குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் பெரும்பாலும் அதிகப் பரபரப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல், சத்தமில்லாமல் நடக்கும். ஆனால், இம்முறை இது மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், இதற்கு முன்னர் குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், அவரது பதவிக்காலம் முடிவடையாத நிலையில், திடீரென கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தன் உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, குடியரசுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். அவரது இந்த திடீர் ராஜினாமா, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
தேர்தல் களத்தில் இருந்த இரண்டு போட்டியாளர்களுமே, மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால், அவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழத் தொடங்கியது.
இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று குடியரசுத் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 767 எம்.பி.க்கள் வாக்களித்தனர். அதில், 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மீதமுள்ள 15 வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்ததாக, ராஜ்யசபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி தெரிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் விரைவில் குடியரசுத் துணைத்தலைவராக பதவியேற்க இருக்கிறார்.
பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன்
திருப்பூர்காரர் ஆன சிபிஆர்
சி.பி.ராதாகிருஷ்ணனின் முழுப்பெயர், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் ஆகும். 1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் மற்றும் ஜனசங்கத்தின் சேவகராக பொதுவாழ்க்கைக்குள் வந்தார்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 1974ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார். பாரதிய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாறிய போது, அதில் ராதாகிருஷ்ணனின் பொறுப்பும் அதிகமானது. 1998ல் நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, கோவையில் பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார்.
அதன் பலனாக, 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். 2004-2007 காலக்கட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
ரத யாத்திரை
1996ல் தமிழ்நாட்டின் பாஜக மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், 1998 மற்றும் 1999ம் ஆண்டுகள் தொடர்ச்சியாக இருமுறை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். அப்போது ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதி ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்த ராதாகிருஷ்ணன், பங்குச்சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்றச் சிறப்புக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
2004ம் ஆண்டு நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார் ராதாகிருஷ்ணன். 2004 - 2007 வரை தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார். அவர் அந்தப் பதவியில் இருந்தபோது, சுமார் 19,000 கிமீ தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார்.
15வது குடியரசுத் துணைத்தலைவர்
இருமுறை அவருக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தந்த, அதே கோவை மக்களவைத் தொகுதி, 2004, 2014 மற்றும் 2019 என மூன்று முறை அவருக்கு தோல்வியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தேசிய அரசியலில் தனது கவனத்தை திருப்பினார் ராதாகிருஷ்ணன்.
2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஜார்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார். பின்னர், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை தெலுங்கானா ஆளுநராகவும், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராக, கடந்தாண்டு (2024) ஜூலை 31ம் தேதி பதவியேற்றார்.
தற்போது குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத்தலைவராகி இருக்கிறார். வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முக்கியம். அவை இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்," என குடியரசுத் துணைத்தலைவராகி இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்ற கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அரசியல் தாண்டி விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவரான ராதாகிருஷ்ணன், கல்லூரியில் டேபிள் டென்னிஸ் சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.