
தமிழ்நாடு நீண்ட காலமாக ஒரு தொழில் வல்லமைமிக்க மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று, அதன் கவனம் ‘புதிய தொழில்நுட்பம் மற்றும் நுட்பமான அறிவு’ பக்கம் மாறுகிறது. வெற்றிகரமான தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வலுவான கூட்டணியுடன், 2032-ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே சிறந்த 20 ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாகத் திகழும் இலக்கை நோக்கி தமிழ்நாடு முன்னேறுகிறது. பல்வேறு துறைகளில் உருவாகும் புத்தாக்கங்கள் இந்த வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளன.
புதிய நிறுவனத் தலைவர்களின் அலை இந்த மாற்றத்திற்கு உந்துசக்தியாக உள்ளது. வளர்ச்சியானது தூய்மையானதாகவும், அறிவார்ந்ததாகவும், எல்லோரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர். தூய போக்குவரத்து மற்றும் மேம்பட்ட உற்பத்தி முதல் ‘சாஸ்’ மற்றும் நிலைத்தன்மையுள்ள துணி உற்பத்தி வரை, இந்தப் புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய பலங்களை எதிர்காலத்தின் எந்திரங்களாக மாற்றுகின்றன.
‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-ல் இந்தக் குறிக்கோளானது முக்கிய இடத்தை வகிக்கிறது. தொழில்நுட்பமும் நோக்கமும் ஒருசேரச் செயல்படும்போது வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை டோரஸ் ரோபாட்டிக்ஸ் (Torus Robotics), கிம்ஸ் (GIMS), கல்லாபாக்ஸ் (Gallabox) மற்றும் கிளாடியா (Glaudia Sustainable Textiles) போன்ற புதிய ஸ்டார்ட்அப்கள் மாற்றி அமைக்கின்றன.

டோரஸ் ரோபாட்டிக்ஸ் (Torus Robotics)
2019-ம் ஆண்டு சென்னையில் விக்னேஷ் மணிமாறன், விபாகர் செந்தில் குமார் மற்றும் அபி விக்னேஷ் கந்தசாமி ஆகியோரால் நிறுவப்பட்ட 'டோரஸ் ரோபாட்டிக்ஸ்' நிறுவனம், இந்தியாவின் அடுத்த தலைமுறை இயக்க அமைப்பை வடிவமைக்கிறது. இது, சாதாரண ரேடியல் - ஃப்ளக்ஸ் இயந்திரங்களைவிட மிகக் குறைந்த எடை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட சிறிய ‘ஆக்ஸியல் - ஃப்ளக்ஸ்’ மோட்டார்கள் மற்றும் கட்டுப்படுத்திகளைக் கொண்டு உருவாக்கிவருகிறது.
இந்தத் தொழில்நுட்பமானது மின்சார வாகனங்கள், டிராக்டர்கள் முதல் ஏர் கண்டிஷனிங் அமைப்புகள் மற்றும் தொழிற்சாலை மின்விசிறிகள் வரை பலவிதமான பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இது, அதிக திறன் அடர்த்தி கொண்ட ஹார்டுவேர் செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருளையும் இணைக்கிறது. இதனால், இயந்திரத்தின் பழுதுகளை முன்கூட்டியே கணித்து பராமரிக்கவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவும் முடியும்.
“சென்னையில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, உலகிற்காக உருவாக்கப்பட்ட நிலையான இயக்க அமைப்புகளுக்கு, உலகளாவிய தர நிர்ணயத்தை அமைப்பதே எங்கள் இலக்கு,” என்று விக்னேஷ் மணிமாறன் கூறுகிறார்.

Torus Robotics நிறுவனர்கள்
டோரஸ் ரோபாட்டிக்ஸ் நிறுவனம், மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், பயன்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், இறக்குமதிச் சார்பைக் குறைப்பதன் மூலமும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதிக்குத் தயாராக உள்ள மோட்டார் மற்றும் கட்டுப்படுத்தி தொழில்நுட்பத்தின் மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துகிறது.
இஸ்ரோ, ஐநா சபை, எரிசக்தி திறன் பணியகம், சிஐஐ (CII) போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் ‘ஆக்ஸியல் - ஃப்ளக்ஸ்’ கட்டமைப்பு, TNIFMC, SINE IIT Bombay, Forge Innovation & Ventures போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து நிதியுதவியையும் பெற்று இந்த நிறுவனம் தற்போது பல்லாயிரக்கணக்கான அலகுகளை (units) உற்பத்தி செய்யும் நிலைக்கு வளர்ந்து வருகிறது.
கிம்ஸ் (GIMS)
குஹன் குணசேகரன் என்பவரால் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Guhan Industrial and Manufacturing Solutions (GIMS) நிறுவனம், இந்திய உற்பத்தி துறையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியைக் களைய முயற்சிக்கிறது: அது இறக்குமதி செய்யப்படும் இயந்திரக் கருவிகளைச் சார்ந்திருப்பது. இந்நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்பான ‘Katana’ என்ற abrasive waterjet அமைப்புகள், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பு, செமிகண்டக்டர்கள் முதல் ராணுவத் தளவாடங்கள் வரை, விண்வெளி ஆய்வு, பாதுகாப்புத் துறை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு பெரிய தொழில்களுக்கான பலவிதமான மூலப்பொருட்களைக் கையாளும் திறன் கொண்டது.
‘Katana’ அமைப்புகள், வகுப்பறைகளுக்கான சிறிய கருவிகள் முதல் தொழில்துறைகளுக்கான நடுத்தர இயந்திரங்கள் வரை பல மாடல்களில் கிடைக்கின்றன. இவை குறைந்த விலையிலும் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், உலகளாவிய தொழில்நுட்பங்களை அதிக விலை காரணமாகப் பயன்படுத்த முடியாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் கூட, இந்த அட்வான்ஸ் மெஷினிங் நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது.
“உற்பத்தியில் உள்ள புத்தாக்கம் என்பது வெறும் இயந்திரங்களைப் பற்றியது அல்ல; அது மக்களுக்கும், தொழில்களுக்கும், ஒட்டுமொத்த நாடுகளுக்கும் தங்கள் எதிர்காலத்தை உருவாக்க வலுவூட்டுவதைப் பற்றியது,” என்கிறார் குணசேகரன்.
‘StartupTN’-ன் ஆதரவுடனும், ஐஐடி மெட்ராசின் ஆரம்பகட்டப் பங்களிப்புடனும், GIMS நிறுவனம் தற்போது ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. தொழில் திறனை உருவாக்குதல், ஐடிஐ மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மற்றும் சிறு வணிகங்களுக்கு உலகத் தரமான துல்லியமான உற்பத்தித் தயாரிப்புகளை வழங்குதல் ஆகிய திறன்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
கல்லாபாக்ஸ் (Gallabox)
கார்த்திக் ஜெகந்நாதன், யதீந்தர் பஞ்சநாதன் மற்றும் யோகேஷ் நாராயணன் ஆகியோரால் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Gallabox நிறுவனம், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு உரையாடல் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தளம், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் B2C விற்பனைக் குழுக்களுக்கு, சாதாரண அரட்டையை விற்பனையாக மாற்ற உதவுகிறது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் வாய்ஸ் அம்சம், வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திறமையாக அடையாளம் காணவும், சந்திப்புகளை முன்பதிவு செய்வதையும் ஆர்டர்களைச் செயல்படுத்தவும் பெரிய அளவில் உள்ள வாடிக்கையாளர்களைத் தானியங்கு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல்கள் மூலம் கையாளவும் நிர்வகிக்கவும் உதவுகிறது.

கல்லாபாக்ஸ்; சென்னையில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த 75 பேர் இதன் குழுவில் பணிபுரிகின்றனர். ஒரு சில ஆண்டுகளில், இந்த ஸ்டார்ட்அப் 40 நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதற்கு பிரைம் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் ஃபியூஸ் விசி ஆகிய நிறுவனங்கள் அளித்த நிதியுதவி முக்கிய காரணம்.
“விற்பனைக் குழுக்களுக்கு உலகளவில் உள்ள முதன்மையான சவால், வாடிக்கையாளர்கள் கசிந்து போவது ஆகும். நுகர்வோர் பொதுவாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூலம் வணிக நிறுவனங்களுடன் பேசவே விரும்புகிறார்கள். அந்த உரையாடல்களை, கல்லாபாக்ஸ் மிக எளிதாக வருமானமாக மாற்ற அவர்களுக்கு உதவுகிறது,” என்கிறார் இதன் இணை நிறுவனர் கார்த்திக் ஜெகநாதன்.
சென்னை, துபாய் மற்றும் டெலாவேர் ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ள கல்லாபாக்ஸ், தன்னை உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவுத் துறையில் வேகமாக வளரும் நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது. இது, கடும் போட்டி நிறைந்த ‘சாஸ்’ (SaaS) சந்தையில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உலகளாவிய ஸ்டார்ட்அப் தடத்தை வலுப்படுத்துகிறது.
கிளாடியா சஸ்டைனபிள் டெக்ஸ்டைல்ஸ் (Glaudia Sustainable Textiles)
தமிழ்நாட்டின் திருப்பூரைத் தளமாகக் கொண்ட வோனிட் என்ற வர்த்தக பெயர் கொண்ட கிளாடியா சஸ்டைனபிள் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், நூறு சதவீதம் இயற்கையான, கழிவு இல்லாத சாயமிடும் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்துகிறது. இந்த முறையில், தாவரங்கள் மற்றும் கடலிலிருந்து பெறப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆர். கிளாடிஸ் லூர்து ஜோசபின் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த சாயமிடும் முறைக்கும், நவீன ஃபேஷன் சப்ளை செயின்களின் தேவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.
கையால் செய்யப்பட்ட சோதனையாகத் தொடங்கியது, இப்போது விரிவுபடுத்தக்கூடிய மற்றும் தொடர்ந்து செய்யக்கூடிய ஒரு செயல்முறையாக பரிணமித்துள்ளது. சாயத்திற்கான மூலப்பொருட்களுக்காக விவசாயிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி நேரடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நிலையான நுட்பங்களில் பயிற்சி அளிக்கும் திறன் பட்டறைகளையும் நடத்தியுள்ளது.
செயற்கை சாயங்களுக்குப் பதிலாக இயற்கை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கிளாடியா நிறுவனம் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், நீர் பயன்பாட்டையும் குறைக்கிறது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் ஜவுளித் துறையில் உள்ளூர் மக்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
“ஒரு பிராண்டாக, ஆடை தயாரிப்பினால் பூமிக்கு விலை கொடுக்க வேண்டியதில்லை என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறும் ஜோசபின், “எங்கள் பயணம் என்பது, இயற்கையான சாயமிடும் பாரம்பரியங்களை நவீன புத்தாக்கத்துடன் புதுப்பிப்பதாகும். இதன் மூலம், ஆடைகளை மக்களுக்குப் பாதுகாப்பானதாகவும், சமுதாயத்திற்கு நிலையானதாகவும், இயற்கைக்கும் நலன் பயப்பதாகவும் மாற்ற முடியும்,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
TANSEED-இன் அங்கீகாரம் மற்றும் ஃபேஷன் பிராண்டுகளுடனான கூட்டு முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், நிலைத்தன்மை எப்படிப் பெரிய அளவில் வளர முடியும் என்பதை கிளாடியா நிறுவனம் நிரூபித்துக் காட்டுகிறது. அதோடு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் அதேசமயம் வணிகரீதியாகச் சாத்தியமானதாகவும் இருக்கும் ஜவுளிகளுக்கான மையமாகத் திருப்பூரை கிளாடியா நிறுவனம் நிலைநிறுத்துகிறது.
StartupTN:
மேலே குறிப்பிட்ட இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பன்முகத்தை இணைப்பது எது? StartupTN-ன் டான்சீட் திட்டம் (TANSEED) என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது. இந்த ஆதரவு டோரஸ் ரோபாட்டிக்ஸ், கிம்ஸ், கேல்லாபாக்ஸ், கிளாடியா ஆகிய நான்கு நிறுவனங்களின் முன்மாதிரிகளை சந்தைக்குத் தயாரான தயாரிப்புகளாக மாற்ற உதவியது.
StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.
புதிய தொழில் துறை டிஎன்ஏ:
இந்த நான்கு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒரு எளிய கருத்தை நிரூபிக்கின்றன. நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட தொழில் நிலைத்து நிற்கும் என்பதே அது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் ‘ஆக்ஸியல் ஃப்ளக்ஸ்’ மோட்டார்கள் ஆக இருக்கட்டும், உற்பத்தியை எல்லோருக்கும் எளிதாக்கும் இயந்திரக் கருவிகள் ஆக இருக்கட்டும், விற்பனையில் உள்ள இழப்பைச் சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு ஆக இருக்கட்டும், அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுநீரைத் தடுக்கும் துணி தயாரிப்பு ஆக இருக்கட்டும் தமிழ்நாட்டின் தொழில்துறை கண்டுபிடிப்பாளர்கள் தூய்மையான, புத்திசாலித்தனமான தீர்வுகளை வடிவமைக்கின்றனர்.
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும் இந்த வேளையில் அதற்கு இந்த நிறுவனங்களின் முயற்சிகள் பெரிய பங்கு வகிக்கும். இது, அவர்கள் உருவாக்கும் தயாரிப்புகளுக்காக மட்டும் அல்ல, மாறாக அவர்கள் வடிவமைத்து வரும் தொழில்துறை மரபணுவுக்காகவும் ஆகும். இந்த மரபணு, நிலைத்தன்மை, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய போட்டித்திறனை ஆதரிப்பதாக இருக்கும்.
தமிழ்நாட்டின் புதிய ஸ்டார்ட்அப் கதை...
தமிழ்நாடு இனிமேல் இந்தியாவின் உற்பத்தித் தளமாக மட்டும் இல்லை; இது அடுத்த தொழிற்புரட்சிக்கான ஆய்வகமாகவும் மற்றும் வெளியீட்டுத் தளமாகவும் மாறி வருகிறது. மாற்றங்களும் குறிக்கோளும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதைப் புதிய நிறுவனங்களின் அலை நிரூபித்து வருகிறது.
மின்சார வாகனங்களின் எடையைக் குறைக்கும் மோட்டார்கள் முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாட்டர்ஜெட்டுகள், விற்பனைக் குழுக்களுக்கான ஏஐ உதவியாளர்கள், மற்றும் ஃபேஷனுக்கான நிலையான சாயமிடும் முறைகள் வரை - இந்த நான்கு புதிய ஸ்டார்ட்அப்களும் தொழில்கள் எப்படி அறிவார்ந்ததாகவும், தூய்மையானதாகவும், எல்லோரையும் உள்ளடக்கியதாகவும் வளர முடியும் என்பதைக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டின் இந்த நான்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதன் தொழில்துறை மரபணுவை எவ்வாறு மறுபொறியியல் செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வேளாண் மற்றும் உணவுத் துறையில் மாற்றங்களை நிகழ்த்தும் தமிழக ஸ்டார்ட்அப்’களின் எழுச்சி!
Edited by Induja Raghunathan