இணையச் சேவைகளுக்கான முக்கிய உள்கட்டமைப்பை வழங்கும் ’கிளவுட்ஃபிளேர்’ (Cloudflare) நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம் (Outage) காரணமாக, உலகளவில் பல முக்கிய இணையதளங்கள் மற்றும் தளங்களின் போக்குவரத்து நேற்று வெகுவாக பாதிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
நேற்று (நவம்பர் 18) பிற்பகல், தீடிரென சாட்ஜிபிடி, X மற்றும் பல்வேறு நிறுவனங்களின் இணையதளங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு, தொடர்ந்து எரர் மெசேஜ்கள் வந்துகொண்டிருந்தன. ’கிளவுட்ஃபிளேர்’ -இல் தொடங்கிய இந்தத் திடீர் முடக்கத்தால், பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய பல இணையச் சேவைகள் சில மணி நேரம் செயல்பட முடியாமல் போயின.
இணையதளச் செயலிழப்புகளைக் கண்காணிக்கும் Downdetector இணையதளத்தின் தகவல்படி,
இந்த முடக்கத்தின் தாக்கம் பெரும்பாலும் சர்வர் இணைப்பு (Server Connection) மற்றும் இணையதளத் தொடர்பு (Website Connectivity) ஆகியவற்றில் இருந்ததாகவும், DNS (Domain Name Server) சேவைகளும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முடக்கத்திற்கான காரணம் என்ன?
ஆரம்பத்தில், இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் இருப்பதாகவும், காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் கிளவுட்ஃபிளேர் நிறுவனம் தெரிவித்தது. பின்னர், கிளவுட்ஃபிளாரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) டேனி நெக்ட் இது குறித்து விளக்கமளித்தார். அவர்,
“நாங்கள் செய்த ஒரு வழக்கமான கட்டமைப்புக் காரணமாக (Routine Configuration Change), எங்கள் பாட் தணிப்புத் திறனை (Bot Mitigation Capability) ஆதரிக்கும் சேவையில் மறைந்திருந்த ஒரு பழுதான கோட் (Latent Bug) செயலிழக்க ஆரம்பித்தது. இது எங்கள் நெட்வொர்க் மற்றும் பிற சேவைகளில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியது,” என்று தெரிவித்தார்.
கிளவுட்ஃபிளேர் நிறுவனம் என்பது இணையப் போக்குவரத்தை சீராக வைத்திருக்கவும், சைபர் தாக்குதல்கள் மற்றும் அதிகப்படியான சுமையில் இருந்து இணையதள உரிமையாளர்களைப் பாதுகாக்கவும் உதவும் மிக முக்கியமான சேவை வழங்குநராகும்.
நிலைமை சீரானது
நிறுவனத்தின் தீவிர முயற்சியைத் தொடர்ந்து, ஒரு சில மணிநேரத்தில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக கிளவுட்ஃபிளார் அறிவித்தது. இருப்பினும், முழுமையாகச் சரிசெய்யும் பணிகள் தொடர்வதால், சில பயனர்கள் இன்னும் அதிகப்படியான பிழைகளைக் (Higher Error Rates) காணக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தளத்தில் ஏற்பட்ட உலகளாவிய முடக்கத்தைப் போலவே, கிளவுட்ஃபிளேரில் ஏற்பட்ட இந்தச் சம்பவமும் ஒரு முக்கிய இணைய உள்கட்டமைப்பு சேவையில் ஏற்படும் பாதிப்பு உலகளாவிய அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.