அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி முறைகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இந்த முறை அமலுக்கு வருவதற்குள், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்வதற்காக, இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25% இறக்குமதி வரி விதிப்பதாக ஆகஸ்ட் 6ம் தேதி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவில் கடுமையான பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவிகித இறக்குமதி வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த புதிய வரி 21 நாட்களில் அதாவது, செப்டம்பரில் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா விதிக்கும் மொத்த வரி 50% ஆக உயரும். இது அமெரிக்கா விதித்திருக்கும் மிகக் கடுமையான வரிகளில் ஒன்றாகும்.
இந்திய வர்த்தகத்தின் மீது தாக்கம்
இந்தியா, 2024-ஆம் ஆண்டு $87 பில்லியன் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இவற்றில் ஆடைகள், காலணிகள், நகைகள், மருந்துகள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை முக்கியமானவை. புதிய வரி விதிப்பு இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தம் என்று வணிக நிபுணர்கள் கருதுகின்றனர்.
"இந்த வரிவிதிப்பு மூலம், அமெரிக்கா நோக்கி செல்லும் இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் 55% பாதிக்கப்படும்," என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரல்ஹான் தெரிவித்துள்ளார்.
"இத்தகைய கடுமையான வரி விதிப்பால், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் முற்றிலும் முடங்கி விடும்,” என்று Emkay Global பொருளியல் நிபுணர் மாதவி அரோரா கூறியுள்ளார்.
பொருளாதார சறுக்கல்கள்
- இறக்குமதி வரி உயர்வால் வியட்நாம், பங்களாதேஷ், ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா 30–35% வர்த்தக நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.
- சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்தியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன, எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5% இல் இருந்து 6%-க்கு கீழே செல்லும் அபாயம் உள்ளதாக HDFC வங்கி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசியல் பின்னணி
வர்த்தக நடவடிக்கையாக இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான அபராதமாக அமெரிக்கா இந்த வரி விதிப்பை செய்துள்ளது. இந்தியாவை அடிபணிய வைப்பதற்காக டிரம்ப் கையில் எடுத்திருக்கும் அஸ்திரமே உச்சபட்ச இறக்குமதி வரி. அண்மையில், டிரம்ப் இந்திய பொருளாதாரத்தை "செத்துப் போன பொருளாதாரம்" (dead economy) என்றும் இந்திய வர்த்தகக் கட்டுப்பாடுகளை "மோசமானது" எனவும் சாடியிருந்தார்.
அவருக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா,
“உலக வளர்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியா அதிக பங்களிப்பை செலுத்தி வருகிறது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளரும்,” என்று தெரிவித்துள்ளார்.
File photo
இந்தியாவின் பதில்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கையை மத்திய அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பல நாடுகள் தங்களின் தேசிய நலனுக்காக நடவடிக்கை எடுக்கும்போது, இந்தியாவின் நடவடிக்கைக்கு மட்டும் கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் செயல் மிகவும் துரதிர்ஷ்டவசமானதும், நேர்மையற்றதும் ஆகும். இது எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாதது. உரிய காரணம் இல்லாதது,” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதேசமயம், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர்,
“நாங்கள் எடுக்கின்ற இறக்குமதி முடிவுகள் சந்தையின் நிலைமைகள் மற்றும் நமது மக்கள் சார்ந்த தேவைகளின் அடிப்படையிலேயே அமைந்தவை. இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதன்மை நோக்கம். இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகம் பாதிக்கப்படக்கூடிய இந்திய ஏற்றுமதி பொருட்கள்
நகைகள் மற்றும் ரத்தினங்கள்:
- இந்தியாவின் நகை மற்றும் நவரத்தினங்கள் 30% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆடம்பர நகைகள் ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக இந்திய நவரத்தின மற்றும் நகைகள் ஏற்றுமதி கூட்டமைப்பின் தலைவர் கிரித் பன்சாலி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
- இதனால் இவற்றின் விலையும் அமெரிக்காவில் உயரும்.
ஜவுளித்துறை:
- இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு படுக்கை விரிப்புகள், கிச்சன், பாத்ரூம் துணிகள் 36 சதவிவிகதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- குழந்தைகளுக்கான ஆடைகள், சர்ட்டுகள், sportswear ஆகியவை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- ஆண்டுக்கு சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாவதாக அந்நாட்டு அரசின் தகவல்கள் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
- ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வரியால் விலை உயரப்போகும் நிலையில் புதிய வரி விதிப்பு அவற்றின் விலையை மேலும் அதிகரிக்கும்.
கடல் உணவுகள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள்:
- இறால், பெட்ரோல் எண்ணெய்கள், சோலார் பேனல்கள் மற்றும் மென்பொருள் பாகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.
- கடந்த நிதியாண்டில் அமெரிக்காவிற்கு 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோ உதிரி பாகங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இயந்திர பாகங்கள், பிரேக்குகள், வயரிங், ஹார்னெஸ்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- 25% வரிவிதிப்பால் கார் பழுது பார்க்கும் செலவு அதிகரிக்கக்கூடும் மற்றும் உதிரி பாகங்கள் ஏற்றுமதியை சீர்குலைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
- இந்நிலையில் மேலும் மேலும் 25% கூடுதல் வரி விதிப்பு நிலைமையை இன்னும் மோசமாக்க நேரிடும்.
வரிவிலக்கு பெற்ற பொருட்கள்
ஸ்மார்ட்போன்கள்:
- அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் சீனா மற்றும் வியட்நாமில் இருந்து அனுப்பப்படுகின்றன. எனினும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியாவும் கணிசமான பங்கு வகிக்கிறது.
- டெல்லியில் ஆப்பிள் உற்பத்தி தொடங்கிய பின்னர் சீனாவின் ஸ்மார்ட் போன் ஏற்றுமதியானது குறைந்துள்ளது.
- Apple உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியதால், iPhone உள்ளிட்ட மொபைல்கள் அதிக அளவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்கிறது.
- ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள்:
- இந்தியா ஏற்றுமதி செய்யும் ஜெனெரிக் மருந்துகள் (புற்றுநோய், காயங்கள், வலி நிவாரணிகள்) தற்போது சலுகையுடன் கிடைக்கின்றன.
- 2025-ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
- இந்தியாவிலிருந்து இறக்குமதிக்கப்படும் மருத்துவ தயாரிப்புகள், செயலில் உள்ள APIs (Active Pharmaceutical Ingredients), மற்றும் அவற்றின் முக்கிய கூறுகள் வரி வரம்பில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.
எரிசக்தி தொடர்பான பொருட்கள்
- கச்சா எண்ணெய், சுத்தப்படுத்திய எரிபொருட்கள், இயற்கை வாயு, நிலக்கரி, மின்சாரம் போன்றவற்றிற்கும் வரிவிலக்கு தரப்பட்டுள்ளது.
- முக்கிய தொலைபேசி மற்றும் மின்னணு உபகரணங்கள் கணினிகள், டேப்லெட்கள், ஸ்கேன் பிளட் டிஸ்ப்ளேக்கள் மற்றும் IP களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.