இனி எச்பி லேப்டாப் தமிழ்நாட்டில் உருவாகும் - ரூ,1,000 கோடியில் ஆலை அமைக்க ஒப்பந்தம்!

12:03 PM Apr 10, 2025 | cyber simman

தமிழ்நாட்டில் எச்பி லேப்டாப்களை தயாரிப்பதற்காக சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.1,000 கோடி செலவிலான உற்பத்தி ஆலையை அமைக்க, மாநில அரசுடன் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இந்த ஆலை மூலம் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை எஸ்க் தளத்தில் பகிர்ந்து கொண்ட,

தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சிக்கும் எங்களுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் முற்போக்கான கொள்கை, துடிப்பான உள்கட்டமைப்பு வசதி, திறன் வாய்ந்த தொழிலாளர்கள், எளிதாக வர்த்தகம் செய்யும் தன்மை ஆகிய அம்சங்கள், மாநிலத்தை இந்தியாவில் தொழில் முதலீட்டிற்கு ஏற்ற இடமாக உருவாக்கியிருப்பதை டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் அங்கீகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 100 பில்லியன் டாலர் மின்னணு உற்பத்தி சூழலை உருவாக்கி வருவதாகவும், ஒவ்வொரு ஆலையும் அதை நோக்கிய முன்னேற்றம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

டிக்சன், எச்பி மற்றும் இங்கு தயாரிக்கப்பட உள்ள மற்ற பிராண்ட் லேப்டாப்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இண்டோஸ்பேஸ் தொழில்பூங்காவில் இந்த ஆலை அமைய உள்ளது. இந்த ஆலை மூலம் 5,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Induja Raghunathan