'வட்டியும் முதலும்' - தங்க நகைக்கடன் புதிய விதிமுறையும்; கடன் சுமை அவதியில் மக்களும்...

03:07 PM Apr 09, 2025 | புதுவை புதல்வன்

இந்தியாவில் தங்க நகைக்கடன் சந்தையின் வளர்ச்சி என்பது அபார வேகம் கண்டுள்ளது. எளிய முறையில் மக்கள் தங்கள் தேவைகளுக்காக விரைந்து கடன் பெறுவது தான் இதன் சக்சஸுக்கு காரணம்.

கடந்த 2024-ம் ஆண்டின் தரவுகளின் படி, இந்திய தங்க நகைக்கடன் சந்தையின் மதிப்பு ரூ.7.1 லட்சம் கோடி. வரும் 2028-ல் இதன் மதிப்பு ரூ.14.19 லட்சம் கோடியாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் தங்க நகைக்கடன் சார்ந்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறை அறிவிப்பு மக்களுக்கு சங்கடம் தந்துள்ளது. 

அரசு மற்றும் தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் என பெரும்பாலான இடங்களில் மக்கள் தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து எளிதில் கடன் பெற முடியும். கல்வி செலவு, வியாபார தேவை, மருத்துவ செலவு, அவசர தேவை என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்க நகைக்கடன் பெறுகின்றனர்.

விவசாயிகளும் தங்கள் தேவைக்காக தங்கத்தை கூட்டுறவு வங்கிகளில் வைத்து பயிர்க்கடன் பெறுவது உண்டு. இந்த வகை கடனுக்கான வட்டி குறைவு மற்றும் ‘மறு-அடகு’ வைப்பதும் சுலபம். அதன் காரணமாக தான் தங்க நகைக்கடன் சந்தையின் மதிப்பு பல லட்சம் கோடியாக உள்ளது. 

தங்க நகை கடன் - ஆர்பிஐ விதிகள் என்ன?

பழைய விதி முறைப்படி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் என மக்கள், தாங்கள் பெற்ற தங்க நகைக்கடன் மீதான வட்டியை மட்டும் செலுத்தி, கடன் காலம் அல்லது கெடுவை நீட்டிக்க முடியும். இதை ரெனீவல் (மறு-அடகு) என தங்க நகைக்கடன் வழங்கும் நிதி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறையில் வட்டியை மட்டும் செலுத்தினால் போதும், தங்க நகைக்கடன் மீதான அசல் தொகையை செலுத்த வேண்டியதில்லை. மேலும், ஓராண்டு காலத்துக்கு கடன் காலத்தை நீட்டிக்க முடியும். இப்போது இதை தான் ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.  

அதாவது, தங்க நகைக்கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் வட்டி தொகையை சேர்த்து செலுத்தினால் மட்டுமே இனி மறு-அடகு வைக்க முடியும். இதுதான் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை. தற்போது இது நடைமுறையில் உள்ளது. நகைக்கடனை வட்டியும் முதலுமாக செலுத்தினாலும் வங்கியின் அடுத்த வேலை நாளில் தான் இப்போது அதை மறுஅடகு வைக்க முடியும். 

இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். ‘இது ஏதோ வட்டிக்கடை நடைமுறை போல உள்ளது,’ என சாமானிய மக்கள் கூறுகின்றனர். இது தங்களுக்கு புதிய நிதி சுமையாக அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். இதன் மூலம் அதிக வட்டிக்கு கடன் தரும் கந்து வட்டி தொழில் செழிக்கும் என்றும் கூறியுள்ளனர். 

ஏன் இந்த புதிய விதி?

தங்க நகைக்கடன் சார்ந்து நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த புதிய விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளதாக தகவல். அதிலும் ஒரு நபருக்கு எவ்வளவு கடன் தர வேண்டும் உள்ளிட்ட வரம்புகளும் நடைமுறையில் உள்ளன. 

மக்கள் சொல்வது என்ன?

மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், தன்னிடம் இருந்த 320 கிராம் தங்க நகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 9% வட்டி விகிதத்தில் கடந்த ஆண்டு அடகு வைத்து, ரூ.15 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஓராண்டு கடந்த நிலையில், அதை அதே வங்கியில் மறுஅடகு வைக்க அதற்கு வட்டி மற்றும் அசல் தொகை ரூ.16,70,000. அந்த தொகை அவருக்கு எளிதானது அல்ல.

தங்க நகையை தன் வசம் வைப்பதற்காக இடைத்தரகர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 1,000 வீதம் நாள் ஒன்றுக்கு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு அந்த தொகையை பெற்றுள்ளார். இப்போது அதை தனியார் வட்டிக்கடையில் 24% வட்டி என்ற அடிப்படையில் அடகு வைத்து, அந்த தொகையை இடைத்தரகருக்கு வழங்கி உள்ளார். 

இந்த புதிய விதிமுறையால் பாதிக்கப்பட்ட ஒருவர், வங்கிகளின் தங்க நகைக்கடன் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் தான் இந்த இடைத்தரகர்களை கமிஷன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளார். 

மக்களின் கையறு நிலை தங்களுக்கு புரிகின்ற போதும், தங்க நகைக்கடன் சார்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையை தாங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டி உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நகைக்கடன் மீதான இந்த புதிய விதிமுறையில் சில தளர்வுகளை ஆர்பிஐ அறிவிக்க வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தங்க நகைக்கடனின் பாதை:

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க நகைக்கடன் பெறுவது என்றால் முறைசாராமல் இயங்கும் வட்டிக்கடைகளை தான் மக்கள் நாட வேண்டி இருக்கும். இங்கு வட்டி உள்ளிட்ட விவரங்களை தீர்மானிப்பது வட்டிக்கடை முதலாளிகள் தான். 

இந்த சூழலில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்க நகைக்கடன் சார்ந்து புதிய புரட்சியை ஏற்படுத்தின. வாடிக்கையாளர் நலன் சார்ந்த சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை முதலியவை இதில் இருந்தன. அதற்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிமுறை வாடிக்கையாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. 


Edited by Induja Raghunathan