+

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு; டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.25 ஆக வீழ்ச்சி...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை ஆரம்ப வர்த்தகத்திலேயே வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு 96.25 ஆக வீழ்ந்தது. உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, வலுவடைந்த அமெரிக்க டாலர் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் ஆகி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை ஆரம்ப வர்த்தகத்திலேயே வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு 96.25 ஆக வீழ்ந்தது.

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, வலுவடைந்த அமெரிக்க டாலர் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் ஆகியவை இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக நாணய வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ரூபாய் 96.19 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பின்னர், மேலும் சரிந்து 96.25 ஆக குறைந்தது. இது முந்தைய வர்த்தக நாளின் முடிவு விலையை விட 44 காசுகள் குறைவாகும்.

கடந்த வெள்ளிக்கிழமையே ரூபாய் முதல் முறையாக 96/USD எல்லையைத் தாண்டி, 95.81 என்ற வரலாற்றிலேயே குறைந்த நிலையை எட்டியிருந்தது.

CR Forex Advisors நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் பபாரி கூறுகையில்,

“கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய நிச்சயமற்ற நிலை மற்றும் வலுவான டாலர் ஆகியவை தற்போது ரூபாய்க்கு முக்கிய ஆபத்துகளாக உள்ளன. எனினும், மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிலைமை மோசமடைவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியிருப்பது சந்தைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,” என்றார்.

மேலும், தொழில்நுட்ப ரீதியாக USD/INR ஜோடிக்கு 94.80–95.10 பகுதி முக்கிய ஆதரவு நிலையாகவும், 96.00–96.50 பகுதி எதிர்ப்பு நிலையாகவும் இருக்கும், என அவர் தெரிவித்தார்.

அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் Dollar Index 0.04 சதவீதம் உயர்ந்து 99.32 ஆக இருந்தது. ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக டாலருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான Brent Crude விலை 1.83 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 111.26 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

Finrex Treasury Advisors LLP நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அனில் குமார் பன்சாலி கூறுகையில்,

“கச்சா எண்ணெய் விலை 111.50 டாலரைத் தாண்டியுள்ளதால், இந்திய ரூபாய்க்கு அதிக பாதிப்பு ஏற்படும். எண்ணெய் இறக்குமதிக்கான டாலர் தேவையும், ஃபாரின் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களாலும் ரூபாய் மேலும் பலவீனப்படுத்தப்படுகின்றன,” என்றார்.

இதற்கிடையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி சுங்க வரியை உயர்த்திய சில நாட்களிலேயே, வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி வெள்ளி இறக்குமதி உரிமம் (licensed regime) பெற்றவர்களுக்கே அனுமதிக்கப்படும்.

மே 13 அன்று அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. 3 சதவீத IGST சேர்த்து மொத்த வரிச்சுமை 18 சதவீதத்தை கடந்துள்ளது.

அந்நியச் செலாவணியின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், தேவையற்ற இறக்குமதிகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

“போர் நிறுத்தப்பட்டு ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் இயல்பாக திறக்கப்பட்டால்தான் டாலர்-ரூபாய் மாற்று விகிதத்தில் அழுத்தம் குறையும். இல்லையெனில், இந்தியாவுக்குள் டாலர் வரவை அதிகரிக்கும் புதிய திட்டங்களை RBI அறிவிக்காவிட்டால், டாலருக்கு எதிராக ரூபாய் ₹100 அளவையும் எட்டக்கூடும்,” என அனில் குமார் பன்சாலி எச்சரித்தார்.

உள்நாட்டு பங்குச்சந்தைகளிலும் கடும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 833.20 புள்ளிகள் சரிந்து 74,404.79 ஆகவும், நிப்டி 234 புள்ளிகள் வீழ்ந்து 23,401.70 ஆகவும் இருந்தது.

அதே நேரத்தில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.1,329.17 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் வாங்கியதாக பங்கு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.295 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்து, 696.988 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் கையிருப்பு 7.794 பில்லியன் டாலர் குறைந்து 690.693 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

facebook twitter