'முயற்சிக்கு ஏழ்மை தடையல்ல' - நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி தனுஷா!

06:01 PM Aug 08, 2025 | Gajalakshmi Mahalingam

ஏழ்மை ஒரு தடையாக இல்லாமல் முயற்சியே வெற்றிக்கு முக்கியமான ஆயுதம் என்பதை நிரூபித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி தனுஷா. மூன்று வருடங்களாக நீட் தேர்வில் விடாமுயற்சியோடு படித்து பங்கேற்று, தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பைத் தொடங்க உள்ளார்.

அறந்தாங்கி தாலுகா கொடிவயல் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகள் தனுஷா சிறு வயதில் இருந்தே அரசுப் பள்ளியில் படித்தவர். கொத்தமங்கலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த தனுஷாவிற்கு மருத்துவராக வேண்டும் என்கிற கனவு இருந்தது. சரியான வழிகாட்டுதல் இல்லை, அரசுப் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்ததால் அவரால் முதல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

சோர்ந்து போகாமல் எதனால் தோல்வி அடைந்தார் என்பதை ஆராய்ந்த தனுஷா, இயற்பியல், வேதியியல் பாடங்களை சரியாக பயிற்சி செய்யாமல் பயாலஜி பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது தவறு என்பதை உணர்ந்தார்.

இரண்டாவது முறை நீட் தேர்வுக்கு தயாராவதற்காக இலவச பயிற்சி மையத்தை நாடி பயிற்சி பெற்றார். அவருடைய விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது இரண்டாவது முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், 100 நாள் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தும் அம்மா, தம்பி, வயதான தாத்தா என தினசரி வாழ்வாதாரமே ஒரு சவாலாக இருந்தது. அதனால் தனுஷாவால் கல்லூரியில் சேர முடியவில்லை.

குடும்பச் சூழலை மாற்றுவது முயற்சியால்தான் சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் அவர் கல்விப் பாதையில் தொடர்ந்து போராடி வந்தார். மூன்றாவது முயற்சியாக நீட் தேர்வு எழுதிய தனுஷா மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் 29வது இடமும் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தனுஷாவின் வெற்றி அவரது தாய் மற்றும் குடும்பத்தினருக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. மருத்துவ கலந்தாய்வில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளார் இந்த மாணவி.

7.5% இடஒதுக்கீட்டின் பங்கு:

தனுஷாவின் வெற்றிக்கு அவரது விடாமுயற்சியும், தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீடும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

“சின்ன வயசுல இருந்தே டாக்டராவணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா அவ்ளோ காசு வேணுமே அது சாத்தியமில்லைன்னு நினைச்சேன். 7.5% அரசு பள்ளி இடஒதுக்கீடு வந்ததிலிருந்து தான் நம்பிக்கை வந்தது. இல்லைன்னா என்னோட டாக்டர் கனவு நிறைவேறி இருக்காது,” என்கிறார் தனுஷா.

தனுஷாவின் இந்த வெற்றிப் பயணம், சமூகத்தின் பின்னடைவுகளைத் தாண்டி, கல்வி ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பொருளாதார தடைகள் இருந்தாலும் கனவு காணவும் அதற்காக போராடவும் யாருக்கும் தடையில்லை என்பதற்கான உயிரோட்டமான உதாரணம். “முயற்சிதான் வெற்றியை தீர்மானிக்கும்” என்பதை தனுஷா தனது வாழ்க்கை மூலம் நிரூபித்துள்ளார்.