TANSEED 8.0 - ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆதார நிதி டான்சீட் பெற விண்ணப்பங்கள் ஏற்பு!

12:30 PM Dec 06, 2025 | YS TEAM TAMIL

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் 'ஸ்டார்ட்-அப் டிஎன்’ (StartupTN), தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி – டான்சீட் (TANSEED) 8ஆம் பதிப்பு விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

More News :

2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டான்சீட் திட்டத்தின் மூலம் இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் 8ஆம் பதிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் டிசம்பர் 6, 2025 முதல் டிசம்பர் 20, 2025 வரை www.startuptn.in தளத்தில் பெறப்படும், என ஸ்டார்ட்-அப் டிஎன் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ்,

  • பசுமை தொழில்நுட்பம்,

  • ஊரக வாழ்வாதார மேம்பாடு,

  • பெண்களை முதன்மைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஸ்டார்ட்அப்’கள்

இவற்றுக்கு ரூ. 15 லட்சம் நிதி ஆதாரம் அளிக்கப்படும்.

மற்ற துறைகளுக்கான புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் ஆதார நிதி வழங்கப்படும்.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட்அப்’களுக்கு, ஆண்டுக்கால தொழில் வளர்ப்புப் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள், தேசிய மற்றும் பன்னாட்டு ஸ்டார்ட்அப் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான முன்னுரிமை ஆகிய ஆதரவுகளும் வழங்கப்படுகின்றன. இதற்கான ஆதரவுக்குப் பதிலாக StartupTN, அந்த ஸ்டார்ட்அப்பின் 3% பங்குகளை பெற்றுக்கொள்ளும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

  • நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.

  • DPIIT தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  • மற்றொரு நிறுவனத்திலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்டதாகவோ அல்லது ஏற்கனவே செயல்படும் நிறுவனத்தின் துணை / கூட்டு நிறுவனமாகவோ இருக்கக் கூடாது.

  • எந்த அரசு நிறுவனத்தாலும் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெறக்கூடாது.

மேலும் தகவல்களுக்கு அல்லது சந்தேகங்களுக்கு tanseed@startuptn.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.