கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தக் கனவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கௌரி சங்கர். ஐஐடி-மெட்ராஸ் உணவகத்தில் பணிபுரியும் தனது தாயின் கனவை நனவாக்கி, அதே கல்வி நிறுவனத்தில் மாணவராகச் சேர்ந்துள்ள அவரது கதை பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி-மெட்ராஸில் வாய்ப்பு
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி-மெட்ராஸ், 'அனைவருக்கும் ஐஐடி-மெட்ராஸ்' என்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பட்டப்படிப்புக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 28 அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி-மெட்ராஸின் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த கௌரி சங்கரும் ஒருவர்.
தாயின் தியாகம், மகனின் அர்ப்பணிப்பு
கலைவாணி, தனது கணவர் மறைவுக்குப் பிறகு, தனி ஒரு பெண்ணாக கௌரி சங்கரையும் அவரது அண்ணனையும் வளர்த்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து மகனைப் படிக்க வைத்தவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐஐடி-மெட்ராஸ் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு படிக்கும் மாணவர்களைப் பார்க்கும்போதெல்லாம், 'தன் மகனும் இப்படி ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும்' என்று கனவு கண்டார்.
கலைவாணியின் ஆசையை உணர்ந்த கௌரி சங்கர், தனது நேரத்தை வீணடிக்காமல் படிப்புக்கே முக்கியத்துவம் கொடுத்தார். நண்பர்கள் விளையாடும்போதும், அவர் புத்தகங்களோடுதான் அதிகம் இருந்தார். +2 தேர்வில் 510 மதிப்பெண் பெற்று, ஐஐடி-மெட்ராஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாரானார்.
மகிழ்ச்சியில் திளைத்த தாய்
நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானபோது, கௌரி சங்கர் ஐஐடி-மெட்ராஸ் ஆன்லைன் பட்டப்படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் உறுதிப்படுத்தினார். இந்தச் செய்தி கலைவாணிக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுத்தது.
"16 வருஷமா வீட்டு வேலை செஞ்சு தான் என் பையனைப் படிக்க வெச்சேன். அவனைப் படினு கூட சொன்னது இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் எழுந்து தானா படிப்பான்," என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறார் கலைவாணி. "அவனுக்கு நல்ல காலேஜ்ல படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு மத்தவங்க சொல்றத கேக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு," என்று சொல்கிறார் கலைவாணி
கௌரி சங்கரின் வழிகாட்டி ஆசிரியர்கள்
தனது வெற்றிக்குக் காரணம் தனது ஆசிரியர்கள்தான் என்று கூறுகிறார் கௌரி சங்கர்.
"நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது என் குடும்ப நிலைமையை மாத்தனும்னா நல்லா படிக்கனும்னு அம்மா சொன்னாங்க. அதனால நல்லா படிச்சேன். 1ம் வகுப்புலேருந்து 9வது வரைக்கும் சுமாராத் தான் படிச்சேன். 10வதுல 410 மார்க் எடுத்தேன், +2-ல நல்ல மார்க் எடுத்தா உயர் கல்விய நல்ல காலேஜ்ல படிக்கலாம்னு தோணுச்சு. ஐஐடி மெட்ராஸ்ல சேர்றது பத்தி என்னோட ஆசிரியர்கள் தான் வழிகாட்டினாங்க," என்று நன்றி தெரிவித்தார்.
இதுவரை நடந்த தேர்வுகளின் வினாத் தாள்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு கேள்வி 4 வரிகளில் இருந்ததைப் பார்த்த போது புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தது. என்னுடைய ஆசிரியர்களின் உதவியால் நான் தேர்வை தைரியமாக எதிர்கொண்டேன், என்கிறார் கௌரி சங்கர்.
'அனைவருக்கும் ஐஐடி-மெட்ராஸ்' திட்டம்
ஐஐடி-மெட்ராஸ் வழங்கும் இந்த ஆன்லைன் படிப்பு, மாணவர்களின் நிதி நிலையைப் பொறுத்து கட்டணச் சலுகைகளை வழங்குகிறது. ஒரு லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 75% சலுகையும், ஐந்து லட்சம் வரை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 50% சலுகையும் வழங்கப்படுகிறது.
கடந்த மே மாதம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒரு முன்னோடித் தேர்வு நடத்தப்பட்டது. 560 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதிய நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற 44 மாணவர்கள் அடுத்தக்கட்ட பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐஐடி-எம் வழங்கிய நான்கு வார ஆன்லைன் பயிற்சி வகுப்பின் அடிப்படையில் ஆன்லைன் தகுதித் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வில் 28 மாணவர்கள் ஆன்லைன் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, வேலூர், சேலம், விழுப்புரம், மயிலாடுதுறையில் இருந்து மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து எட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் நான்கு மாணவர்கள் பட்டியல் சமூகத்தைச் (SC) சேர்ந்தவர்கள். இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஐஐடி-எம் மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முழுமையாக ஏற்க உள்ளது.
"ஐஐடிமெட்ராஸில் சேர்ந்து படிப்பதைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு உயர்ந்த இலக்கை விதைக்கும் முயற்சியே அனைவருக்கும் ஐஐடி-எம். ஆன்லைன் பாடங்களாக இருந்தாலும் 4 ஆண்டுகள் முடிவில் இவர்களுக்கு ஐஐடியின் சான்றிதழ் மற்றும் alumni card வழங்கப்படும். வேலைவாய்ப்புகளில் சேரும் போது இந்த ஐஐடி ஆன்லைன் படிப்பு அவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பு அந்தஸ்தை கொடுக்கும்," என்று தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் சேரலாம். பள்ளிக் கல்வி வாரியம், வயது அல்லது தொழில் பின்னணி போன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. தகுதி பெற்ற மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு பட்டப்படிப்புத் திட்டத்தில் சேர முடியும். கௌரி சங்கர் போன்ற மாணவர்களின் வெற்றி, திறமைக்கு எந்தத் தடையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. கடின உழைப்பும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால், எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை இந்த மாணவர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.
தகவல் உதவி: நன்றி DT Next
10-வது ஆண்டாக தொடர்ச்சியாக நம்பர் 1 இடத்தை பிடித்த ஐஐடி மெட்ராஸ் - NIRF பட்டியல் வெளியீடு!