
டெஸ்லா நிறுவனம் சுமார் 8 ஆண்டுகளாக எலான் மஸ்கிற்கு சம்பளம் வழங்கவில்லை, என்று அவரின் சகோதரர் கிம்பல் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிர்வாகக் குழுமம் சமீபத்தில் எலான் மஸ்கிற்கு 29 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2.54 லட்சம் கோடி) மதிப்புள்ள பங்குகளை ஒதுக்கியது. மஸ்கை சிஇஓ ஆக தக்கவைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சம்பளம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அவரது இளைய சகோதரரும், டெஸ்லா வாரிய உறுப்பினருமான கிம்பல் மஸ்க், எலான் மஸ்கிற்கு கடந்த 6 முதல் 8 ஆண்டுகளாக எந்தவித சம்பளமும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி செய்தி நிறுவனத்திற்கு கிம்பல் மஸ்க் அளித்த பேட்டியில்,
"எனது சகோதரருக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த ஆறு முதல் எட்டு வருடங்களாக அவருக்கு எந்த சம்பளமும் வழங்கப்படவில்லை. இது சரியான நடைமுறை இல்லை. அவருக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் அதற்கான நடவக்கைகளை டெஸ்லா குழுமத்தினர் எடுப்பார்கள் என்பதே எனது நம்பிக்கை," என்று குறிப்பிட்டார்.

எலான் மஸ்க், கிம்பல் மஸ்க்
எலான் மஸ்கின் வருவாய் மற்ற கார்ப்பரேட் தலைவர்களைப் போல நிலையான சம்பளம் அல்லது வருடாந்திர போனஸாக இல்லை. மாறாக, அவரது வருமானம் நிறுவனத்தின் செயல்திறன் இலக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, வருவாய், லாபம் அல்லது சந்தை மதிப்பு போன்ற குறிப்பிட்ட இலக்குகளை டெஸ்லா அடையும்போது மட்டுமே, அவருக்கு அதிக அளவிலான பங்கு விருப்பங்கள் (stock options) வழங்கப்படும். இந்த தனித்துவமான அமைப்பு, அவரை உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. இருப்பினும், இது நியாயமான ஊதியம் மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த விவாதங்களுக்கு மையமாக இருந்து வருகிறது.
நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் புதிய ஊதியத் திட்டம்
2018 ஆம் ஆண்டில் எலான் மஸ்கிற்கு வழங்கப்பட்ட ரூ.4.67 லட்சம் கோடி (56 பில்லியன் டாலர்) ஊதியத் தொகுப்பை டெலவேர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. இந்த ஊதியம் "நம்ப முடியாதது" என்றும், வாரியத்தின் மீது மஸ்கின் செல்வாக்கு அதிகமாக இருந்துள்ளது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டப் போராட்டத்திற்கு மத்தியில், டெஸ்லா வாரியம் எலான் மஸ்கிற்கு இடைக்கால ஊதியத் தொகுப்பை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 96 மில்லியன் டெஸ்லா பங்குகள் அடங்கும். இதன் மதிப்பு சுமார் $29 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பங்குகளுக்கான முழு அணுகலையும் எலான் மஸ்க், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாகியாக அல்லது ஒரு முக்கிய பதவியில் நீடித்தால் மட்டுமே பெறுவார். இந்த முடிவை வாரியத்தின் ஒரு சிறப்பு குழு எடுத்தது. இதில் எலான் மஸ்க் மற்றும் கிம்பல் மஸ்க் இருவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கான போராட்டம்
மஸ்கின் ஊதிய விவாதம் வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, நிறுவனத்தின் கட்டுப்பாடு பற்றியதும் கூட. கடந்த ஜனவரி மாதம், டெலவேர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே, எலான் மஸ்க் தனது சமூக ஊடகப் பக்கமான 'எக்ஸ்'-ல் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், டெஸ்லாவின் வாக்களிக்கும் உரிமையில் சுமார் 25% தனக்கு வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அளவு செல்வாக்கு இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற திட்டங்களில் டெஸ்லாவை ஒரு முன்னணி நிறுவனமாக மாற்றுவது சாத்தியம் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
ஒருவேளை தனக்கு அது கிடைக்கவில்லை என்றால், அத்தகைய திட்டங்களை டெஸ்லாவுக்கு வெளியே தொடர விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். அவர் சொன்னதைப் போலவே xAI என்கிற AI startup நிறுவனம் தொடங்கி Grok AI chatbotஐ சந்தைப்படுத்தி அதை எக்ஸ் தளத்துடன் இணைத்தார். Grok-ன் அடுத்த கட்ட அப்டேட்கள் குறித்தும் மஸ்க் பேசி வருகிறார்.
இதற்கு முன்னதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்ற இந்தியரான வைபவ் தனேஜா, ஆண்டுக்கு ரூ.1100 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகின. இது எலான் மஸ்கின் சம்பளக் கொள்கை குறித்து மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மொத்தத்தில், எலான் மஸ்கின் சம்பள விவகாரம், நவீன கார்ப்பரேட் உலகில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியம், பங்குதாரர்களின் உரிமை, மற்றும் நிறுவன நிர்வாகம் ஆகிய சிக்கலான விஷயங்களை முன்னிறுத்துகிறது. டெஸ்லா உலகின் முன்னணி நிறுவனமாக இருந்தாலும், அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எலான் மஸ்கின் ஊதியம் ஒரு பெரிய விவாதப் பொருளாகவே தொடர்கிறது.