+

'தேசிய நல்லாசிரியர் விருது' - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இரு பெண் ஆசிரியர்கள்!

2025-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 2 தமிழக ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். சென்னை மயிலாப்பூர் சிபிஎஸ்இ முதல்வர் டாக்டர் ரேவதி பரமேஸ்வரன் மற்றும் உடுமலைப் பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களுக்கு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ’தேசிய நல்லாசிரியர் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் இந்த மதிப்புமிக்க விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

விருது பெறும் ஆசிரியர்கள் டாக்டர் ரேவதி பரமேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் சிறப்பான பங்களிப்புகள் குறித்து இங்கே காணலாம்.

கணிதம் எளிதே!

சென்னை மயிலாப்பூர் சிபிஎஸ்இ பள்ளியான பி.ஸ்.சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வராக 8 ஆண்டுகளாக இருந்து வருகிறார் டாக்டர்.ரேவதி பரமேஸ்வரன். 34 ஆண்டுகள் கணித ஆசிரியராகவும் இருந்து வருகிறார். கணிதப் பாடம் என்றாலே கஷ்டம் என நினைக்கும் மாணவர்களின் எண்ணத்தை மாற்றுவதற்காக தொடர்ந்து கணிதப் பாடங்களை எளிமையாகக் கற்றுத் தரும் பயிற்சியை செய்து வருகிறார். மாணவர்களுக்கு விளக்கங்களுடன் கூடிய வகுப்புகளை யூடியூப்பில் வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகிறார்.

விஜயலட்சுமி

டாக்டர் விஜயலட்சுமி பரமேஸ்வரன், தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்

  • புதுமையான கற்பித்தல் முறைகள்: கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், கதை சொல்லுதல், கலை மற்றும் தொழில்நுட்பம் போன்ற புதுமையான அணுகுமுறைகளை பயன்படுத்தி கற்பிக்கிறார் ரேவதி. இது மாணவர்கள் எளிதில் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள உதவுவதால், கணிதப் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து கற்றல் திறன் மேம்பட உதவுகிறது.

  • கற்றல் வளங்கள்: ஆராய்ச்சிகள் செய்து தான் கற்றவற்றை ஆசிரியர்களுக்கும் பயிற்சி பட்டறைகள் நடத்தி மற்ற ஆசிரியர்களுக்கும் கணிதப் பாடத்தை எப்படி எளிதாக நடத்தலாம் என்பதை புரிய வைக்கிறார். Capacity building என்கிற பெயரில் இவற்றை செய்து வருகிறார்.

  • சமூக பங்களிப்பு: கணிதத்தை எப்படி எளிதாக சொல்லிக் கொடுக்கலாம் என்று பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவிலான மாநாடுகளில் பங்கேற்று தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை குறித்து பேசியும் இருக்கிறார்.
“ஆசிரியர் தொழிலில் முதலில் நாம் கற்றுக் கொள்பவர்கள். எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், படிப்பவற்றை மற்ற குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்போது தான் ஆராய்ச்சிக்கான பலன் அனைவரையும் சென்றடையும். மாணவர்களுக்கு கருத்தாக்கங்களை தெளிவாக சொல்லித் தர வேண்டும், டெக்னாலஜி அப்டேட்களுக்கு ஏற்றாற் போல ஆசிரியர்களும் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்தாலே கணிதப் பாடம் கஷ்டம் என்ற எண்ணம் எந்த மாணவருக்கும் வராது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, மனநிறைவாக இருக்கிறது. தொடர்ந்து உற்சாகத்துடன் பயணிக்க இந்த விருது என்னை ஊக்கப்படுத்தும்,” என்று ரேவதி பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஊக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புவியியல் பட்டதாரி ஆசிரியையாக இருக்கிறார் விஜயலட்சுமி.

" align="center">விஜயலட்சும்

விஜயலட்சுமி, தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்

  • போட்டிகளில் வெற்றி: 1998-ம் ஆண்டு ஆசிரியர் பணியைத் தொடங்கியுள்ளார் விஜயலட்சுமி. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள முடீஸ் அரசுப் பள்ளியில் 12 ஆண்டுகள் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி உள்ளார். மாணவர்களை வட்டார, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறச் செய்திருக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களிடம் ஆர்வத்தை விதைத்த விஜயலட்சுமியின் முயற்சியால் இன்று பல மாணவர்கள் விளையாட்டுப் பிரிவின் கீழ் நல்ல பதவிகளில் இருப்பதாக பெருமையோடு தெரிவித்துள்ளார்.

  • பெண் குழந்தைகள் முன்னேற்றம்: 2010ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று பட்டதாரி புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் விஜயலட்சுமி. பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியைத் தொடங்கியவர் பெண் குழந்தைகள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு கற்பித்தல் பணியை செய்து வருகிறார். 2020ல் தமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ளார்.
“தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் இந்த விருதை என்னுடைய பள்ளி மாணவர்கள், பெற்றோம் மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த அரசு மற்றும் அதிகாரிகளினால் சிறப்பான ஆசிரியராக முடிந்தது, அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று ஆசிரியை விஜயலட்சுமி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
national best teachers

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

இந்த இரு ஆசிரியர்களும், கல்வித்துறையில் தாங்கள் செய்யும் பணிக்காக மட்டுமல்லாமல், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பங்களித்து வருகிறார்கள். தங்கள் கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களின் அறிவை மேம்படுத்தி, சமூக பொறுப்புள்ள குடிமக்களாக அவர்களை உருவாக்குகிறார்கள். இவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தமிழகத்தைச் சேர்ந்த 2 நல்லாசிரியர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இருந்து 45 நல்லாசிரியர்கள் விருதுகளைப் பெறப் போகின்றனர். தேசிய நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் யுவர் ஸ்டோரி தமிழின் வாழ்த்துக்கள்! அவர்களின் சேவை மேலும் பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும்.

facebook twitter