+

இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.12,500 கோடி முதலீடு செய்யும் Vedanta!

இந்தியாவின் முன்னணி இயற்கை வள நிறுவனமான வேதாந்தா லிமிடெட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தைக்கு வலுசேர்க்கும் வகையில், ரூ. 12,500 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் மின்சார வாகனத் துறையில் இருக்கும் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவற்றிற்கு ஏற்ற உலோக தயாரிப்பிற்காக ரூ.12,500 கோடியை முதலீடு செய்துள்ளதாக இந்தியாவின் முன்னணி இயற்கை வள நிறுவனமான வேதாந்தா லிமிடெட் தெரிவித்துள்ளது. இந்த மாபெரும் முதலீடு, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறையில் வேதாந்தாவின் பங்கு மிக முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.

வேதாந்தாவின் நிறுவனத்தின் முதலீடானது, மின்சார வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உலோகங்களின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களில் பேட்டரியின் எடையைக் குறைப்பதில் அலுமினியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் எடை குறைவான பண்பு, வாகனத்தின் வரம்பை 10-15% வரை அதிகரிக்க உதவுகிறது. வேதாந்தா தனது அலுமினிய உலைகளை விரிவுபடுத்துவதோடு, சக்கரங்கள், பேட்டரி உறைகள் மற்றும் மின்சார வாகனத்தின் கட்டமைப்பிற்குத் தேவையான உயர் மதிப்புள்ள அலுமினிய கலவைகளின் உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

vedanta

மின்சார வாகனங்களுக்குத் தேவையான எதிர்ப்பு பண்புகள் கொண்ட கலவைகளைத் தயாரிக்கப் பயன்படும் துத்த நாகக் கலவை ஆலையை அமைக்கவும் இந்த நிதியானது செலவிடப்பட உள்ளது. இந்தியாவின் ஒரே நிக்கல் உற்பத்தியாளராக வேதாந்தா ஒரு தனித்துவமான நிறுவனமாக உள்ளது. நிக்கல், மின்சார வாகன பேட்டரி அமைப்புகளில் ஒரு முக்கிய அங்கமாகும். அதிக வரம்பு கொண்ட பேட்டரிகளுக்குத் தேவையான நிக்கல் சல்பேட்டையும் வேதாந்தா தயாரிக்கிறது.

"எரிசக்தி மாற்ற உலோகங்களின்" உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், வேதாந்தா உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியில் வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்க முடியும். இது இந்தியா தனது முக்கிய கனிமங்கள் மற்றும் பாகங்களுக்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் "சுயசார்பு இந்தியா" என்ற இலக்கை அடைவதற்கு பெரிதும் துணை நிற்கும். அலுமினியம், துத்தநாகம், நிக்கல் போன்ற முக்கியமான உலோகங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம், வேதாந்தா இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து இலக்குகளுக்கு உதவுவதோடு, வளர்ந்து வரும் EV சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான நேரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் முதலீடு அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதாக அமைந்துள்ளது. 2030-க்குள் மொத்த வாகன விற்பனையில் 30% மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைய இந்த முதலீடு உதவும் விதத்தில் உள்ளது.

தொகுப்பு: கஜலட்சுமி

facebook twitter