
இந்தியாவின் 'மிகப்பெரிய சிறுபான்மையினர்’, பெண்களே என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னமும் அமல்படுத்தப்படாமல் இருப்பது பற்றி கேள்வி எழுப்பியது.
சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மூன்றில் ஒரு பங்கு இருக்கவேண்டும் என்பதை கட்டயமாக்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா கடந்த ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொகுதி எல்லை மறுசீரமைப்பும் செயல்படுத்த வேண்டியுள்ளது.
பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பிறப்பிக்கபட்டிருந்தாலும்கூட, மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பங்களிக்கும் பெண்கள், இதற்காகத் தொடர்ந்து காத்திருக்கவேண்டுமா என்று இந்த அமர்வு கேள்வி எழுப்பியது.
நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினராக இருக்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் உறுதிசெய்யப்படாமல் இருப்பதை நீதிபதி நாகரத்னா சுட்டிக்காட்டினார்.
மனுதாரரின் சார்பாக வாதம் செய்த மூத்த வழக்கறிஞரான ஷோபா குப்தா, அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் நோக்கமே தோல்வியுற்றதாக விவாதித்தார். உடனே இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றம், ஒன்றிய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு தரப்பில் பதில் கிடைத்ததும், இதுபற்றி மேற்கொண்டு விசாரிக்கப்படும்.
தமிழில்: ஸ்ரீவித்யா