இந்தியாவின் அதி நுட்ப உற்பத்தி சூழலை வலுவாக்குவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக, அரிய ரக நிரந்தர காந்தங்கள் (REPM) உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அமைச்சரவை ரூ.7,280 கோடி ஒதுக்கியுள்ளது.
நாட்டின் தேவைக்காக ஆண்டுக்கு ஆறாயிரம் மெட்ரிக் டன் அரிய ரக நிரந்தர காந்தத்தை உற்பத்தி செய்வதற்கான உள்நாட்டு ஒருங்கிணைந்த விநியோக அமைப்பு நிறுவுவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை அமைகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்,
"இந்த காந்தங்கள், மிகவும் வலுவான நிரந்தர காந்த வகையைச் சேர்ந்தவை என்றும், மின்வாகனங்கள், மறுசுழற்சி எரிசக்தி நுட்பம், நுகர்வோர் மின்னணு, ஏரோஸ்பேஸ் அமைப்புகள், முக்கிய பாதுகாப்பு செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் இவை முதுகெலும்பாக அமைகின்றன,” என்று தெரிவித்தார்.
“இந்த திட்டம், அரிய ரக மண் ஆக்சைடுகளை, உலோகங்கள், உலோகத்தில் இருந்து உலோக கலவைகளாக, அவற்றில் இருந்து இறுதி அரிய ரக நிரந்தர காந்தமாக மாற்றுவதற்கான ஒருங்கிணைண்ட்ன வசதிகளை உருவாக்கும்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரிய ரக காந்தம் ஏன் முக்கியம்?
இந்த வகை காந்தங்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு மிகவும் தவிர்க்க இயலாதவை. மின் வாகனங்கள், டிரோன்கள், காற்றாலைகள், அதி நுட்ப மருத்துவ கருவிகள், ரோபோ சாதனங்கள், ஸ்மார்ட்போன் மற்றும் செயற்கைகோள்கள் போன்றவற்றில் இவை முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் அரிய ரக காந்த பயன்பாடு 2030ல் இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூய எரிசக்தி, மின் வாகனங்கள் மற்றும் மின்னணு உற்பத்தி ஆகிய துறைகளின் தேவை இதற்கு முக்கிய காரணமாக அமையும்.
எனினும், தற்போது, இதற்காக இறக்குமதியையை அதிகம் சார்ந்துள்ளது. குறிப்பாக இந்த வகை காந்த உற்பத்தி விநியோகத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச விநியோக பாதிப்பு, ஏற்றுமதி தடைகள், புவிசார் அரசியல் பிரச்சனை போன்றவை காரணமாக சிக்கல் உண்டாகிறது.
இந்நிலையில், புதிதாக கொண்டு வரப்படும் திட்டம், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த REPM உற்பத்தி சூழலை உருவாக்குவதன் மூலம், இந்த இடைவெளியை போக்கி, இறக்குமதி சார்பையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழிலுநுட்ப போட்டித்தன்மையை அதிகரிக்கும்.
திட்டத்தின் அம்சங்கள்
திட்டத்தின் கீழ் அரசு, 6,000 MTPA திறனை, ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் 1,200 MTPA என ஐந்து பயனாளிகளுக்கு, சர்வதேச அளவிலான டெண்டர் முறையில் வழங்கும். உற்பத்தி ஆலை அமைப்பதற்கான இரண்டு ஆண்டுகள் உள்பட இந்த திட்டம் ஏழு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும்.
உற்பத்தி திறனை உருவாக்குவதோடு உள்நாட்டு அரிய ரக மண் மதிப்பு சங்கிலியை உருவ்பாக்குவதும் திட்டத்தின் நோக்கம். சுரங்கம், உலோக சுத்திகரிப்பு, உலோக கலவை, மேம்பட்ட பொருட்கள் ஆகிய பிரிவுகளில் மேல் மற்றும் கீழ் நிலைகளில் முதலீடு செய்யப்படும்.
நீண்ட கால தாக்கம்
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், சுய சார்பு பெறும் இந்தியாவின் பரந்த இலக்கிற்கு ஏற்ப இந்த திட்டம் அமைகிறது. மின்வாகனம், மறுசுழற்சி எரிசக்தி உள்ளிட்ட தூய நுட்பங்களை ஆதரிப்பதன் மூலம், வெளிநாட்டு சப்ளை சைன் சார்பை குறைப்பதோடு, காலநிலை மாற்ற ஈடுபாட்டையும் இந்தியா நிறைவேற்ற முடியும்.
தொழில்துறை வல்லுனர்கள் பல்வேறு துறைகளில் திட்டத்தின் தாக்கம் இருக்கும் என கருதுகின்றனர்:
- மின் வாகனங்கள்: மோட்டர்களுக்கான அதிக திறன் காந்தங்களின் சீரான விநியோகம்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: காற்றாலை மின் உற்பத்திக்கான முக்கிய பாகங்கள்
- ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு: மேம்பட்ட அமைப்புகளுக்கான வியூக நோக்கிலான தன்னாட்சி
- மின்னணு பொருட்கள்: ஸ்மார்ட் போன், தொழில்துறை மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் உற்பத்தியில் மேம்பட்ட உறுதி தன்மை
- இதன் மூலம், இந்தியா காலப்போக்கில் இறக்குமதி சார்ந்திருக்கும் நாடு என்பதில் இருந்து அதி நுட்ப காந்த உற்பத்தி செய்யும் நாடாக மாறும். புதிய ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் உருவாகும்.
கவனிக்க வேண்டியவை
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
- சர்வதேச ஏலம் மூலம் ஐந்து பயனாளி நிறுவனங்கள் தேர்வு
- இரண்டு ஆண்டு அமைப்பு காலத்தில் வேகமான செயலாக்கம்
- சுரங்கம், சுத்திகரிப்பு, உலோக கலைவை உற்பத்தி உள்ளிட்ட பரந்த அரிய ரக மண் உற்பத்தி சூழல் உருவாக்கம்.
- மின்வாகனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு உற்பத்தி செலவுகள், விநியோக சங்கிலி மீது தாக்கம்
மொத்தத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப விடுதலை நோக்கிய பயணத்தில் இந்த திட்டம் முக்கிய நடவடிக்கையாக அமைகிறது. சர்வதேச அரிய ரக காந்த உற்பத்தி விநியோக சங்கிலியில் தனக்கான இடத்தை பெறுவதன் மூலம் இந்தியா அடுத்த தலைமுறை உற்பத்தி மற்றும் தூய எரிசக்த்தி புதுமையாக்கத்தில் முன்னிலை பெறும் வாய்ப்பு உண்டாகும்.
ஆங்கிலத்தில்: நியூக்ளியஸ் ஏஐ, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan