+

12,000 ஊழியர்களை பணிநீக்கிய TCS - ஐடி ஊழியர் சங்கங்கள் சென்னையில் போராட்டம்!

12,000 ஊழியர்களை TCS பணிநீக்கம் செய்துள்ளதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஐடி மற்றும் ஐடிஆஎஸ் அமைப்புகள் கூட்டாக டிசிஎஸ் நடவடிக்கைக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த புதிய பணிநீக்க நடவடிக்கை, இந்நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாகும். டிசிஎஸ்-ன் இந்த முடிவு தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ஆட்குறைப்பு முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஐடி மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்களின் சங்கம் (UNITE) இணைந்து இந்தப் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. UNITE தனது சமூக வலைத்தள பக்கமான X தளத்தில் எழுதியுள்ள பதிவில்,

“டிசிஎஸ் லாபத்தை மட்டும் கணக்கில் வைத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. தலைமைப் பண்பும் அதிக அனுபவமும் கொண்டுள்ள மூத்த ஊழியர்களை சட்டவிரோத பணிநீக்கம் செய்வது, ஐடி துறையில் உள்ள வேலைவாய்ப்பு பாதுகாப்பின்மையை உறுதிபடுத்துவதாகும். எனவே, பாதிக்கப்படும் ஊழியர்களுக்காக நாங்கள் நீதி கோருகிறோம்!” என்று தெரிவித்துள்ளது. 

" align="center">ஐடி ஊழியர்கள் போரோட்டம்

ஐடி ஊழியர்களின் போராட்டம்

டிசிஎஸ் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசு தொழிலாளர் நலத்துறை இப்பிரச்னையில் தலையிட வேண்டும் என்றும் சென்டர் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (CITU) உடன் இணைந்து UNITE ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. சென்னை திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் பகுதியில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஐடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

கட்டாய ராஜினாமா நிறுத்தப்பட வேண்டும், தமிழக அரசு தனி IT கொள்கை கொண்டு வர வேண்டும், அரசு – ஐ.டி நிறுவனங்கள் – தொழிற்சங்கங்கள் இடையே (TRIPARTITE AGREEMENT) உடன்படிக்கை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், உலக அளவில் நீதி கோரி பிரச்சாரம் செய்ய UNITE திட்டமிட்டுள்ளது. பணிநீக்கங்கள் குறித்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

“டிசிஎஸ் ஒரு future-ready நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் உள்ளது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பணி சாத்தியமில்லாத ஊழியர்களையும் நிறுவனத்தில் இருந்து விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இது எங்கள் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2% பேராகும். முதன்மையாக இடைநிலை மற்றும் மூத்தவர்களாக உள்ளவர்களை, இந்த ஆண்டில் விடுவிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த மாற்றம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்ய, உரிய கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது.
TCS
"பாதிக்கப்படக்கூடிய எங்கள் சக ஊழியர்களுக்கு இது ஒரு சவாலான நேரம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கிறோம், மேலும் அவர்கள் புதிய வாய்ப்புகளுக்கு மாறும்போது அவர்களுக்கு பொருத்தமான நன்மைகள், outplacement, ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம்,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பணிஇழப்பை சந்திக்கும் ஊழியர்களுக்கு முறையான சலுகைகள், ஆலோசனை, outplacement மற்றும் ஆதரவை வழங்குவதாகவும் டிசிஎஸ் அறிவித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு notice period இழப்பீடு மற்றும் severance benefits-ம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

facebook twitter