பொது நலனிற்கான ஏஐ மாதிரிகளை உருவாக்கும் மற்றும் இந்த நாட்டிற்கு கலாச்சார நோக்கில் உரித்தான தரவுகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது, என டெக்ஸ்பார்க்ஸ் 2025 தொழில்நுட்ப மாநாட்டில் வல்லுனர்கள் வலியுறுத்தினர்.
பெங்களூருவில் யுவர்ஸ்டோரியின், டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில், ‘ஆத்மநிர்பார் ஏஐ: சுயேட்சையான நுண்ணறிவு பொருளாதாரத்தை உருவாக்குவது' எனும் தலைப்பிலான குழு உரையாடல் நடைபெற்றது.
யுவர்ஸ்டோரி சி.ஓ.ஓ.சங்கீதா பவி, ஒருங்கிணைத்த இந்த உரையாடலில் பேசிய லைட்ஸ்பீடு இந்தியா பாட்னர் ஹேமந்த் மகாபாத்ரா,
“குழாயில் இருந்து வரும் நுண்ணறிவு போன்றதாக ஏஐ இருக்கும் என நீங்கள் நினைத்தால், அது எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில், அதை எந்த அளவு மூடியதாக வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவு செலவு மிக்கதாக அமையும்,” என்று கூறினார்.
சரியான அணுகுமுறை மூலம், சுகாதாரம், கல்வி, சட்ட அமைப்புகள் உள்ளிட்ட துறையில் தேசிய அளவிலான பலனை கொண்டு வரும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்தை வழிமொழியும் வகையில், ஆர்டிபி குலோபல் பிரின்சிபல் மதூர் மக்கர், சரியான செயல்களை நோக்கி முன்னேறி, பொது நலனுக்கான ஏஐ சேவைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பெரும்பாலும் மேற்கில் இருந்து உருவாகியிருக்கும் ஏஐ மாதிரிகளில் சரியான தரவுகள் செல்வது தொடர்பாகவும் வல்லுனர்கள் கவனம் செலுத்தினர். தேவனகரி ஏஐ இணை நிறுவனர் நகுல் குந்த்ரா, சிலிக்கான் வேலியில் உருவாக்கப்படும் ஏஐ மாதிரிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படலாம் என்றாலும் இவை இந்தியாவுக்கானவை அல்ல, என்றார்.
இந்திய தரவு தொகுப்புகள் கலாச்சார செழுமை கொண்டவை என்றும், ஏஐ மாதிரிகள் இந்த தகவல்களை புரிந்து கொண்டால் தான் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா இறையாண்மை மிக்க ஏஐ மாதிரிகளை உருவாக்குவது பற்றியும் கேள்வி எழுந்தது. பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் தரவுகளை சோதனை செய்யக்கூடியதாக இறையாண்மை மாதிரி அமையும் என்று சர்வம் ஏஐ இணை நிறுவனர் விவேக் ராகவன் கூறினார்.
“இந்த மாதிரிகளுக்கு நாம் துவக்கத்தில் இருந்து பயிற்சி அளிக்க வேண்டும்,” என்று கூறினார்.
ஏஐ நாட்டின் இயற்கையான வளமாக விளங்குகிறது என்றும், இவை வீணாகவில்லை மற்றும் அலட்சியம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஏஐ புரட்சி பேருந்தை இந்தியா தவறவிட்டுள்ளதா? எனும் கேள்விக்கு பதில் அளித்த விவேக் ராகவன், ஏதோ ஒரு இடத்தில் இருந்து, இயன்றவரை தன்னிச்சையாக இதை துவக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு காலமும், முதலீடும் தேவைப்படும், என்றும் கூறினார்.
இந்த சூழலில், சீனா அல்லது அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ஆய்வு முதலீடு குறைவாக இருக்கிறது என்றும், அரசு மற்றும் தனியார், என இரு தரப்பிலும் இது அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் ஏஐ செயல்பாடுகள் தனித்தனி தீவுகளாக நிகழ்ந்து வருவதாகவும், இந்த தொழில்நுட்ப மேடையை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் தர நிர்ணயம் தேவை என்றும் குந்த்ரா கூறினார்.
இந்த இடத்தில் தான் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் கொண்ட ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்கள் வருகின்றன. இத்தகைய ஸ்டார்ட் அப்கள் நாட்டில் இருக்கின்றன என்றும் இவற்றை ஆதரிக்கும் பொறுப்பு முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என்றும் மகாபாத்ரா தெரிவித்தார்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan