இந்தியாவின் பிரதமராக இருமுறை பணியாற்றிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர். இவர் தான் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர். இந்தியாவில் அதிக வருடங்கள் பிரதமராகப் பதவி வகித்தவரில், நான்காவது இடத்தைப் பிடித்தவர். இந்திரா காந்தி உட்பட 7 பிரதமர்களுடன் பணியாற்றியுள்ளார்.
சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மன்மோகன் சிங், பின்னாளில் நவீன இந்தியாவின் பொருளாதாரச் சிற்பியாகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
அகதியாக வந்தவர்
1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா எனும் கிராமத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங். தற்போது அக்கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் மன்மோகன் சிங்கின் குடும்பமும் ஒன்று.
அவர்கள் ஆரம்பத்தில் உத்தராகண்டில் அமைக்கப்பட்டிருந்த ஹல்த்வானி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். திடீரென ஏற்பட்ட குடிபெயர்ப்பால், பாகிஸ்தானில் தனது படிப்பைத் தொடர முடியாத மன்மோகன் சிங், அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்றார்.
படிப்பில் கெட்டிக்காரர்
படிப்பில் சிறந்தவராக இருந்த மன்மோகன் சிங், குடும்பச் சூழலையும் தாண்டி, 1962ல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கௌரவம் மிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் மன்மோகன்சிங்.
ஐக்கிய நாடுகள் அவையின் வர்த்தக மேம்பாட்டுக்கான பிரிவில், 1966 முதல் 1969 வரை, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான ரவுல் ப்ரீபிஷ் தலைமையில் பணியாற்றிய பெருமை பெற்றவர் மன்மோகன் சிங். பின்னர், ஐக்கிய நாடுகள் அவையின் பணியிலிருந்து விலகி, டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராக சேர்ந்தார்.
தேடி வந்த உயர்பதவிகள்
1971ம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். அவரது திறமைக்கு கிடைத்த பரிசாக, ஒரே ஆண்டில் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங். அதன் தொடர்ச்சியாக, 1982 முதல் 1985ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், பின்னர், 1985 முதல் 1987ம் ஆண்டு வரை திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். இதுதவிர, பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர், என அவர் வகித்த பதவிகள் ஒவ்வொன்றிலும் தனிமுத்திரையைப் பதித்தார்.
அந்தக் காலகட்டத்தில் அவரது சிறப்பான நிர்வாகத் திறமையைப் பாராட்டி, 1987ல் இந்திய அரசின் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டது.
நன்மதிப்பால் கிடைத்த பதவி
பணிரீதியாக பல உயர்வுகளை மன்மோகன் சிங்சந்தித்தபோது, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்களே பிரதமர்களாக பதவியில் இருந்தார்கள். திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்த அவரை பிரதமருக்கான பொருளாதார ஆலோசகராக நியமித்தது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திதான்.
1991ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, நரசிம்மராவ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவித்தது. அந்தக் காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன்சிங், நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தியின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதால் மன்மோகன்சிங்கிற்கு அப்பதவி வழங்கப்பட்டது.
பொருளாதார சீர்திருத்தத்தின் மூளை
அந்த காலகட்டத்தில்தான், இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை, அப்போதைய பிரதமர் நரசிம்மராவுடன் இணைந்து மன்மோகன்சிங் அமலாக்கினார். அதனால்தான், இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படுகிறார் மன்மோகன் சிங்.
அவரது சிறந்த நிதி மேலாண்மையை கௌரவிக்கும் வகையில், 1993 மற்றும் 1994ம் ஆண்டுகளில் சிறந்த நிதி அமைச்சருக்கான 'ஆசியா மணி’ (Asia Money Award for Finance Minister of the Year) விருதும், 1993ம் ஆண்டு யூரோ மணி (Euro Money Award for Finance Minister of the Year) விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.
தனது பதவிக் காலத்தில் மன்மோகன் சிங் எடுத்த சில முக்கியமான முடிவுகள் இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியமைத்தன. பின்னாளில் வங்கிகளில் தனியாருக்கான கதவுகளை அவரே திறந்துவிட்டார். பொதுத்துறையின் பங்குகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தனியாருக்கு விற்பது என்ற முடிவு இதில் மிக முக்கியமானது.
விமர்சனங்களுக்கு பதிலடி
மன்மோகன் சிங்கின் இந்த திட்டங்களை, ‘நேருவின் சோஷலிசப் பாதையிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக’ எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆனாலும், தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார் மன்மோகன் சிங்.
தொடர்ந்து, அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல், வணிக முறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல், தொழில்துறை சார்ந்த கட்டுப்பாடுகளை தளர்த்துதல் என மன்மோகன்சிங்கின் அதிரடிகள் தொடர்ந்தன.
இவற்றின் விளைவாக 1991ல் 127 கோடி ரூபாயாக இருந்த அந்நிய முதலீடு 1996ல் சுமார் 340 கோடி ரூபாயாக அதிகரித்தது. 1991ல் 16 விழுக்காடாக இருந்த பணவீக்கம் 1996ல் 9 விழுக்காடாகக் குறைந்தது.
தெடி வந்த பிரதமர் பதவி
தொடர்ந்து நிதி நிர்வாகத்தில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த மன்மோகன் சிங்கை, 2004ம் ஆண்டு பிரதமர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தது காங்கிரஸ். 2004ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க தேர்வானபோது, வெளிநாட்டவர் என்ற சர்ச்சையில் சிக்கிய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமராகப் பதவி ஏற்க மறுத்து விட்டார். அதனால் அப்போது கட்சியில் ஆட்சியில் அமர திறமைமிக்கவராகக் கருதப்பட்ட மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது காங்கிரஸ்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம், கல்வி பெறும் உரிமைச்சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என பலவற்றுக்கு வித்திட்டவர். இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தமும் மன்மோகன் ஆட்சியில்தான் கையெழுத்தானது. விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவின் பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8% ஆக உயர்ந்தது.
முதலாளித்துவத்திற்கு ஆதரவு
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த மன்மோகன் சிங், முதலாளித்துவத்தை ஆதரித்தார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அது தேவை என்று அவர் கருதினார்.
“இந்தியா ஏன் ஏழ்மையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே நான் பொருளாதாரம் படித்தேன்” என்று பேட்டி ஒன்றில் ஒருமுறை மன்மோகன் சிங்கே குறிப்பிட்டுள்ளார்.
மறைவு
ஆட்சிக்காலம் முடிந்த பிறகு, அரசியல் களத்தில் இருந்து சற்றே விலகி இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (26ம் தேதி) அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி, தனது 92 வயதில் அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் உட்பட முக்கியத் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மற்ற நாட்டுத் தலைவர்களும் தங்களது இரங்கல்களை சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
மவுன சாமியார்
பெரும்பாலும் அமைதியாக, அதிர்ந்து பேசாமல் காணப்பட்ட அவரை, ஊடகங்கள் மவுன சாமியார் என்றே வர்ணித்தன. ஆனால், எப்போதெல்லாம் அவர் பேசினாரோ, அப்போதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருத்துக்களை முன்வைத்தார். அதனால்தான், இந்திய பொருளாதார சீர்திருத்தவாதி, பொருளாதார மேதை, சிந்தனைச் சிற்பி என்ற பல பட்டங்களுக்குச் சொந்தக்காரராக திகழ்கிறார் மன்மோகன் சிங்.
அவரது புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவே, 2024ம் ஆண்டு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது. மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.