நாட்டின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் தனது சந்தைப் பங்கில் நவம்பர் மாதமும் பின்னடைவைக் கண்டுள்ளது. கடந்த மாதம் நிறுவனம் வெறும் 7,567 யூனிட்களையே விற்றது. இதன் மூலம் அது மொத்த EV சந்தையின் 7.2% பங்கையே பிடித்தது.
இந்த எண்ணிக்கையை ஒப்பிடுகையில், ஓலா இந்த ஆண்டு ஜனவரியில் 22,656 யூனிட்கள் விற்று, 25% சந்தைப் பங்கை மீட்டெடுத்திருந்தது. ஆனால், சேவை குறைபாடுகள், தயாரிப்பு தரப் பிரச்சினைகள், மேலும் TVS, பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களின் போட்டி ஆகியவற்றால் அதன் விற்பனை தொடர்ந்து சரிவில் உள்ளது.
இத்தகைய சூழலிலும் நிறுவனர் பாவிஷ் அகர்வால் தளரவில்லை. இரண்டாம் காலாண்டு வருவாயில் குறுகிய கால சந்தைப் பங்கை அதிகரிக்க பல நிறுவனங்கள் தள்ளுபடிகள் மற்றும் அதிக ஊக்கத்தொகைகளைப் பயன்படுத்துகின்றன; இது ஆதாயத்தை பாதிக்கக்கூடியது, என அவர் தெரிவித்தார். இதே முறையை ஓலா எலெக்ட்ரிக்கும் முந்தைய காலத்தில் பின்பற்றியதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
ஓலாவின் வீழ்ச்சிக்கிடையே, ஏதர் எனர்ஜி நாட்டின் மூன்றாவது பெரிய EV தயாரிப்பாளராக நிலைநிறுத்தியுள்ளது. நவம்பரில் நிறுவனம் 18,356 யூனிட்கள் விற்று 17.4% சந்தைப் பங்கைப் பெற்றது. இது கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 41.6% வளர்ச்சியாகும். எனினும், அக்டோபரில் ஏற்பட்ட பதிவான 26,713 யூனிட்கள் விற்பனையிலிருந்து இம்மாதம் குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் பண்டிகை சீசன் என்பதால் அதிக விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TVS மீண்டும் முன்னிலை
பாரம்பரிய நிறுவனங்களிடையேயான போட்டியில் TVS மோட்டார் நவம்பரில் மீண்டும் முதலிடம் பிடித்தது. பஜாஜ் ஆட்டோ 27,382 யூனிட்கள் விற்று 26% சந்தைப் பங்கை பெற்ற நிலையில், TVS 23,097 யூனிட்கள் விற்று 21.9% பங்கைப் பெற்றது.
சாதாரணமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் EV விற்பனை குறைவாக இருக்கும். இந்த நவம்பரில் மொத்த EV விற்பனை 1,05,291 யூனிட்கள், அக்டோபருடன் ஒப்பிடுகையில் 27.2% சரிவு. இம்மாத விற்பனையும் கடந்த ஆண்டு நவம்பர் (1,19,996 யூனிட்கள்) எண்ணிக்கையை விட குறைவு.
தொகுப்பு: முத்துகுமார்