
ஆயிரம் தோல்விகளுக்குப் பிறகு தாமஸ் ஆல்வா எடிசன் ஒளிரும் பல்பை கண்டுபிடித்தார். ஒவ்வொரு தோல்வியிலும் அவர் கற்றுக்கொண்ட பாடம், இறுதியாக வெற்றிகரமான ஒரு தீர்வுக்கு வழிவகுத்தது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பயணமும் இதுபோல்தான். பல தோல்விகளும் தடைகளும் இருந்தாலும், சரியான நேரத்தில் கிடைக்கும் ஒரு புதிய யோசனை (Light Bulb Moment) ஒட்டுமொத்த பாதையையும் மாற்றிவிடும்.
'Adloggs டெக்னாலஜிஸ்' ஸ்டார்ட்-அப்’ன் கதையும் அப்படி ஒரு "லைட்பல்ப் மொமென்ட்" மூலம் உருவானதுதான். இரண்டு முறை தோல்வியைச் சந்தித்தபோதும், துவண்டு போகாமல், உள்ளூர் வணிகங்களுக்கும், டெலிவரி நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க ஒரு புதிய தீர்வை கண்டறிந்தார் அதன் நிறுவனரும் செயல் தலைவருமான தர்ஷன் கிருஷ்ணசாமி. அந்த ஒரு யோசனை, இன்று Adloggs-ஐ இந்தியாவின் நம்பகமான லாஜிஸ்டிக்ஸ் சேவைகளில் ஒன்றாக உயர்த்தியுள்ளது.
இலங்கையில இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் தர்ஷன் குடும்பம். கோத்தகிரியில படிச்சதுக்கு அப்புறம், ஆஸ்திரேலியாவுல 15 வருஷம் வேலை. திருமணத்துக்குப் பிறகு கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தாங்க. லாஜிஸ்டிக்ஸ் பிசினஸ்ல நல்ல வருமானம் கிடைக்கும்னு ஆஸ்திரேலியாவுல நிதித்துறையில வேலை செஞ்சிட்டு இருந்தப்போ தெரிஞ்சுகிட்டார் தர்ஷன். இந்தத் தொழில்ல இவ்வளவு லாபம் கிடைக்குமான்னு ஒரு சின்ன நினைப்பு அப்பவே இருந்துருக்கு.
”ஒரு முறை குழந்தையோட பாஸ்போர்ட் எடுக்காம ஏர்போர்ட் போயிட்டோம், வீட்டுலேருந்து அந்த பாஸ்போர்ட்ட வாங்கிட்டு வந்து கொடுக்க எங்களுக்கு தேவையான ஒரு டெலிவரி பார்ட்னர் அப்போ இல்லை. ஒரு அவசர தேவைக்கான அடிப்படை சேவை தமிழ்நாட்டுல இல்லைங்குற அந்த அனுபவம் என்னை தொழில்முனைவரா மாத்துச்சு,”ன்னு சொல்றாரு தர்ஷன் கிருஷ்ணசாமி.

தர்ஷன் கிருஷ்ணசாமி, நிறுவனர் & சிஇஓ, Adloggs
விலையுயர்ந்த பாடங்கள்
தமிழ்நாட்டுல டெலிவரி சேவையில எவ்வளவு தேவை இருக்கு? இந்தத் துறையோட எதிர்காலம் என்னன்னு திட்டமிட்டு தன்னுடைய முதல் தொழில்முனைவு பயணத்த 2011-இல் தொடங்கி இருக்காரு தர்ஷன். தனது முதல் ஸ்டார்ட் அப் நிறுவனமான “Anything delivered” மூலம் உணவு விநியோக சேவையை அறிமுகம் செஞ்சாரு. வாடிக்கையாளர்கள் மத்தியில உணவு டெலிவரி சேவை நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கல்களால், 2015-ல் இந்த நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
"Anything delivered-ங்குறது ஒரு உணவு டெலிவரி சேவை. தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உணவு டெலிவரி செய்யப்படும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சாலும் அதை செயல்படுத்துறதுல நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால 2015ல் அந்த நிறுவனத்த மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் அதுல கிடைச்ச பாடத்த வெச்சு நேரடியா வாடிக்கையாளர் சேவையா தராம வணிகர்களோட சேர்ந்து Business 2 Businees-ஆ நடத்த திட்டமிட்டேன்."
இரண்டாவது முயற்சியும் நான்கு வருடங்கள் சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், டெலிவரி ஊழியர்களை நிர்வகிப்பது பெரும் சவாலாக இருந்தது, மேலும் அதில் லாபமும் ஈட்ட முடியவில்லை. லாஜிஸ்டிக்ஸ்ல இரண்டி முறை முயற்சி செய்து இரண்டுலயும் வெற்றி காண முடியலன்னு தொழில்முனைவு கனவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்றாரு தர்ஷன்.
தொழில்நுட்பமே தீர்வு
இரண்டு தொடர் தோல்விகள், மொத்த சேமிப்பையும் இழந்த நிலை. இது பலரையும் மனம் தளரச் செய்யும். ஆனால், தர்ஷனுக்கு இது ஒரு முடிவல்ல, ஒரு புதிய தொடக்கம். இந்தத் தோல்விகள் அவருக்கு, ஒரு தொழிலை “எப்படிச் செய்யக் கூடாது” என்ற விலைமதிப்பற்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தன.
தோல்விகள் நிலைகுலையச் செய்யலாம், ஆனால், உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்பதில் மட்டும் தீர்மானமாக இருந்தார் தர்ஷன். லாஜிஸ்டிக்ஸ் துறையில் லாபத்துடன் நிலைத்திருக்க அதனை டெக்னாலஜி சார்ந்ததாக மாற்றியமைத்தால் வெற்றிக்கான சாத்தியம் இருப்பதாக உணர்ந்தார்.
இந்த ‘லைட் பல்ப் மொமென்ட்’-ன் விளைவாக 2021-ல் Adloggs டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உருவானது. இது வணிகர்களையும், கிக் தொழிலாளர்களையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து, தங்கு தடையற்ற விநியோகச் சங்கிலியை உருவாக்கும் திட்டம். ரூ. 50 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த SAAS அடிப்படையிலான புதிய தீர்வுக்கு நான்கு ஆண்டுகளில், Multiply Ventures மற்றும் Auxano Capital நிறுவனங்களிடமிருந்து ₹10 கோடி முதலீடு கிடைத்தது. அடுத்தடுத்த முதலீடுகள் Adloggs-இன் வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதில் இன்று இந்தியாவின் நம்பகமான லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக இது திகழ்கிறது.
Adloggs எப்படி செயல்படுகிறது?
Adloggs தளத்தில் பல டெலிவரி சேவை வழங்குநர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒரு வணிகம் ஒரே ஒரு தளத்தின் மூலம் பல டெலிவரி நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் சொந்த டெலிவரி ஊழியர்களை நிர்வகிக்கவும், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் Adloggs உதவுகிறது. ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் எங்கே இருக்கின்றன என்பதை நிகழ்நேரத்தில் (real-time) கண்காணிக்கலாம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரின் நிலையை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
டெலிவரி ஊழியர்களுக்கு மிகவும் உகந்த, குறைந்த தூரம் கொண்ட வழித்தடங்களை AI தொழில்நுட்பம் பரிந்துரைக்கிறது. இது எரிபொருள் செலவைக் குறைக்கவும், டெலிவரி நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது. இந்தத் தளம் தரவு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் அதோடு வணிகங்கள், கிக் தொழிலாளர்கள், Adloggs என மூன்றுமே ஆரோக்கியமான வளர்ச்சியை தொழிலில் காண முடிகிறது என்கிறார் தர்ஷன்.
இதில் யார் பயனடையலாம்?
இந்தியாவின் வணிகச்சூழல் மிகப்பெரும் மாற்றங்களை கண்டு வருகிறது. உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகள் தங்கள் டெலிவரிகளை ஒழுங்கமைத்து, வாடிக்கையாளர்களை தக்க வைத்து விரைவான சேவையை Adloggs மூலம் பெற முடியும். சொந்தமாக ஒரு பெரிய டெலிவரி டீமை உருவாக்க முடியாத வணிகங்கள், இவர்களின் ஒருங்கிணைந்த சேவையைப் பயன்படுத்தி, தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பலாம். மருந்தகங்கள் மருந்து விநியோகத்தை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நிர்வகிக்கலாம். மேலும், சிறிய டெலிவரி நிறுவனங்கள், அட்லாக்ஸ் தளத்தின் மூலம் அதிக ஆர்டர்களைப் பெற முடியும்.
Adloggs-ன் வளர்ச்சிப் பயணம்
Adloggs, தற்போது ஒரு நாளைக்கு 30,000-க்கும் மேற்பட்ட டெலிவரிகளை மேற்கொள்கிறது. KFC, McDonald's, Swiggy, Burger King, மற்றும் Jiomart போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் Adloggs-ன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிதியாண்டில், ₹70 கோடி வருவாய் இலக்கு வைத்து தற்போது மாதம் ரூ.6.5 கோடி வருவாய் ஈட்டுகிறது.
"அட்லாக்ஸ் என்பது ஒரு டெலிவரி மேலாண்மை மட்டுமல்ல, அது டெலிவரி உலகை டிஜிட்டல் மயமாக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. இது வணிகங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு நேர்மறையான அனுபவத்தை உருவாக்குகிறது. டெலிவரி துறையில் பணிபுரியும் போது, கிக் தொழிலாளர்களுக்கு (gig workers) சிறந்த தீர்வு தேவை என்பதை உணர்ந்து, ஏக் பாரத் (Ek Bharat) என்கிற ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 7,000+ ரைடர்களுக்கு வேலைவாய்ப்பும் நிலையான வருமானத்திற்கும் வழி வகுத்திருக்கிறோம்," என்கிறார் தர்ஷன் கிருஷ்ணசாமி.
ஒரு டயர் 3 நகரத்தில் தொடங்கி, இன்று பான்-இந்திய அளவில் கால்பதித்து, MENA (சவுதி அரேபியா, UAE), அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யத் தயாராகி வருகிறது Adloggs. தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். சரியான பாடத்தைக் கற்றுக்கொண்டால், எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு ஸ்டார்ட் அப்பை வெற்றிகரமானதாக மாற்ற முடியும் என்பதே, தர்ஷன் கிருஷ்ணசாமியின் பயணம் நமக்கு உணர்த்தும் ஸ்டார்ட்-அப் கதை.