+

‘இன்டெர்நெட்டை முற்றிலும் கூகுளின் கைகளில் விட்டுவிட முடியாது’ - அரவிந்த் ஸ்ரீனிவாசின் கருத்தால் விவாதம்!

இணையத்தில் கூகுளின் ஆதிக்கம் தொடர்பாக, குரோமுக்கு போட்டி பிரவுசரை உண்டாக்கியுள்ள ’பெர்ப்லக்சிட்டி ஏஐ’ (Perplexity ) நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. அரவிந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் சமூக ஊடகத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கூகுளின் ஆதிக்கம் தொடர்பாக, க்ரோமுக்கு போட்டி பிரவுசர் காமெட் உருவாக்கியுள்ள ’பெர்ப்லெக்சிட்டி ஏஐ’ (Perplexity) நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்த கருத்துக்கள் சமூக ஊடகத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளை எதிர்கொள்ளும் அவரது துணிவை பலரும் வரவேற்றிருந்தாலும், இது சாத்தியம் இல்லை என்பதையும் நெட்டிசன்களில் சிலர் உணர்த்தியுள்ளனர்.

Perplexity

அமெரிக்க வாழ் இந்தியரால் துவக்கப்பட்ட பெர்ப்லெக்சிட்டி ஏஐ திறன் கொண்ட தேடியந்திர சேவையை வழங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன், கூகுள் குரோமுக்கு போட்டியாக ஏஐ திறன் கொண்ட காமெட் பிரவுசரையும் அறிமுகம் செய்தது.

இணையத்தை பிரவுஸ் செய்வதில் அடுத்த கட்ட அனுபவம் என குறிப்பிடப்படும் காமெட் பிரவுசர், தகவல்களை கொண்டு வந்து தருவதோடு தொடர்புடைய சூழலையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது. உரையாடல் தன்மையோடு வழிகாட்டுகிறது.

காமெட் பிரவுசர் கணிசமாக கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் சாட்ஜிபிடி தரப்பிலும், அட்லெஸ் எனும் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரவுசர்கள் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், பெர்ப்லெக்சிட்டி நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அண்மையில், எக்ஸ் தளத்தில் கூகுளின் ஆதிக்கம் தொடர்பாக பதிவிட்டிருந்தார்.

”அதி முக்கியமான இணையத்தை முற்றிலும் கூகுளின் கைகளில் விட்டுவிட முடியாது,” எனத் தெரிவித்திருந்தவர், காமெட் பிரவுசரின் வீடியோவையும் இணைத்திருந்தார்.

கூகுள் குரோமின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்த இந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. கூகுளுக்கு சவால் விடும் அவரது துணிவு பரவலான கவனத்தை ஈர்த்தாலும், ஒரு சில நெட்டிசன்கள், இதில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டினர்.

நெட்டிசன் ஒருவர், குரோமியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட குரோம் போலவே, காமெட் பிரவுசரும் குரோமியம் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன்,

”எல்லாம் சரி, ஆனால் எப்போது நீங்கள் ஒரிஜினலான ஒன்றை உருவாக்குவீர்கள். கூகுள் சந்தையின் பெரும் பகுதியை கொண்டிருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை,” என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இன்னொரு பயனாளி,

”நீங்களும் யாரோ ஒருவர் தோளின் மீது தான் நிற்கிறீர்கள்...” என கூறி சுட்டிக்காட்டியுள்ளார்.

நெட்டிசன்களின் இந்த கருத்துகள், கூகுள் குரோமை வீழ்த்துவது கடினமானது என்பதை உணர்த்தியுள்ளது.

இதனிடையே அரவிந்த் ஸ்ரீனிவாஸ் , தொடர்ந்து காமெட் பிரவுசரை முன்னிறுத்தி வருகிறார். குரோம் பிரவுசரை ஒப்பிட்டு வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தியிருக்கிறார்.

இன்னொரு பதிவு தொடர்பான விவாதத்தில், கூகுள் ஆதிக்கத்தை எந்த ஸ்டார்ட் அப்பாலும் முடிவுக்கு கொண்டு வர முடியாது என ஒருவர் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீனிவாஸ், யூடியூப் மற்றும் மேப்ஸ் சேவையில் இது மிகவும் கடினம் என்றாலும், மற்ற பிரிவுகளில் சாத்தியமே, என்று கூறியுள்ளார்.

இணையத்தில் பல்வேறு பிரிவுகளில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவது தொழில்நுட்ப உலகில் உணரப்பட்டுள்ள நிலையில், கூகுள் சேவைகளுக்கு போட்டியாக உருவாகும் சேவைகள் மீதும் பரவலான கவனம் ஏற்படுகிறது. எனினும், நடைமுறையில் இது சாத்தியமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter