ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) வரும் ஜனவரி 2 முதல் 4, 2026 வரை ‘இன்ஸ்டிட்யூட் ஓபன் ஹவுஸ் 2026’ (‘Institute Open House 2026’) நிகழ்வை நடத்துகிறது. பொதுமக்கள் நேரடியாக ஐஐடி வளாகத்தின் ஆராய்ச்சி சுற்றுச்சூழலையும், புதுமை மையங்களையும் அனுபவிக்க இது ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும்.
இந்த நிகழ்வில் முன்னேற்றமான ஆராய்ச்சி ஆய்வகங்கள், புத்தாக்க மையங்கள், மாணவர்களின் தொழில்நுட்ப திட்டங்கள் போன்றவற்றை பொதுமக்கள் நேரில் சென்று காணலாம். முந்தைய ஆண்டில் சென்னை மட்டுமன்றி பல நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். பதிவு செய்ய
கடைசி நாள் – 5 டிசம்பர் 2025
பதிவு இணைப்பு: shaastra.org/open-house
வாட்ஸ்அப் சேனல்: “IITM Open House 2026”
ஐஐடிமெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில்,
“அனைவருக்கும் IITM என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்ததை முன்னிட்டு, இந்த ஆண்டும் நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் பெருமளவில் வரவேண்டும். இதன் மூலம் அவர்கள் ஊக்கம்பெற்று, எதிர்காலத்தில் நமது மாணவர்களாக திரும்ப வருவார்கள்,” என்றார்.
இன்ஸ்டிட்யூட் ஓபன் ஹவுஸ் 2026 – சிறப்பம்சங்கள்
- 80-க்கும் மேற்பட்ட கண்காட்சி ஸ்டால்கள் – மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னின்று நடத்தும் ஆராய்ச்சி, புதுமை மற்றும் நேரடி டெமோ திட்டங்கள்
- 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் – 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 நிறுவனம் நடத்தும் ஆராய்ச்சி மையங்கள், 15 சிறப்பு மேம்பாட்டு மையங்கள்
- 95,000-க்கும் மேற்பட்ட பதிவுகள், 60,000 பார்வையாளர்கள் வருகை எதிர்பார்ப்பு – ஐஐடி மெராஸ் நடத்திய மிகப்பெரிய பொது ஈடுபாட்டு நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
முந்தைய (2025) நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
- 35,000-க்கு மேற்பட்ட மக்கள் வருகை – 2024-ஐ விட இருமடங்கு அதிக வருகையாகும் இது.
- 130 கிராமப்புற பள்ளிகள் பங்கேற்பு உட்பட 550-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்பு;
- 250 இந்திய நகரங்களில் இருந்து பங்கேற்பு; அதில் 118 கிராமங்கள்
- இணையதளத்தில் 20,000-க்கும் மேற்பட்ட வருகைகள்,
- 200-க்கும் மேற்பட்ட மாணவர், பணியாளர் தன்னார்வலர்கள் – 4,000 மணிநேர சேவை, 1,000 கி.மீ வரையிலான வெளிப்புற விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவைகளாகும்.
மாணவர் டீன் பேராசிரியர் என். கும்மடி கூறுகையில்,
“இது அனைத்து மக்களும் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நேரில் வந்துபார்க்கவும், இங்கு நடைபெறும் முன்னோடியான ஆராய்ச்சிகளை அனுபவிக்கவும் ஒரு அரிய வாய்ப்பு,” என்றார்.
பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் கூறுகையில், “ஐஐடி மெட்ராஸ் தன்னுடைய நவீன ஆய்வகங்களை பொதுமக்கள் முன் திறந்து காட்டும் இந்த ஆண்டு விழா, IIT-இல் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்,” என்றார்.
இந்த ஆண்டு நிகழ்ச்சி, ஐஐடி மெட்ராஸ் ஆண்டு தொழில்நுட்ப விழா Shaastra 2026 உடன் இணைந்து நடைபெறுகிறது. இதன் மூலம் வளாகத்தின் புதுமை கலாச்சாரத்தையும், ஆராய்ச்சி எவ்வாறு நிஜ உலகத் தீர்வுகளாக மாறுகிறது என்பதையும் மக்கள் நேரடியாக காணலாம்.