
125 ஆண்டு கால பாரம்பரியமிக்க ’முருகப்பா குழுமத்தின்’ நான்காம் தலைமுறையை சேர்ந்தவரும், 'கோரமண்டல் இன்டர்நேஷனல்' (Coromandel International) எமெரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன் தனது 72-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று (17.11.2025) காலமானார்.
1953 ஆம் ஆண்டு பிறந்த வெள்ளையன், முருகப்பா குழும நிறுவனங்களில் பல தலைமைப் பதவிகளை வகித்து, அவற்றின் மூலோபாய திசையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

முருகப்பா குழுமம்
முருகப்பா குழுமம் (Murugappa Group) என்பது, கடந்த 1900ம் ஆண்டு ஏ.எம். முருகப்ப செட்டியார் அவர்களால் நிறுவப்பட்ட ஒரு இந்திய கூட்டு நிறுவனமாகும். இது சைக்கிள், சர்க்கரை, உரம், உற்பத்தி எனப் பலத் தொழில்களில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் இக்குழுமம், இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தக் குழுவின் முக்கிய நிறுவனங்களில் கார்போரண்டம் யுனிவர்சல் , சோழமண்டலம் நிதி ஹோல்டிங்ஸ், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி , சோழமண்டலம் MS பொது காப்பீடு, கோரமண்டல் இன்டர்நேஷனல் , EID பாரி , பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், சாந்தி கியர்ஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா, வென்ட் (இந்தியா) மற்றும் CG பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் ஆகியவை அடங்கும். 125 ஆண்டு கால பாரம்பரியமிக்க இந்த முருகப்பா குழுமத்தின் நிகரச் சொத்து மதிப்பு 90 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், இந்தக் குழுமத்தின் நான்காம் தலைமுறையை சேர்ந்தவர் அருணாச்சலம் வெள்ளையன். முருகப்பா குழுமத்தின் பல முக்கிய பதவிகளை வகித்தவரான இவர், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமெரிட்டஸ் தலைவராகவும் பதவி வகித்தவர் ஆவார். அக்குழுமத்தில் மட்டுமின்றி நாட்டின் தொழில் துறையிலும் அனைவராலும் மதிக்கப்படும் நபராக திகழ்ந்தவர் வெள்ளையன்.
பல தசாப்தங்களாக முருகப்பா குழுமத்தை முன்னேற்றப் பாதையில் சிறப்பாக வழி நடத்தியவர் என்ற பெருமையும் வெள்ளையனுக்கு உண்டு. அதன் பல்வேறு வணிகங்களை தொலைநோக்குப் பார்வை மற்றும் நேர்மையுடன் வழிநடத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

வெள்ளையனின் பங்களிப்புகள்
முருகப்பா குழுமத்தில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் ஈஐடி பாரி லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் வாரியங்களில் அவர் முக்கியப் பணியாற்றினார். அதேபோல், கனோரியா கெமிக்கல்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எக்ஸிம் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றிலும் அவர் இயக்குநர் குழு பதவிகளை வகித்துள்ளார்.
முருகப்பா குழுமத்தை கரிம மற்றும் கனிம வழிகளில் வெள்ளையன் விரிவுபடுத்தினார். 2009 நிதியாண்டில் ரூ.15,907 கோடியாக இருந்த அதன் வருவாய், 2017 நிதியாண்டில் ரூ.30,023 கோடியாக அதிகரித்தது. இந்த முயற்சி சந்தைகளால் கவனிக்கப்பட்டது, இதன் மூலம், குழுவின் சந்தை மூலதனம் 2018 ஜனவரி மாத இறுதிக்குள் ₹11,600 கோடியிலிருந்து ₹70,000 கோடிக்கு மேல் உயர்ந்தது. முருகப்பா குழுமத்தின் இந்த அதிரடி வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், பெரும் தூணாகவும் இருந்தவர் வெள்ளையன் ஆவார்.
துணிச்சலான முடிவு
2008ம் ஆண்டு, இந்தியாவின் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான ’கோரமண்டல் இன்டர்நேஷனலல்’-இன் தலைவராக வெள்ளையன் இருந்தபோது, அவர் சில்லறை விற்பனைப் பிரிவில் எடுத்த துணிச்சலான முடிவு பெரிதும் பேசப்பட்டது.
இது பேரழிவுக்கான செய்முறை என பலர் எச்சரித்த போதிலும், அந்த விமர்சனங்களை ஓரம் தள்ளி, நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகளை ‘மை க்ரோமோர்’ என்ற பெயரில் சில்லறை வணிகமாக்கினார். சமீபத்தில், கோரமண்டல் இன்டர்நேஷனல் தனது 1,000வது மை க்ரோமோர் கடையைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இந்தக் கடைகள் பயனுள்ளதாக உள்ளது. இந்த சில்லறை விற்பனை நெட்வொர்க் நிறுவனம் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ட்ரோன் மூலம் தெளித்தல், மண் பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற சேவைகளைத் தொடங்க உதவியுள்ளது.
அன்று பலராலும் விமர்சிக்கப்பட்ட வெள்ளையனின் அந்த முடிவு, இன்று கோரமண்டலின் வணிகத்தின் மையமாகவும், தொழில்துறையில் அதன் தெளிவான வேறுபாட்டாகவும் உள்ளது.

மற்ற பங்களிப்புகள்
முருகப்பா குழுமத்தை தாண்டி, இந்திய தொழில் துறை அமைப்புகளிலும் கணிசமாக பங்காற்றியவர் வெள்ளையன். அதன்படி, சதர்ன் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ், பெர்டிலைசர் அசோசியேஷன் ஆப் இந்தியா, சுகர் மில்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றில் வெள்ளையன் பங்கு குறிப்பிடத்தக்கது. இவை தவிர, கோழிக்கோடு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM-கோழிக்கோடு) ஆளுநர் குழுவின் தலைவராகவும் வெள்ளையன் இருந்துள்ளார்.
டேராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றவரான வெள்ளையன், டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் பி.காம் படித்தவர். பின்னர், இங்கிலாந்தில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள வார்விக் வணிகப் பள்ளி ஆகியவற்றிலும் கல்வி கற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டன் பல்கலைக்கழகம், வெள்ளையனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
தொழில்துறையில் தனக்கென தனி இடம் பிடித்த வெள்ளையன், வயோதிகம் காரணமாக சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (17.11.2025) தனது 72 வயதில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து முருகப்பா குழுமம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்
வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த வெள்ளையனுக்கு லலிதா வெள்ளையன் என்ற மனைவியும், அருண் வெள்ளையன் மற்றும் நாராயணன் வெள்ளையன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.