
பங்குச் சந்தை குறித்த செய்திகளைத் தினமும் கேள்விப்பட்டாலும், இன்னும் பலருக்கு அதில் வர்த்தகம் செய்வது தொடர்பான போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. அதனால்தான், பல தனியார் பங்கு தரகு நிறுவனங்கள், இது போன்ற முதலீட்டாளர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் உதவிகள் செய்து வருகின்றன.
ஆனால், என்னதான் இது போன்று பங்கு தரகு நிறுவனங்களை மட்டும் நம்பி, பங்குச் சந்தையில் இறங்கினாலும், பங்கு சந்தை குறித்து முதலீட்டாளருக்கு போதிய அறிவு இருக்க வேண்டும். இல்லையென்றால் மோசடிகளைச் சந்திக்க வேண்டி வரலாம். இது போன்ற ஏமாற்றுச் சம்பவங்களை நாம் அடிக்கடிக் கேள்வியும் பட்டிருப்போம்.
ஆனால், இப்போது மும்பையில் நடந்துள்ள பங்குச் சந்தை மோசடி விவகாரம், ‘அட அப்பாவி மக்களை இப்படியும்கூட ஏமாற்றுவார்களா?’ என நொந்து கொள்ளும் வகையில் உள்ளது. ஏனென்றால், ஏமாற்றப்பட்ட நபர் 72 வயது முதியவர். பங்குச் சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத அவர், தனியார் பங்கு தரகு நிறுவன ஊழியர்கள் இருவரை நம்பி, தற்போது ரூ.32 கோடி இழப்பைச் சந்தித்திருக்கிறார்.
அதுவும் ஒரே நாளில் இந்த மோசடி நடைபெறவில்லை... சுமார் நான்கு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த மோசடியில் அந்த முதியவரை சிக்க வைத்துள்ளனர்.

பங்கு வர்த்தக மோசடி நடந்தது எப்படி?
மும்பை மேற்கு மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவரான பாரத் ஹரக்கந்த் ஷா, தனது மனைவியுடன் சேர்ந்து பரேல் பகுதியில் புற்றுநோயாளிகளுக்காக குறைந்த வாடகையில் விருந்தினர் விடுதியை நடத்தி வருகிறார். கடந்த 1984ம் ஆண்டு இவரது தந்தையின் மறைவுக்குப் பின், அவரது பங்குகள் பாரத் பேருக்கு மாறியது. ஆனால், பரம்பரையாக பெற்ற பங்குகளை நிர்வகிக்க முடியாமல், எந்த வர்த்தகமும் செய்யாமல் இருந்து வந்துள்ளார் பாரத்.
பங்குச் சந்தை குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாததால், 2020ம் ஆண்டு, தனது பாரம்பரிய பங்குகளை பாதுகாப்பாக சந்தையில் பயன்படுத்த முடிவெடுத்த பாரத், நண்பர் ஒருவரின் யோசனைப்படி ’குளோப் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்’ என்ற தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் டிமேட் மற்றும் வர்த்தக கணக்குகளை ஆரம்பித்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும், கூடுதல் முதலீடு இல்லாமல், இந்தப் பங்குகளை பிணையாக வைத்தே பாதுகாப்பாக வர்த்தகம் செய்யலாம் எனக் கூறி, அக்ஷய் பாரியா மற்றும் கரண் சிரோயா என்ற இரண்டு தனிப்பட்ட வழிகாட்டிகளையும் பாரத்திற்கென நியமித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளால், குளோப் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் மீது பாரத்திற்கு நம்பிக்கை அதிகமாக, தனது பங்குகளை மறு பேச்சின்றி அந்த நிறுவனத்திற்கு கை மாற்றியுள்ளார். அந்த நிறுவனம் நியமித்த அந்த இரண்டு ஊழியர்களும், பாரத்திடம் நெருங்கிப் பழகி, தங்கள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்க வைத்துள்ளனர்.
ஏற்கனவே பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த எந்தவொரு தெளிவும் இல்லாத பாரத்தும், அவரது மனைவியும் அந்த இரண்டு ஊழியர்களின் வார்த்தைகளை அப்படியே நம்பி வந்துள்ளனர்.
ஓடிபி எண்கள் உட்பட, அனைத்து தகவல்களையும், எவ்வித கேள்வியும் கேட்காமல் அந்த ஊழியர்களுக்கு தந்து வந்துள்ளார் பாரத். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த இரண்டு ஊழியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, பாரத்தின் வர்த்தக கணக்கு மற்றும் தகவல் தொடர்புகள் தொடர்பான அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

போலி தரவுகளைக் காட்டி மோசடி
பாரத்திற்கு அவ்வப்போது அவரது பங்குகள் தொடர்பான விபரங்களை அவர்கள் போலியாக உருவாக்கி தந்துள்ளனர். அவர்கள் அளித்த வருடாந்திர அறிக்கைகளும், லாபகரமானதாகவே இருந்துள்ளது. ஆனால், அவை அனைத்தும் போலியென அறியாத பாரத், தனது பங்குகள் பாதுகாப்பாக, நல்ல இலாபத்துடன் இருப்பதாக நினைத்து வந்துள்ளார்.
ஒருநாள், இரண்டு நாள் என்றில்லை.. சுமார் நான்கு ஆண்டுகளாக இதே பாணியில் பாரத்தை ஏமாற்றி வந்துள்ளனர் அந்த இரண்டு ஊழியர்கள்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், குளோப் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் ரிஸ்க் மேலாண்மை துறையில் இருந்து பாரத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில்,
‘உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமாக சேர்த்து, உடனடியாக செலுத்த வேண்டிய கடன் பாக்கி ரூ.35 கோடி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தத் தொகையை உடனே கட்டத் தவறும் பட்சத்தில் உங்கள் பங்குகள் விற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி அடைந்த பாரத், நேரடியாகச் சென்று அந்நிறுவனத்தில் விசாரித்துள்ளார். அப்போதுதான், அவரது அனுமதியே இல்லாமல் அவர்களது கணக்கில் பெரிய வர்த்தகம் நடத்தப்பட்டதும், அவை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதும் அவருக்குத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஒரே எதிர்த்தரப்பில் திரும்பத் திரும்ப பங்குகளை வாங்கி, விற்று சுழற்சி வர்த்தகங்கள் நடத்தப்பட்டிருப்பதும் தெரிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

போலீசில் புகார்
தன் தரப்பை அவர் எடுத்துச் சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. இதனால், வேறு வழி இல்லாமல் தனது பங்குகளை அவர் விற்று, ரூ.35 கோடியை அந்நிறுவனத்திற்கு அவர் செலுத்தியுள்ளார். கூடவே, அந்நிறுவனத்தின் இணையதளம் மூலம், தனது முழுமையான வர்த்தக அறிக்கையை அவர் பதிவிறக்கம் செய்து, தனக்கு முன்பு அளிக்கப்பட்ட அறிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார். அப்போதுதான் தான் நான்கு ஆண்டுகளாக தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தேசியப் பங்குச் சந்தையில் இருந்து இதற்கு முன்னர் தனக்கு பல எச்சரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதும், தனக்குத் தெரியாமலேயே அதற்கு தன் பெயரில் பதில்கள் அனுப்பப்பட்டுள்ளதையும் தெரிந்து கொண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார் பாரத்.
உடனடியாக இது தொடர்பாக, குளோப் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். தற்போது இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 409 (நம்பிக்கை துரோகம்) மற்றும் 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை வர்த்தகம் மூலம் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து நிம்மதியான ஓய்வூதியத்திற்கு பாரத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ரூ.35 கோடி அபராதமாகக் கட்டி, தனது பங்குகளை இழந்து, கூடவே நிம்மதியையும் இழந்து வழக்கு விசாரணைகளுக்காக அவர் அலைய வேண்டியதாகி விட்டது.

முன்னெச்சரிக்கை முக்கியம்
போதிய விழிப்புணர்வும், தெளிவும் இல்லாமல் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதோடு, தரகு நிறுவன ஊழியர்களை கண்மூடித்தனமாக நம்பி, அவர்கள் அளித்த தகவல்களைச் சரி பார்க்காமல், ஓடிபி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எதிர் கேள்வி கேட்காமல் அளித்ததன் விளைவுதான், தற்போது பாரத்தை நிம்மதி இழந்து இந்த அலைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
எனவே, பங்குச் சந்தை என்றில்லை, எந்தவொரு துறையிலும் அல்லது நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அதைப் பற்றி முழுவதுமாக தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.
அதோடு, உறவினர்கள், நண்பர்கள் அல்லது ஊழியர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்பாமல், ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்வதும் நல்லது. ஓடிபி, பாஸ்வேர்ட் போன்ற வசதிகளே மக்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்கத்தான் என்பதை புரிந்து கொண்டு, அதனை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிர்வதைத் தவிர்ப்பதோடு, முன்னெச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.