ளூர் போட்டியான இதில் அவர் அடித்த இரட்டை சதம் அனைவரையும் அசரடித்தது.

2017-18 சீசனுக்கான சிறந்த இளம் வீராங்கனைக்கான (ஜூனியர் டொமஸ்டிக்) விருதை பிசிசிஐ-யிடம் இருந்து பெற்றார். மேலும், 2018-ல் சிறந்த உள்ளூர் ஜூனியர் வீராங்கனைக்கான 'ஜக்மோகன் டால்மியா' விருதையும் ஜெமிமா வென்றுள்ளார்.

வலது பேட்டர் மற்றும் பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னரான ஜெமிமா, தனது 18 வயதில் இந்திய சீனியர் மகளிர் அணியில் இடம்பிடித்தார். அப்போது முதல் இந்திய அணியின் நம்பிக்கையளிக்கும் மிடில் ஆர்டர் பேட்டராக வலம் வருகிறார். கடந்த உலகக்கோப்பை அணியில் இடம்பெற முடியாமல் போன போதிலும், அதற்கும் சேர்ந்து இந்த முறை தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், 134 பந்துகளில் அவர் 127 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.  

இன்ஸ்டா செலிபிரிட்டி

சமூகவலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் ஜெமிமா. அவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்கென தனி ரசிகர் வட்டமே உள்ளது. சுட்டிப் பெண்ணான ஜெமிமாவின் நகைச்சுவை வீடியோக்கள் அதிகம் ரசிக்கப்படுபவையாக உள்ளன.

விளையாட்டைத் தாண்டி இசையிலும், கடவுள் பக்தியிலும் அதிக நாட்டம் கொண்டவர் ஜெமிமா. அதனால்தான் தனது வெற்றிக் களிப்பில்கூட மறக்காமல் தன் இறைவனுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது தவிர விளம்பரப்படங்களிலும் ஜெமிமா நடித்து வருகிறார்.

WPL தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவரை, கடந்த 2023ம் ஆண்டு டெல்லி அணி ரூ.2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கர் ஜிம்கானா சர்ச்சை

ஜெமிமா நேற்றைய ஆட்ட முடிவில், சிறந்த ஆட்டக்காரர் விருதை வாங்கியதைத் தொடர்ந்து பேசுகையில், உணர்ச்சிப் பொங்க பேசினார். இது கடந்தாண்டு அவர் சந்தித்த சர்ச்சைகளை மீண்டும் நினைவு படுத்தும் விதமாகவும், அதற்கான விடையை நேற்றைய அவரின் வெற்றி இருந்ததை வெளிப்படுத்துவதாக இருந்தது.

மும்பையில் ஜிம்கானா பகுதியில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது ’கர் ஜிம்கானா கிளப்.’ விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த கிளப்பில், ஜிம், மண்டபம் என பல வசதிகள் உள்ளன. இந்த கர் ஜிம்கானாவில் கடந்த 2023ம் ஆண்டு உறுப்பினரானார் ஜெமிமா. இந்தக் கிளப்பில் சேர்ந்த முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்நிலையில், கடந்தாண்டு ஜெமிமாவின் தந்தையான இவான் ரோட்ரிக்ஸ், கர் ஜிம்கானாவில் உள்ள மீட்டிங் அறையை கிறிஸ்துவ மத கூட்டங்களை நடத்துவதற்காகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ’முன் அனுமதி பெற்றே அவர் அங்கு நிகழ்ச்சிகளை நடத்திய போதும், அவர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயற்சிக்கிறார், அதற்காகத்தான் மதமாற்றக் கூட்டங்களை நடத்துகிறார்,’ என பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.

இதனால், ஜெமிமாவுக்கு வழங்கப்பட்ட கர் ஜிம்கானா உறுப்பினர் அட்டையும் திரும்பப் பெறப்பட்டது. அப்போது ஜெமிமாவிற்கு எதிராகவும் சமூகவலைதளப் பக்கங்களில் கடும் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இதனால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இந்த சம்பவங்கள் ஜெமிமாவின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் எதிரொலித்தது. அவர் வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

அப்போது இது தொடர்பாக மன அழுத்தத்திற்கு ஆளான போதும், அந்த சர்ச்சைகளில் இருந்தெல்லாம் அவர் மீண்டு வந்து விட்டார் என்பதை தனது வரலாற்று மிக்க வெற்றியால் நிரூபித்து விட்டார் என்றே கூறலாம். தனது அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணியை தற்போது அவர் இறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

கூடவே எந்தக் குற்றச்சாட்டைக் கூறி, தனது கர் ஜிம்கானா உறுப்பினர் அட்டை திரும்பப் பெறப் பட்டது, அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் தற்போது அவர் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.