
உலக நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்து தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவர்களின் கவனத்தை அவ்வப்போது ஈர்க்கின்றன. அப்படி Open AI-யின் பார்வையை தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் தொழில்முனைவர் விஜய் ராஜி.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் ராஜி, பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். 1995 முதல் 1999 வரை 4 ஆண்டுகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில், குறிப்பாக சியாட்டிலில் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய விஜய், தொழில்நுட்பத் துறையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அனுபவம் கொண்டவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றார்.
ஃபேஸ்புக்கின் மெட்டாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, அங்குள்ள பெரிய அளவிலான நுகர்வோர் தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

விஜய் ராஜி, நிறுவனர், Statsig
மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற முன்னணி நிறுவனங்களில் கிடைத்த அனுபவத்தை வைத்து 2021ல் சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரு வீட்டுக்குள் இருக்க தன் 6 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து விதிகளின் படி அலுவலகத்தில் தன்னுடைய புதிய பயணத்திற்கான வேலைகளைச் செய்து வந்தார். விஜயின் Statsig என்பது, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மேம்படுத்தி, சரியான தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு முழுமையான தளமாகும்.
OpenAI தனது தயாரிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்கும், பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கருவிகளை உருவாக்குவதற்கும் இந்த Statsig-ன் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது.
OpenAI தனது தயாரிப்பு மேம்பாட்டுக்கு ஏற்கெனவே Statsig தளத்தைப் பயன்படுத்தி வந்தது. OpenAI தனது AI மாடல்களான ChatGPT மற்றும் Codex போன்றவற்றை மேலும் மேம்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாடுகளாக மாற்றவும் statsig உதவும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், statsig-ஐ Open AI 1.1 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தி உள்ளது. இதன் இந்திய மதிப்பு 96.877 பில்லியன் ஆகும். மேலும், அதன் நிறுவனர் OpenAI-யின் புதிய பயன்பாடுகள் (Applications) பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் ராஜி ChatGPT மற்றும் Codex உட்பட நிறுவனத்தின் அனைத்து நுகர்வோர் சார்ந்த தயாரிப்புகளுக்கான பொறியியல் பிரிவுக்குத் தலைமை தாங்குவார். இந்த நியமனம், OpenAI தனது ஆய்வு முடிவுகளை நுகர்வோர் பயன்பாடுகளாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.