+

Indium மென்பொருள் நிறுவனத்தின் சிஓஓ-ஆக ராம் கிசாம்பூர் நியமனம்!

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனமான இண்டியம் மென்பொருள் (Indium Software) தலைமை செயலாக்க அதிகாரியாக ராம் கிசாம்பூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவில் உள்ளது இண்டியம் மென்பொருள் (Indium software) நிறுவனம். லண்டன், சிங்கப்பூர், இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் இதன் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இயந்திர கற்றல் (Machine Learning), ஜெனரேட்டிவ் AI (Generative AI) மற்றும் டேட்டா இன்ஜினியரிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வணிகங்களுக்கு புதுமையான தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

வங்கி மற்றும் நிதிச் சேவைகள், சுகாதாரம், உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளுக்கும் இந்நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இண்டியம் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், அதன் வளர்ச்சிக்கு மேலும் வழி வகுக்கும் விதமாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக ராம் கிசாம்பூர் நியமிக்கப்பட்டுள்ளதாக இண்டியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழில்நுட்பத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ராம் கிசாம்பூர். இதற்கு முன் அவர் LTIMindtree நிறுவனத்தில் தலைமை விநியோக அதிகாரியாக (Chief Delivery Officer) பணியாற்றி வந்தார். அங்கு அவர் உலகளாவிய வாடிக்கையாளர் விநியோகம், திறன் மேலாண்மை உள்ளிட்ட வணிக முயற்சிகளை மேற்பார்வையிட்டுள்ளார். அத்துடன், காக்னிசண்ட் (Cognizant), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மற்றும் டான்ஸ்கே ஐடி (Danske IT) போன்ற முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது அனுபவம், நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதிலும், பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று இண்டியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் குறித்து இண்டியம்-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம் சுகுமார் கூறுகையில்,

“இண்டியம் அதன் AI-first அணுகுமுறை மூலம் வாடிக்கையாளர்களுடனான உறவுகளை விரிவுபடுத்தி, உலகளாவிய விநியோக திறன்களை வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், எங்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிக்கலான திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் ராம் கிசாம்பூரின் அனுபவம் உதவியாக இருக்கும். ராமின் நியமனத்தால் எங்கள் AI-driven தீர்வுகளில் விரைவுத் தன்மை கிடைக்கும், எங்கள் நிறுவனத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் முடியும். மேலும், எங்களின் அடுத்தகட்ட அதிவேக வளர்ச்சிப் பயணத்தை நாங்கள் தீவிரப்படுத்த அவரின் ஆலோசனைகள் உதவும்,” என்றும் தெரிவித்தார்.

" align="center">ram indium

ராம் கிசாம்பூர், சிஓஓ, இண்டியம் மென்பொருள்

இண்டியமில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராம் கிசாம்பூர்,

“இண்டியம், வாடிக்கையாளர் திருப்தியிலும், பணியாளர்களின் நலனிலும் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனம். எனது அனுபவத்தைப் பயன்படுத்தி, செயல்பாடுகளில் அதிக திறனையும், புத்தாக்கத்தையும் கொண்டு வர உறுதுணையாக இருப்பேன், இண்டியமின் வளர்ச்சிக்காக என்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்,” என்று கூறினார்.

இந்த புதிய தலைமைப் பொறுப்பு மாற்றத்தின் ஒரு பகுதியாக, இண்டியம் நிறுவனத்தின் தற்போதைய தலைமை இயக்க அதிகாரியான ஜகந்நாத் பரத்வாஜ், தலைமை வணிக அதிகாரியாக (Chief Business Officer) நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நிறுவனத்தின் உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் ஆலோசனைப் பிரிவில் கவனம் செலுத்துவார். இத்தகைய மூத்த நிர்வாகிகளின் நியமனம், இண்டியமின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

facebook twitter