பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தளமான ஸ்விக்கி, நாடு முழுவதும் புதிதாக 122 ரயில் நிலையங்களில் ரயிலில் உணவு வழங்கும் சேவையை விரிவு படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தளமான ஸ்விக்கி, நாடு முழுவதும் 122 நிலையங்களில் ரயிலில் உணவு டெலிவரி செய்யும் சேவையை விரிவு படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய நிலையங்களில் தமிழ்நாட்டில் மதுரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, பயணிகளுக்கு அதிக வசதியை உறுதி செய்யும் வகையில், முன்கூட்டிய ஆர்டர் நேரத்தை 24 மணிநேரத்திலிருந்து 96 மணிநேரமாக (4 நாட்கள்) உயர்த்தியுள்ளதாகவும் ஸ்விக்கி அறிவித்துள்ளது.
122 புதிய ரயில் நிலையங்கள்
உணவகங்களுக்குச் சென்று உணவு சாப்பிடவோ அல்லது வீட்டிற்கு வாங்கி வரவோ வேண்டும் என்ற நிலையை மாற்றி, வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் பிடித்தமான உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்ற வசதியை வழங்கி வருகிறது பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி.
இந்த வசதியை மேலும் விரிவு படுத்தி சமீபத்தில் ரயிலில் பயணம் செய்பவர்களும், தங்களுக்குப் பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்ற வசதியை ஸ்விக்கி ஆர்டர் செய்தது. முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படும் உணவுகளை பயணிகள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது.
தற்போது பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்த வசதியை நாடு முழுவதும் மேலும் 122 ரயில் நிலையங்களில் உள்ள முக்கிய ரயில்களுக்கு ஸ்விக்கி விரிவு படுத்தியுள்ளது. அதன்படி,
இந்த புதிய நிலையங்களில் அனந்த்பூர் (ஆந்திரப் பிரதேசம்), மதுரை (தமிழ்நாடு), ஆல்வார் (ராஜஸ்தான்), கோழிக்கோடு (கேரளா), குர்தா சாலை (ஒடிசா), யஸ்வந்த்பூர் (கர்நாடகா) மற்றும் கோண்டா (உத்தரப் பிரதேசம்) ஆகியவை அடங்கும்.
இது தவிர, முன்னதாக, 24 மணி நேரமாக இருந்த முன்கூட்டிய ஆர்டர் செய்யும் நேரத்தை, தற்போது 96 மணிநேரமாக, அதாவது, 4 நாட்களாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்விக்கி.
பிரியாணி முதலிடம்
ரயிலில் பயணம் செய்யும் போதும், விருப்பமான உணவை ஸ்விக்கி மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டு பண்டிகை காலமான, அக்டோபர் 16, 2025 முதல் நவம்பர் 03, 2025 வரையிலான காலகட்டத்தில் ரயில் பயணிகளின் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதை வைத்து தெளிவாக தெரிந்து கொள்ள முடிவதாக ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியாக இந்தக் காலகட்டத்தில் ரயில் பயணிகள் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்த உணவாக பிரியாணி உள்ளது. அதைத் தொடர்ந்து, காலை உணவாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட மசாலா தோசை மற்றும் பர்கர் உள்ளது. முக்கிய உணவுகள் மட்டுமின்றி, சிற்றுண்டிகளான பாவ் பாஜி, மார்கரிட்டா பீட்சா மற்றும் கார்ன் சாட் ஆகியவையும் மக்களால் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்தவர்களில் சுமார் 35 சதவீதம் பேர், தங்கள் உணவோடு குறைந்தது ஒரு இனிப்பு அல்லது இனிப்பு வகை உணவை ஆர்டர் செய்துள்ளனர். அவற்றில், டிரிபிள் சாக்லேட் வாஃபிள், டெண்டர் தேங்காய் ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன், பிஸ்காஃப் சீஸ்கேக் ஜார், ரசகுல்லா மற்றும் பிளாக் ஃபாரஸ்ட் பேஸ்ட்ரி போன்ற முன்னணியில் உள்ளன. குறிப்பாக ஒரே ஒரு வாடிக்கையாளர், ஒரு நேரத்தில் 45 பொருட்களை ஆர்டர் செய்து அசத்தியுள்ளார்.
முன்னணி பிராண்டுகள் முதல் உள்ளூர் சமையலறை வரை
பண்டிகை நாட்களில் அதிக ஆர்டர்களைப் பெற்ற ரயில்களில் 'கரிப் ரத் எக்ஸ்பிரஸ்' (சென்னையிலிருந்து டெல்லிக்கு, 12611), சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் (17209), சபரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20630), மற்றும் கேரளா எக்ஸ்பிரஸ் (12626) ஆகியவை முதலிடத்தில் உள்ளன. SMVT பெங்களூரு - புதிய டின்சுகியா சிறப்பு கட்டண விழா சிறப்பு ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த 72 பயணிகளில், 28 பேர் ஒரே நேரத்தில் ஸ்விக்கியின் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இந்த உணவுகள் அனைத்தும் ஒரே ரயில் நிலையத்தில் வழங்கப்பட்டதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இதேபோல், ஸ்விக்கியின் மூலம், மேற்கூறிய பண்டிகை காலத்தில் ரயிலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் ஹால்டிராம்ஸ், பாரடைஸ் பிரியாணி, A2B, ஹோட்டல் ஆர்யாஸ், அன்னாய் உணவகம், ரோமினஸ் பிஸ்ஸா, பர்கர் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற பிராண்டுகள் முன்னணியில் உள்ளன.
இதன்மூலம், பாரம்பரிய உள்ளூர் சமையலறையில் தொடங்கி, முன்னணி தேசிய உணவகங்கள் வரை எல்லா தளங்களில் இருந்தும் தங்களுக்கு வேண்டிய உணவை, ஒரே தளத்தில் எளிதாகவும், நம்பத்தகுந்த முறையிலும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள ஸ்விக்கி உதவுவதாக தெரிவித்துள்ளது.
உணவின் மூலம் கொண்டாட்டங்கள்
இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, பயணம் செய்யும் போதும் கூட, இந்தியர்கள் கொண்டாட்டத்தின் இனிமையை ஒருபோதும் தவறவிடுவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. பயணிகளின் இந்தக் கொண்டாட்ட மனநிலையை ஸ்விக்கி சாத்தியப்படுத்தி இருப்பதாகவும் ஸ்விக்கி இந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இது குறித்து ஸ்விக்கியின் உணவு உத்தி, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் புதிய முயற்சிகள் துணைத் தலைவர் தீபக் மாலூ கூறுகையில், “இந்தியாவில் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் உணவு எப்போதும் மையமாக இருந்து வருகிறது. பயணத்தில் இருப்பதால் மட்டும் அந்தக் கொண்டாட்டம் மாறிவிடாது.
பண்டிகைக் காலத்தில், ஆயிரக்கணக்கானோர் பண்டிகையைக் கொண்டாட வீட்டிற்குச் செல்லும் இந்த நேரத்தில், பயணிகள் தங்கள் பயண நேரங்களில்கூட, ரயிலில் உணவு மூலம் கொண்டாட்டங்களைக் கொண்டு வருவதில் ஸ்விக்கி எத்தகைய முக்கியப் பங்காற்றுகிறது என்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
"பிரியாணி மற்றும் தோசைகள் முதல் இனிப்புகள் மற்றும் தாலிகள் வரை ஒரே பெட்டியில் குடும்பங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எங்கள் நெட்வொர்க் இப்போது 122 நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட 4 நாள் முன்பதிவு சாளரத்துடன், பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுவதையும், உள்ளூர் விருப்பங்களிலிருந்து நம்பகமான உணவை அனுபவிப்பதையும், ஒவ்வொரு பயணத்தையும் வீட்டைப் போலவே உணர வைப்பதையும் நாங்கள் இன்னும் எளிதாக்குகிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணங்களின் போது ஸ்விக்கி மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதன் மூலம், பயணிகள் தங்களது ரயில் பயணங்களை மேலும் இனிமையானதாகவும், முன்பைவிட மகிழ்ச்சிகரமானதாகவும் உணர்வதாக ஸ்விக்கி பெருமிதத்துடன் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.