
இந்திய ஸ்டார்ட் அப் பரப்பின் செழுமை, தொழில்நுப்டம் சார்ந்த பொருளாதாரமாக நாடு மாறுவதற்கான உந்துசக்தி என பாராட்டப்பட்டு வரும் நிலையில், அரசு தரப்பிலான தரவுகள் வேறு ஒரு கதையை சொல்லும் வகையில் அமைகின்றன. நூற்றுக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் காப்புரிமைக்காக விண்ணப்பித்தாலும், அவற்றின் நோக்கம் உண்மையான புதுமையாக்கமாக இல்லாமல், முதலீட்டாளர்கள் கவர்வதற்கான உத்தியாக இருப்பதை இந்த தரவுகளின் ஆழமான ஆய்வு உணர்த்துகிறது.
மக்களவையில் அண்மையில் அளிக்கப்பட்ட பதிலில், 2021 முதல் 2025 நிதியாண்டு வரையான காலத்தில் 13,089 காப்புரிமை விண்ணப்பங்கள் ஸ்டார்ட் அப்கள் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றில் 2,174 காப்புரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 500 விண்ணப்பங்கள் ஆரம்ப செயல்முறை நிலையிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன.
தொழில் மற்றும் உள்நாட்டு வரத்தக மேம்பாடு துறை வெளியிட்டுள்ள தரவுகள், அதிகம் கொண்டாடப்படும் நாட்டின் ஸ்டார்ட் அப் புதுமையாக்க இன்ஜின் கசிவுக்கு உள்ளாகலாம், என உணர்த்துகிறது: நிறுவனர்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் ஆர்வம் காட்டினாலும், அவற்றை உண்மையான அறிவுசார் சொத்துரிமையாக மாற்றும் நீண்ட செயல்முறையில் ஆர்வம் காட்டுவதில்லை.

முதலீட்டாளரை கவரும் உத்தி
இந்தியாவின் வென்சர் மூலதன பரப்பில் காப்புரிமைகளுக்கு அடையாள முக்கியத்துவம் உள்ளது. இவற்றின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப புதுமையாக்கம் இன்னமும் வளர்ச்சி நிலையில் இருந்தாலும் அல்லது சில தருணங்களில் தொழில்நுட்ப நோக்கில் காப்புரிமை பெற முடியததாக இருந்தாலும், தொழில்நுட்ப நோக்கில் தனித்து காட்டும் அம்சமாக கருதப்படுகிறது.
196 ஸ்டார்ட் அப் விண்ணப்பங்கள் காப்புரிமை சட்டம் பிரிவு 9(1) கீழ் கைவிடப்பட்டுள்ளன. முழுமையில்லாத விண்ணப்பங்கள் தொடர்பாக இப்பிரிவு அமைகிறது. மேலும், 257 விண்ணப்பங்கள் பிரிவு 21(1), கீழ் கைவிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் பதில் அளிக்க தவறும் நிலையில் அல்லது கெடுவுக்குள் செயல்படாத நிலையில் இந்த பிரிவு பொருந்துகிறது.
இந்த செயல்முறை பிறழ்வுகள் சில போக்குகளை சுட்டிக்காட்டுவதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்: ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்கள், பெரும்பாலுல் அதிக செலவில்லாத ஆலோசனை கொண்டு, முதலீட்டாளர்களை ஈர்க்க காப்புரிமைக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால், அதை தொடர தேவையான வளம் மற்றும் நோக்கத்தை கொண்டிருப்பதில்லை.
“நிதி திரட்டுவதற்கு முன் தற்காலிக காப்புரிமைக்கு விண்ணப்பிப்பது நிறுவனர்களின் பழக்கமாக இருக்கிறது,” என்கிறார் தில்லியைச் சேர்ந்த காப்புரிமை வழக்கறிஞர். ஆனால் நிதிச்சுற்று முடிந்ததும், அவர்கள் அதற்கான செயல்முறையை முடிக்க மாட்டார்கள் அல்லது சரியாக பதில் அளிக்க மாட்டார்கள். காப்புரிமை விண்ணப்பம் அப்படியே செயலிழந்துவிடும்,” என்கிறார்.
"காப்புரிமை விண்ணப்பங்கள் பல காரணங்களுக்காக தாக்கல் செய்யப்படுகின்றன. முதலீடு பெறுவதற்கு என்பது முதன்மை காரணமாக உள்ளது. டிரேட்மார்க் விண்ணப்பங்கள் அதிகம் தாக்கல் செய்யப்படுகின்றன. அவை காப்புரிமையை விட எளிதானவை மற்றும் செலவு குறைந்தவை. ஒரு நிறுவனத்தில் உள்ள வரைவு குழுவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மகள் பெயரில் இரண்டு தற்காலிக காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் செய்தது எனக்குத்தெரியும். இந்த விண்ணப்பங்கள் பின்னர் கைவிடப்படும்,” என்கிறார் டிரேட்மார்க் வழக்கறிஞர் பரிதி சோமனி.
"பல காரணங்களுக்காக காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டு, பாதி செயல்முறையிலேயே பல கைவிடப்படுகின்றன. சில நேரங்களில் தாக்கல் செய்தவர் அதற்கான செலவு பொருத்தம் இல்லாதது, என நினைக்கலாம். சில நேரங்களில் காப்புரிமை கோரிக்கைக்கு பின் உள்ள தொழில்நுட்ப செயல்முறை பலவீனமாக இருக்கலாம் மற்றும் சில நேரங்களில் ஆரம்பத்தில் தங்கள் மைய கவனம் என நினைத்த பொருள் அல்லது சேவையில் இருந்து விலகிச்சென்றிருக்கலாம்,” என்றும் அவர் கூறுகிறார்.
சோதனை இடைவெளி
இந்த எண்ணிக்கைகள், ஸ்டார்ட் அப் உற்சாகம் மற்றும் அமைப்பின் செயல்முறை இடையில் உள்ள பொருத்தமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகின்றன. 13,089 ஸ்டார்ட் அப் காப்புரிமை விண்ணப்பங்களில் இதுவரை 4,172 விண்ணப்பங்கள் மட்டுமே, 32 % பரிசீலிக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட காலத்தில் காப்புரிமை தாக்கல் இரு மடங்காக அதிகரித்த நிலையில் நிலுவையில் உள்ளவை அதிகரித்துள்ளன.
2021ம் நிதியாண்டில் காப்புரிமை அலுவலகம், அனைத்து வகைகளிலும் 73,153 விண்ணப்பங்களை பரிசீலித்தது. 2025 நிதியாண்டில் இது 15,723 ஆக 80% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வரிசையில் ஸ்டார்ட் அப்’கள் பின் பகுதியில் காத்திருக்கின்றன. அவர்களின் விண்ணப்பங்கள் பன்னாட்டு மற்றும் நிறுவன விண்ணப்பங்களுடன் போட்டியிட வேண்டியிள்ளது.
எண்ணிக்கை / தரம்
மற்ற விண்ணப்பங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் விண்ணப்பங்கள் இடையிலான வேறுபாடும் பெரிதாக உள்ளது. 2021- 2025 காலத்தில், ஸ்டார்ட் அப்கள் 13,089 விண்ணப்பங்கள் தாக்கல் செய்து, 2,174 காப்புரிமை பெற்றுள்ளன. குறைவான விண்ணப்பங்கள் கொண்ட சில பிரிவுகள், (14,098), அவற்றில் 13,570 ஒப்புதல் பெற்றுள்ளன.
தனிநபர் கண்டுபிடிப்பாளர்கள் 90,627 விண்ணப்பங்கள் தாக்கல் செய்து, 21,959 ஒப்புதல் பெற்றுள்ளனர். இந்த விகிதம் ஸ்டார்ட் அப் துறையில் தான் மிக குறைவாக உள்ளது.
இந்த பிரச்சனைக்குக் காரணம், செயல்முறையின் வேகம் மட்டும் அல்ல, விண்ணப்பங்களின் தரமும் தான் என்று அறிவுசார் சொத்துரிமை வல்லுனர்கள் கூறுகின்றனர். பல ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பங்களை அவசரத்தில் தயாரிக்கின்றன. அவற்றில் காப்புரிமையை பூர்த்தி செய்யக்கூடிய ஆழமோ அல்லது புதுமையோ இருப்பதில்லை.
பிராண்டிற்கு முதன்மை
அரசு தரவுகள் இளம் நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை தொகுப்பில் உள்ள படிநிலையையும் சுட்டிக்காட்டுகிறது. ஐந்தாண்டுகளில் ஸ்டார்ட் அப்கள் 13,089 காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்த நிலையில், இதே காலத்தில் அவை 44,000+ டிரேட்மார்க் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன. 2025ம் ஆண்டில் மட்டும், ஸ்டார்ட் அப்கள் தரப்பில் 10,429 டிரேட்மார்க் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆண்டு தாக்கலான காப்புரிமை விண்ணப்பங்களை விட இது எட்டு மடங்கு அதிகம்.
ஸ்டார்ட் அப் பொருளாதாரம், ஆழமான ஆய்வை விட, பிராண்ட் உருவாக்கம் சார்ந்து இருப்பதை இது உணர்த்துகிறது. வடிவமைப்பு விண்ணப்பங்களிலும் இது பிரதிபலிக்கிறது. 2021ம் ஆண்டில் ஸ்டார்ட் அப்கள் 55 வடிவமைப்பு விண்ணப்பங்கள் மட்டுமே தாக்கல் செய்தன.
2025ம் ஆண்டில் இது 2,404 ஆக அதிகரித்துள்ளது. பொருள் சார்ந்த வேறுபாடு நோக்கிலான போக்காக இது அமைகிறது. குறிப்பாக டி2சி பிராண்ட்கள் மற்றும் வென்பொருள் ஸ்டார்ட் அப்கள் மத்தியில் இது பிரபலமாக உள்ளது. அதே நேரத்தில், காப்புரிமை தாக்கல் தட்டையாகவே இருந்தன.
புதுமையாக்கத்தின் தோற்றம்
காப்புரிமையை கைவிடுவது என்பது பிரச்சனை அல்ல. பல நிறுவனங்கள் தங்கள் பொருள் உத்திக்கு பொருத்தம் இல்லாதவற்றை கைவிடுவது இயற்கையாகவே உள்ளது. ஆனால், ஸ்டார்ட் அப்கள் காப்புரிமையை கைவிடுவதன் அளவும், அதன் நேரமுமே, நிறுவனர்கள் அதை ஒரு அறிவு சொத்தாக பார்க்காமல், ஒன்றை உணர்த்துவதற்கான குறிப்பாக பார்க்கின்றனரோ எனும் கேள்வியை எழுப்புகிறது.
இந்த பழக்கம், தவறான புரிதலையும் அளிக்கலாம். முதலீட்டாளர்கள் தாங்கள் அறிவு சொத்துரிமை வலுவாக உள்ள ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதாக நினைக்கலாம். ஆனால், நடைமுறையில் அந்த அறிவு சொத்துரிமை செயல்வடிவம் பெறாமலே போகலாம்.
பாதிப்புகள்
இப்படி கைவிடுவதன் பாதிப்புகள் இன்னும் கூடுதலாக இருக்கின்றன. கைவிடப்பட்ட விண்ணப்பங்கள், அந்த தொழில்நுட்பம் பாதுகாக்கப்படாத நிலையை உண்டாக்கி, அறிவுசார் சொத்துரிமை மோதலை ஏற்படுத்தலாம். பிற நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் போது, சட்ட சிக்கல் ஏற்படலாம். அறிவுசார் சொத்துரிமை இல்லாமல் வேகமான விரிவாக்கம் செய்யும் ஸ்டார்ட் அப்கள் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட சந்தையில் சவால்களை சந்திக்கின்றன.
இந்தியாவின் புதுமையாக்க பரப்பில் இந்த போக்கு காப்புரிமை புள்ளிவிவரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் அதிகரித்தாலும், இவை அதே அளவு செயல்படுத்தக்கூடிய வகையில் உரிமையாக மாறுவதில்லை.
மத்திய அரசு, ஸ்டார்ட் அப்’களின் காப்புரிமை செயல்முறையை வேகமாக்க மற்றும் மானியம் அளிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், விண்ணப்பங்கள் பின்னணியில் உள்ள தரம் அதிகரித்தால் மட்டுமே, அவற்றை நிதி திரட்டுவதற்கான சாதனம் என்பதை கடந்து நிறுவனர்கள் நோக்கும் போது மட்டுமே, விண்ணப்பங்கள் மற்றும் உரிமம் வழங்கல் இடைவெளி குறையும்.
எதிர்காலம்
இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை பரப்பு விரிவாகி வருகிறது. 2021ல் காப்புரிமை விண்ணப்பங்கள் 58,503 என்பதில் இருந்தும், 2025ம் ஆண்டில் 110,372 ஆக அதிகரித்துள்ளது. ஸ்டார்ட் அப் பங்கேற்கு இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் அண்மை தரவுகள், முதிர்ச்சி அடையும் சூழலுக்கு வெறும் விண்ணப்பங்கள் மட்டும் போதாது, காப்புரிமை என்பது வியூக நோக்கிலான சொத்து என கருதப்படுவதை நோக்கிய மாற்றம் தேவை.
அதுவரை, பல ஆரம்ப நிலை காப்புரிமை விண்ணப்பங்கள் குறுகிய ஆயுள் காலமே கொண்டிருக்கும். முதலீட்டாளர்களை கவர தாக்கல் செய்யப்பட்டு, அதிகார வர்க செயல்முறையில் சிக்கி, மறக்கப்படும் நிலையே இருக்கும்.
ஆங்கிலத்தில்: அனுஜ் சுவர்னா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan