செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம், உயிர் காக்கும் செயலி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த இரட்டையர்களான ஹர்பிதா பாண்டியன் மற்றும் ஹர்பித் பாண்டியன்.
'ஹலோ ஆப்’ (Halo app) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மூலம், மருத்துவ அவசரநிலைகளின் போது பயிற்சி பெற்ற நிபுணர்களைப் போல செயலாற்ற மக்களுக்கு உதவுகிறது.
இவர்களது இந்தக் கண்டுபிடிப்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய தொழில்நுட்ப போட்டியான ’ஹேக்ஹார்வர்ட் 2025’ல் (HackHarvard 2025) முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஹர்பிதா பாண்டியன் மற்றும் ஹர்பித் பாண்டியன்.
இந்தியா மீதான ஈர்ப்பு
சென்னையில் பிறந்த இரட்டையர்களான ஹர்பிதா பாண்டியன் மற்றும் ஹர்பித் பாண்டியன், தங்களது சிறுவயதிலேயே ஆஸ்திரேலியா சென்று விட்டனர். வெளிநாட்டில் படித்தாலும் தொடர்ந்து இந்தியாவிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, கடந்த 2016ம் ஆண்டு கிளாஸ்மைண்ட்ஸ் என்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை இந்தியாவில் நிறுவினர். இதில் இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இது தவிர, ஆன்லைன் பயிற்சி முகாம்கள் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்கு பங்களிப்பு செய்தல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித கல்வி மற்றும் சுகாதார அணுகலில் கவனம் செலுத்தும் இந்திய அரசு சாரா நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல், என தொடர்ந்து தங்களது பங்களிப்பை தாய்நாட்டிற்கு அளித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய ஸ்பெல்பீ வெற்றியாளர்கள், என அழைக்கப்படும் இந்த இரட்டையர்கள், தற்போது அமெரிக்காவின் நியூ பிரன்சுவிக் நகரில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் அறிவியலில் இளங்கலை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், புதிய செயற்கை நுண்ணறிவு கருவி கூறுகள் மற்றும் கடுமையான காலக்கெடுவின் கீழ் நடைபெற்ற, உலகளாவிய தொழில்நுட்ப போட்டியான ஹேக்ஹார்வர்ட் போட்டியில் கலந்து கொண்ட இந்த இரட்டையர்கள், ஏஐ மூலம் மக்களுக்கு அவசர காலத்தில் மருத்துவ உதவி செய்யும் ஹலோ செயலியை உருவாக்கியுள்ளனர்.
வெறும் 36 மணி நேரத்தில் இந்த செயலியை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அவர்களது கடின உழைப்பின் பலனாக, அவர்களது ஹலோ செயலி, ஹேக்ஹார்வர்ட் 2025ல் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஹேக்பிரின்ஸ்டன் 2025 (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), ஹேக்மிட் 2025 (மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்) மற்றும் பென்ஆப்ஸ் 2025 (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்) உள்ளிட்ட முக்கிய ஹேக்கத்தான்களில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள இந்த இரட்டையர்களின் வெற்றி பயணத்தில் தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ’ஹேக்ஹார்வர்ட் 2025’ம் இணைந்துள்ளது.
ஹலோ செயலி பிறந்த கதை
நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் என்னும் நோயால் தங்களது தாயார் பாதிக்கப்பட்டபோது, தாங்கள் பட்ட அவஸ்தைகளை அனுபவப் பாடமாகக் கொண்டு, வரும் காலத்தில் இதுபோன்று மருத்துவ நெருக்கடியில் யாரும் உதவியற்றவர்களாக உணரக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்த ஹலோ செயலியை உருவாக்கியுள்ளனர் இந்த இரட்டையர்கள்.
முதலுதவி செய்தல், நீரிழிவு அவசரநிலைகளை நிர்வகித்தல் அல்லது விபத்துகளில் உதவுதல் போன்ற முக்கியமான தருணங்களில் படிப்படியாக காட்சி மற்றும் வாய்மொழி வழிகாட்டுதலை வழங்க, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்த செயலியை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
தங்களது ஹலோ செயலி குறித்து ஹர்பிதா பாண்டியன் கூறுகையில்,
“தொழில்நுட்பத்தை மட்டும் உருவாக்காமல் மக்களிடையே நம்பிக்கையையும் வளர்ப்பதே புதிய கண்டுபிடிப்புகளின் தேவையாகும். இந்தியாவில் உள்ள மாணவர்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்கள் நிஜ உலக தாக்கத்திற்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் ஹலோ போன்ற திட்டங்களை இந்தியாவிற்குக் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவை பெருமைப்படுத்துவதுமே எங்கள் கனவாகும்," எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பித் பாண்டியன் கூறுகையில்,
“மிக முக்கியமான மருத்துவ நெருக்கடி நேரத்தில் எவரும், எங்கும் விரைவாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்பினோம். மாரடைப்பில்; ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது, இந்த நேரங்களில் வழங்கப்படும் முதலுதவி சிகிச்சைகளே நோயாளிகள் உயிர்வாழும் விகிதங்களை இரட்டிப்பாக்குகின்றன. ஆனால், இதுமாதிரியான நேரங்களில் பெரும்பாலான மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போகிறார்கள். அத்தகைய சூழ்நிலைகளில் உதவவே ஹலோ செயலியை உருவாக்கியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அவசரகால தயார்நிலைக்காக ஹலோ பயன்படும் என்றும் அதன் அடிப்படை தொழில்நுட்பம், ஹலோ செயலி பயன்பாட்டாளரை நம்பகமான முதல் உதவி சிகிச்சையாளராக மாற்றும் என்றும் நம்புவதாகக் கூறுகிறார்கள் இந்த இரட்டையர்கள்.