ஆங்கிலம் தெரியாததால் சந்தித்த போராட்டம்; தன் கிராமக்குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் மேகாலயா பெண்!

03:30 PM Aug 05, 2025 | YS TEAM TAMIL

மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளில் உள்ள வங்கதேச எல்லையில் உள்ள தொலைதூர கிராமமான நோங்ஷ்கனில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில், ஒரு காட்டின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பள்ளி, விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த 241 மாணவர்களுக்கு புது நம்பிக்கையை அளிக்கிறது. ஒற்றை மனிதியின் முயற்சியால் நிகழ்ந்தது அது.

ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் ஜெனவாஃபா பெஹ்பட் சந்தித்த போராட்டமும், தரமான கல்வியின் பற்றாக்குறையும், அவரது கிராமத்திற்குத் திரும்பி, டியூ டிராப் அகாடமியைத் தொடங்க அவரைத் தூண்டியது. 2019ம் ஆண்டில் அவர் தொடங்கிய டியூ டிராப் அகாடமி, ஒரு காலத்தில் அவர் விரும்பிய திறன்களையெல்லாம் அவரது கிராமக் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களது எதிர்காலத்தை வளமாக்கி வருகிறது.

விளிம்புநிலை சமூகங்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பள்ளி!

மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி மலை மாவட்டத்தின் பைனுர்ஸ்லா துணைப்பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமமான நோங்ஷ்கனைச் சேர்ந்தவர் ஜெனவாஃபா பெஹ்பட். பத்து உடன்புறப்புகளுடன் வளர்ந்த அவர், கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஷில்லாங்கிற்கு குடிபெயர்ந்தார்.

"கிராமப்பள்ளியில் கல்வி முறை முழுவதும் மனப்பாடம் செய்வதாக இருந்தது. ஷில்லாங்கில் உள்ள செயிண்ட் மேரி கல்லூரியில் சேர்ந்தபோது, ஆங்கிலம் பேசத் தெரியாததால் கடினமாக இருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மொழித் தடையைச் சமாளிக்க சிரமப்பட்டதால், பொலிட்டிக்கல் சைன்ஸ் ஹானர்ஸ் படிப்பை கைவிட்டு, பொதுவான பட்டப்படிப்பை தொடர முடிவெடுத்தார். இருப்பினும், சவால்கள் தொடர்ந்தன. 2000ம் ஆண்டில் நாசரேத் மருத்துவமனையில் அவரது முதல் வேலையைப் பெற்றார். அப்போது, மருத்துவமனை நிர்வாகி ஒருவர், ஜெனவாஃபாவை நோக்கிக் "ஒரு பி.ஏ. பெண் எப்படி ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டு பேசாமல் இருக்க முடியும்?" என்று சத்தமாகக் கேட்டார்.

கிட்டத்தட்ட அது தான் அவரது வாழ்வின் திருப்புமுனை. ஆங்கிலத்தை பயிலத் தொடங்கினார். பல புத்தகங்களை வாங்கினார். ஆங்கில உரையாடல்களை உன்னிப்பாகக் கவனித்தார். மெதுவாக பயின்றாலும், விடாமுயற்சியுடன் மொழியை கற்றுக்கொண்டார். அதே நேரத்தில், ஒரு வார்டு உதவியாளராக அவரது பணியைத் தொடர்ந்தார்.

"ஆங்கிலம் தெரியாததை எண்ணி நான் வெட்கப்பட்டதில்லை," என்று சோஷியல் ஸ்டோரியிடம் தெரிவித்தார் அவர்.

ஐந்து ஆண்டுகால, மருத்துவமனை பணியை அவர் பயிற்சி மைதானமாக மாற்றிகொண்டார். ஆங்கிலத்தையும் தன்னம்பிக்கையையும் உள்வாங்கிக் கொண்டார். பின், ஷில்லாங்கின் செவன் மைல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார்.

2009ம் ஆண்டில், அவர் WISE மற்றும் குவஹாத்தி சமூக மன்றம் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டார். அதற்காக, மாநிலங்கள் முழுவதும் பயணம் செய்தார். பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்தார். மேலும், அடிமட்ட சமூகங்களுடன் பணியாற்றினார். கல்வியின் தாக்கம் குறித்த புதிய கண்ணோட்டங்களை வழங்கினார்.

"நான் பயணிக்கும்போதும், நடக்கும்போதும், ஒரு விஷயம் என்னைத் தாக்கிக் கொண்டேயிருந்தது. என்னால் இவ்வளவு விஷயங்களை செய்ய முடிகையில், சிறுவயதில் எனக்கு ஏன் இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை?" என்று யோசனை அவரை குடைந்தெடுத்ததாக பகிர்ந்தார்.

இத்தனை ஆண்டுகளாக ஆங்கில மொழியறிவு இல்லாததாலும், வளமான கல்வி கிடைக்காததாலும் ஏற்பட்ட கஷ்டங்களை அனுபவித்த அவர், 2013ம் ஆண்டு வாக்கில், அவரது கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கு, ஆங்கில மொழியை பயிற்றுவிக்க எண்ணினார்.

தாய் அளித்த நிலத்தில் சொந்த பள்ளியைத் தொடங்கிய ஜெனவாஃபா...

"எங்கள் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல பள்ளிகள் இருந்தன. நான் எந்தப் பள்ளியையும் தொடங்கக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், குறைந்தபட்சம் குழந்தைகள் ஷில்லாங்கிற்குச் செல்லும்போது, அவர்கள் என்னைப் போல பாதிக்கப்படாமல் இருக்க ஆங்கிலம் கற்க உதவ வேண்டும்," என்றார்.

அதன் முதல் முயற்சியாக 8-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி ஆங்கில வகுப்புகளை, மூன்று மாதத்திற்கு ரூ.200 என்ற கட்டணத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், விஷயங்கள் அப்படியே இருந்ததைப் பார்த்து திகைத்தார். மாணவர்கள் இன்னும் அடிப்படை ஆங்கிலத்தில் சிரமப்பட்டு, மனப்பாடம் செய்து கற்றுக்கொண்டனர். வகுப்புகள் எடுப்பதோடு, இளைஞர் திட்டங்களை ஒழுங்கமைக்க அரசுத் துறைகளுடன் இணைந்து பணியாற்றினார்.

ஒரு சமூக நூலக மையத்தை உருவாக்க ரூ.1.5 லட்சம் மானியத்தையும் பெற்றார். டெல்லி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அமைப்புகள் புத்தகங்களை அளிக்க முன்வந்தன. மேலும், அவர் பள்ளிகளில் நூலகங்களை அமைக்க கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாசிப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்தார். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், அர்த்தமுள்ள மாற்றம் இன்னும் எட்டிப் பார்க்க முடியாததாகத் தோன்றியதால், இந்த அமைப்பில் அவர் விரக்தியடைந்தார். 2019ம் ஆண்டில், அவரது பள்ளியைத் தொடங்குவதே சிறந்த வழி என்று உணர்ந்தார்.

அதன் நீட்சியாய், அவரது வீட்டின் ஒரு அறை, நர்சரி முதல் முதல் வகுப்பு வரையிலான 15 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் டியூ டிராப் அகாடமியாக உருவெடுத்தது. 13x7 அடி அறை கொண்ட சமூக நூலகம் மற்றொரு வகுப்பறையாக மாறியது. குழந்தைகள் தரையில் பாய்களில் அமர்ந்தனர். அவரது சகோதரி மற்றும் உறவினர் ஒருவர் ஆகிய இருவரும் பட்டம் பெற்ற பிறகு, மாத சம்பளமாக ரூ.1,000 பெற்று ஆசிரியர்களாக சேர்ந்தனர்.

குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை மலிவு விலையில் நிர்ணயித்தனர். அதாவது, ஒரு குழந்தைக்கான கல்விக் கட்டணம் ரூ.250 அவர்களின் உடன்பிறந்தவர்களும் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு தள்ளுபடி. ஷில்லாங்கின் உறைவிடப் பள்ளிகள் அல்லது அருகிலுள்ள நகரங்களில் உள்ள பிற ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க முடியாத குடும்பங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான ஜெனவாஃபாவின் தொலைநோக்கு பார்வையை அடைய இந்த கட்டணம் அவசியமாகியது.

கல்விக்கட்டணம் ரூ.250; வேன் கட்டணம் ரூ.10

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், சன்பேர்ட் அறக்கட்டளையின் ஆதரவைப் பெற்றது டியூ டிராப் பள்ளி. இது பள்ளிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நேரத்தில், 80 மாணவர்களின் சேர்க்கை பெற்றது. ஜெனவாஃபாவின் தாயார் நன்கொடையாக அளித்த விவசாய நிலத்தில் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்ட சன்பேர்ட் அறக்கட்டளை உதவியது. பக்கத்து பண்ணைக்காரர்களும், பள்ளிக்கான சாலை வசதிகளை அமைக்க அவர்களது நிலத்தை கொடுத்தனர்.

"உங்களால் முடிந்ததை, எப்போது வேண்டுமானாலும் கொடுக்கங்கள்," என்று அவர்கள் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

மலைகள் வழியாக ஒரு சாலையை செதுக்குவதும், அடிப்படை மூங்கில் அமைப்பில் ஒரு பள்ளியைக் கட்டுவதும் அத்தனை எளிதான காரியங்கள் அல்ல. ஜெனவாஃபா கடன் வாங்கி ஒரு பழைய வேனை வாங்கினார். அவரது சகோதரர் அதன் ஓட்டுநரானார். ஒரு குழந்தைக்கு வெறும் ரூ.10 என்ற கட்டணத்தில் போக்குவரத்தை வழங்கியது. 2022ம் ஆண்டில், சன்பேர்ட் அறக்கட்டளை பள்ளி கட்டிடத்தின் விரிவாக்கத்திற்கு நிதியளித்தது.

ஒரு தார் சாலையும் போடப்பட்டது. மேலும் மும்பையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான கேரிங் பிரண்ட்ஸ் நன்கொடையாக வழங்கிய பணத்தில் ஜெனவாஃபா ஒரு பயன்படுத்தப்பட்ட பள்ளி பேருந்தை வாங்கினார்.

"நான் எந்த சம்பளமும் வாங்காததால், அரசு சாரா நிறுவனங்களுக்கான பயிற்சி ஆலோசகராக பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டேன். என் வாழ்க்கையை நடத்தவும், எனது இரண்டு மருமகளின் கல்வியையும் ஆதரிக்க வேண்டியிருந்தது. சன்பேர்ட் எனக்கு சம்பளத்தை வழங்க முன்வந்த பின், பள்ளியில் முழுநேரமாக கவனம் செலுத்தத் தொடங்கினேன்," என்றார்.

இந்தப் பயணம் பல சவால்களைக் கண்டுள்ளது. சில நேரங்களில், பெற்றோர்களால் ஆண்டு இறுதியில் மட்டுமே கல்வி கட்டணத்தை செலுத்த முடிகிறது. மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.250 கல்விக் கட்டணம் மற்றும் ஒரு முறை சேர்க்கை கட்டணம் ரூ.1,000-த்தை விட குறைவாக இருந்தாலும், சில பெற்றோர்களால் அதையும் கட்ட முடியவில்லை. இதைச் சமாளிக்க, கல்வியில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக பெற்றோர்களுக்கு, அரசு உதவித்தொகைகளைப் பெறுவதற்கு உதவ அவர் திட்டமிட்டுள்ளார். பள்ளியின் இருப்பிடம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.

வாகனங்கள் பழையவை மற்றும் அவற்றிற்கு அடிக்கடி பராமரிப்பு தேவைப்படுகிறது. டியூ டிராப் அகாடமி மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது மற்றும் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து 1-7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேவை செய்கிறது. பல்வேறு கிராமங்களில் இருந்து 12 ஆசிரியர்களை நியமித்துள்ளது.

"இன்னும் பெற்றோர்களிடையே இப்பள்ளி தொடருமா? என்கிற பயமும் உள்ளது. சன்பேர்ட் டிரஸ்ட் மற்றும் கேரிங் பிரண்ட்ஸின் ஆதரவுடன், பள்ளியை மேலும் விரிவுபடுத்துவதற்காக நாங்கள் புதிய நிலத்தை வாங்கியுள்ளோம். இதற்காக அரசுத் திட்டங்களையும் அணுகவுள்ளோம்," என்றார்.

பள்ளியில் ஒரு கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம் மற்றும் இசை வகுப்புகளையும் அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

டியூ டிராப் அகாடமி மூலம், ஜெனவாஃபாபெஹ்பட் குழந்தைகளின் கல்வியை மட்டுமல்லாமல், பெரிய கனவுகளைக் காணவும் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறார்...

தமிழில்: ஜெயஸ்ரீ