
இது 2035-ஆம் ஆண்டு என வைத்துக் கொள்வோம். அலுவலகங்கள் மனிதர்களால் அல்ல, வெறும் ‘ஏஐ ப்ராம்ப்ட்’களால் ஆளப்படுகிறது. ஸ்லைடு ஷோக்களும், மீட்டிங் அமர்வுகளும் கூட்டுச் சிந்தனைகளால் அல்லாமல், ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளால் உருவாக்கப்படுகின்றன. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் சில நாட்களிலேயே தயாரிக்கப்பட்டு விடுகின்றன. மாணவர்கள் தேர்வுகளுக்காகப் படிப்பதில்லை; மாறாக, சிறந்த ப்ராம்ப்ட்களை எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் கற்கின்றனர்.
அறிவு என்பது தேடிக் கண்டுபிடிப்பதில்லை, அது ஜெனரேட் செய்யப்படுகிறது. இத்தகைய மேலோட்டமான வசதிக்கு அப்பால், நம்மை வாட்டும் ஓர் அழுத்தமான கவலை:
செயற்கை நுண்ணறிவின் அதீதப் பயன்பாடு நம்முடைய அறிவாற்றலை மெதுவாக மழுங்கடித்து, நம் தன்னம்பிக்கையைச் சிதைக்கிறதா?
மருத்துவம் முதல் அறிவியல் வரை ஏஐ-யின் பயன்கள் மறுக்க முடியாதவை. ஆனால், அன்றாட வாழ்வில், குறைந்த முயற்சி கொண்ட வேலைகளை ஏஐ மாற்றம் செய்யும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது. 2020 ஆய்வின்படி, ஐபிஎஸ்-ஐ அடிக்கடி பயன்படுத்தும் நபர்கள், தங்கள் திசையறிவு பாதிக்கப்படவில்லை என்று நம்பினாலும், அவர்களின் இடஞ்சார்ந்த நினைவு spatial memory) கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்தது.
ஐபிஎஸ் மற்றும் ஸ்பெல் செக் போன்ற ஏஐ அல்லாத கருவிகளைக் கூட, அதிக அளவில் நம்பியிருப்பது குறிப்பிட்ட அறிவாற்றல் திறன்களைக் குறைப்பதை இந்த ஆய்வு காட்டியுள்ளது. முழுச் சிந்தனைகளும், முடிவுகளும், தகவல் தொடர்புகளும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும்போது இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அறிவாற்றல் பணிச்சுமை மாற்றம்:
நாம் நமது மூளைக்கு கொடுக்கும் வேலையை ஒரு கருவிக்கு அவுட்சோர்ஸ் செய்யும்போது, உளவியல் ரீதியாக அதை ‘அறிவாற்றல் பணிச்சுமை மாற்றம்’ (Cognitive Offloading) என்று அழைக்கிறோம். இது ஆரம்பத்தில் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம். ஆனால், ஒரு சமீபத்திய ஆய்வில், சாட்பாட்ஸ் போன்ற ஏஐ கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள், சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஈடுபடும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தகவல்களைக் கூர்மையாக மதிப்பிடும் திறனை இழந்தனர். மேலும், ஏஐ தரும் பரிந்துரைகளை ஒரு கேள்விக்குறியுமின்றி ஏற்றுக் கொண்டனர்.
பயன்படுத்தப்படாமல் இருக்கும் தசைக்குழுக்கள் பலவீனம் அடைவது போல, நமது மூளையும் தன் சூழலுக்கு ஏற்ப மாறுகிறது. இப்போது நமது மூளை, சிந்திக்கத் தேவையில்லாத நிலையில், ஊக்கமளிக்கும் வழிமுறைகளால் (predictive algorithms) சூழப்பட்டுள்ளது. விமர்சனச் சிந்தனைக்குத் தேவைப்படும் பயிற்சியை நாம் தவிர்க்கும்போது, அந்த அறிவாற்றல் தசை வீரியத்தை இழக்கிறது.
அல்காரிதமிக் மனநிறைவு: முடிவெடுக்கும் உரிமையை இழத்தல்
அலெக் வாட்சன் என்பவர் இதை ‘அல்காரிதமிக் மனநிறைவு’ (Algorithmic Complacency) என்று அழைக்கிறார். அதாவது, நாம் என்ன பார்க்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை அல்காரிதம்கள் மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. இது வெறும் இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்வதை பற்றியது மட்டுமல்ல. இது, நம்முடைய சொந்த ஆர்வங்களை விட யூடியூப் பரிந்துரைகளை அதிகம் நம்புவது, வார இறுதித் திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் தீர்மானிக்க அனுமதிப்பது. காலப்போக்கில், நாம் முடிவுகளை எடுப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்கள் கொடுக்கும் முடிவுகளைப் பெறத் தொடங்குகிறோம்.
"ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கண்ணோட்டங்கள் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைக் கொண்டிருந்தாலும், 70%-க்கும் அதிகமான பயனர்கள் இந்தச் தரவுகளை நம்புவதாக நிபுணர்கள்," கூறுகின்றனர்.
ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற கருவிகளிலிருந்து வரும் தரவுகள் பெரும்பாலும் திரிபுகள், கற்பனைகள் அல்லது குறிப்பிடத்தக்க பிழைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நாம் இந்த தரவுகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும்போது, கற்பனைகளை உண்மையாக ஏற்கத் தொடங்குகிறோம்.

கல்வி மற்றும் கார்ப்பரேட் உலகில் அச்சமூட்டும் சார்புநிலை
உயர் கல்வித் துறையில் இந்த மாற்றம் மிகவும் வேகமாக நடக்கிறது. டேவிட் ரஃபோ போன்ற பேராசிரியர்கள், மாணவர்களின் எழுத்துத் திறன் உயர்வுக்கு அவர்களின் திறமை காரணமல்ல, மாறாக ஏஐ கருவிகளின் மேம்பட்ட பயன்பாடே காரணம் என்று குறிப்பிடுகின்றனர். கட்டுரை எழுதுவது மட்டுமின்றி, கோடிங், விளக்கக் காட்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளை உருவாக்குவதிலும் இது நீள்கிறது.
பயிற்சியின் மூலம் மட்டுமே வளரும் திறன்களான வாதத் திறன், தொகுப்புத் திறன் மற்றும் அசல் சிந்தனை ஆகியவை இதன் மூலம் புறக்கணிக்கப்படுகின்றன. அடுத்த தலைமுறை தொழில் வல்லுநர்கள் ப்ராம்ப்ட் செய்வதில் வல்லுநர்களாக இருக்கலாம். ஆனால், சுயாதீனமான முடிவெடுக்கும் திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் அல்லது அசல் சிந்தனைத் திறன் ஆகியவற்றில் பின்தங்கியவர்களாக இருக்க நேரிடும்.
வேலை செய்யும் இடத்திலும் இதே நிலைதான். 90%க்கும் அதிகமான ஜென் ஸீ மற்றும் மில்லினியல் ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு ஏஐ கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அது மின்னஞ்சல்களைத் தயாரிக்கிறது, மீட்டிங் பற்றி சுருக்கமாகச் சொல்கிறது, மார்க்கெட்டிங் வாசகங்களை உருவாக்குகிறது. இந்தச் செயல்திறன் உயர்வால், சார்புநிலை வளரும் ஆபத்து அதிகம் உள்ளது.
இளைஞர்கள் ஏஐ உதவியின்றி தங்கள் யோசனைகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். தங்கள் சொந்த வார்த்தைகள் ஏஐ தொழில்நுட்பத்தால் மெருகூட்டப்பட்ட உரைக்கு ஈடாகாது என்று அஞ்சுகிறார்கள். இதன் விளைவாக, அவர்களின் தன்னம்பிக்கை குறைகிறது.
நாம் தகவல் யுகத்திலிருந்து அறிவு யுகத்திற்கு மாறிவிட்டோம். அங்கு ஏஐ தகவல்களை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் அதை தொகுக்கவும் செய்கிறது. ஆனால், இந்த அறிவு தவறான அடித்தளத்தில் கட்டப்படும்போது, விரிசல் அதிகரிக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் ஏஐ படித்து மீண்டும் எழுதும்போது, அதன் தரம் வேகமாக வீழ்ச்சியடைகிறது என்பதை காட்டினர். ஒன்பதாவது முறையின்போது, அந்த உள்ளடக்கம் பெரும்பாலும் குழப்பமானதாக மாறிவிடுகிறது. இது ‘மாடல் சரிவு’ (Model Collapse) என்று அழைக்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில், டெட்ராய்ட் காவல் துறை, ஏஐ முக அடையாள பொருத்தத்தின் அடிப்படையில் போர்ச்சா உட்ரஃப் என்ற கர்ப்பிணிப் பெண்ணைத் தவறாகக் கைது செய்தது. அவர் வெளிப்படையாகக் குற்றமற்றவர் என்றாலும், அதிகாரிகள் மனித தர்க்கத்தை விட ஏஐ பகுப்பாய்வை நம்பினர். இந்த சம்பவமும் இதைப் போன்ற மற்றவை, அதிக ஆபத்துள்ள சூழல்களில் அறிவாற்றல் பணிச்சுமை மாற்றத்தில் விளைவுகளை விளக்குகின்றன. தீர்ப்பை இயந்திரங்களிடம் ஒப்படைக்கும்போது, பிழைகள் பெருகும் - அநீதிகளும் பெருகும்.
மந்தமல்ல, அறிவாற்றல் சோர்வு:
நாம் புத்திசாலித்தனத்தை இழக்கவில்லை. நாம் ஐக்யூ புள்ளிகளை இழக்கவில்லை. ஆனால், சுயமாகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், நமது சொந்த சிந்தனையை நம்பும் திறன் மற்றும் அறிவுசார் அசவுகரியத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றை இழக்கிறோம்.
ஏஐ நம் அறிவை அழிக்காது, மாறாக அது நமது மன உறுதியை பலவீனப்படுத்தக்கூடும். நமக்கு தேவையில்லாதபோது சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவது போல.
எனவே, இந்த ஏஐ யுகத்தில் நாம் மனரீதியாக கூர்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
ப்ராம்ப்டை தாமதப்படுத்துங்கள்: ஏஐ தொழில்நுட்பத்தை கலந்தாலோசிப்பதற்கு முன், ஒரு கேள்விக்கு நீங்களே பதிலளிக்க அல்லது ஒரு பணியைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
மூளைக்குப் பயிற்சி கொடுங்கள்: விவாதங்களில் ஈடுபடுங்கள், உதவி இல்லாமல் எழுதுங்கள், நீளமான கட்டுரைகளைப் படியுங்கள்.
எல்லாவற்றையும் சரிபாருங்கள்: ஏஐ தவறுகள் செய்கிறது. நம்பகமான ஆதாரங்களைக் கொண்டு எப்போதும் சரிபார்க்கவும்.
படைப்பாற்றலைத் தூண்டுங்கள்: ஓவியம் வரையுங்கள், டைரி எழுதுங்கள், யோசியுங்கள். அது சரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அது உங்கள் சிந்தனைத் தசைகளை நெகிழ் தன்மையுடன் வைத்திருக்கும்.
செயற்கை நுண்ணறிவு என்பது இயல்பாகவே ஆபத்தானது அல்ல. ஒரு கால்குலேட்டரைப் போல, அது நாம் செய்வதை மேம்படுத்தும். ஆனால் அது நம் சிந்தனையை முற்றிலுமாக மாற்றினால், நாம் மனிதர்கள் என்ற சாரத்தையே இழக்கிறோம். இயந்திரங்களால் பிரதிபலிக்க முடியாத ஒரு விஷயத்தை அவுட்சோர்ஸ் செய்ய வேண்டாம்: மனித சிந்தனையே உண்மையானது மற்றும் அசலானது.
Edited by Induja Raghunathan