+

டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் ‘SheSparks’ பூத் - பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சந்திப்பு மற்றும் உரையாடல்கள்!

டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களால், பெண்களுக்காக நடத்தப்பட்ட SheSparks நிகழ்வில், முக்கிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிக்கும் பெண்கள், தாங்கள் கடந்து வந்து அனுபவங்களை இளம் தொழில்முனைவோர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

இந்தியாவின் மிக முக்கியமான யுவர்ஸ்டோரி நடத்தும் ஆண்டு விழாவான ’டெக்ஸ்பார்க்ஸ் 2025’ நிகழ்வில், பெண்களுக்கான பிரத்யேக ‘SheSparks’ பூத் இடம்பெற்றது. இதில் நிறைய பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

பணியிடத்தில் முத்திரை பதிக்க விரும்புவோர், பணி வாழ்க்கையில் சரியான பாதையில் பயணித்து முன்னேற விரும்புவோர், விற்பனையிலும் சந்தைப்படுத்துவதிலும் சிறப்பிக்க விரும்புவோர், தொழில் முயற்சிக்கு நிதி திரட்ட ஆலோசனை பெற விரும்புவோர், என ஒவ்வொருவரின் தேடலுக்கும் இங்கு தெளிவு கிடைத்தது.

வெவ்வேறு துறைசார்ந்த பெண் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும் யுவர்ஸ்டோரி குழுவினருடன் உரையாடவும் இதில் வாய்ப்பு கிடைத்தது.

Shesparks

பெண்கள் தங்கள் சகோதரிகளுடன் பழகுவது போல் ஒருவரோடொருவர் சகஜமாக கலந்து பேசி, கருத்துகளை பரிமாறிக்கொண்டார்கள். நிகழ்வின் முதல் நாள், SonderConnect நிறுவனர் லதிகா பாய், சுயநிதியையும் நிதி திரட்டுவதையும் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்டார்ட் அப் பயணம் எப்படி இருக்கும் என்பதையும் நிதி தொடர்பாக ஒருவர் எடுக்கும் முடிவுகள் தொழில் முயற்சியின் கட்டுப்பாட்டிலும் வளர்ச்சியிலும் நோக்கத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழகாக பகிர்ந்துகொண்டார்.

அவரைத் தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனத்தின் பிராடக்ட் டைரக்டர் வைஷ்ணவி தேவி பெண் நிறுவனர்களுக்கு பிராடக்ட் பற்றிய கண்ணோட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி விவரித்தார். பயனர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தயாரிப்புகளை உருவாக்கவேண்டும், என்றார்.

பெண் நிறுவனர்கள் தங்களது உள்ளுணர்வையும் நுணுக்கமாக ஆராய்ந்து சிந்திக்கும் திறனையும் ஒன்றிணைத்தால் பயனர்களுக்குத் தேவையான தயாரிப்புகளை உருவாக்கி வளர்ச்சியடைய முடியும், என்றார்.

நிகழ்வின் இரண்டாம் நாள், டேலி சொல்யூஷன்ஸ் குளோபல் ஹெட் ஜெயதி சிங், ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் சந்தைப்படுத்தலின் அடிப்படைகளைப் பற்றி சுருக்கமாக விளக்கினார்.

வாய்ப்புகளைக் கண்டறிவது, புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பது, சமூக அளவிலும் வணிக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற அம்சங்களை PhonePe நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ப்ரியா நரசிம்மன் திறம்பட எடுத்துரைத்தார்.

இறுதி நாளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை பிராடக்ட் மேலாளர் தருணா மன்சந்தா, பிராட்க்ட் மேலாண்மை பிரிவில் ஸ்விக்கி, லிங்க்ட்இன், மைக்ரோசாஃப்ட் என தான் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Shesparks speaker

யுவர்ஸ்டோரி சிஓஓ சங்கீதா பவி, மைக்ரோசாஃப்ட் முன்னாள் சிடிஓ ரோஹினி ஸ்ரீவத்சா ஆகியோரும் பார்வையாளர்களிடம் தங்களது பயணங்களில் சந்தித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

Chiratae Ventures நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தன்வி துபே, ஆரம்ப நிலையில் இருக்கும் பெண் நிறுவனர்களுக்கு வலுவான பிராண்ட் அடையாளத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை விவரித்தார். வாடிக்கையாளர்களை எப்படிக் கவர்ந்திழுப்பது, போட்டிகள் நிறைந்த சந்தையில் தனித்துவமாக எப்படி செயல்படுவது என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மற்றவர்களைப் புரிந்துகொண்டு வழிநடத்துவது பற்றியும் நம்பகத்தன்மையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது பற்றியும் உரையாற்றினார் Sales womentoring நிறுவனர் சித்ரா சிங்.

மேலும், பெண் நிறுவனர்கள் வணிக மாதிரிகளை திறம்பட உருவாக்கவும் நம்பிக்கையுடன் நிதி திரட்டும் முயற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டினார் Shastra VC நிறுவனத்தின் சாச்சி ஜலோட்டே.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் போட்டிகள் நடத்தப்பட்டு சுவாரஸ்யமான பரிசுகளும் வழங்கப்பட்டன. மொத்தத்தில் SheSparks நிகழ்வு பெண் நிறுவனர்களிடையே உரையாடல்களையும் தொடர்பையும் நம்பிக்கையையும் ஊக்குவித்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

More News :
facebook twitter