
’வேகமாக தோல்வியை சந்திக்க வேண்டும்' என்பது போன்ற மேற்கத்திய ஸ்டார்ட் அப் அறிவுரைகள் இந்திய சூழலில் பொருந்தாது என்றும், இந்திய சூழலுக்கு ஏற்ற ஸ்டார்ட் அப் வரைவு புத்தகம் தேவை என்றும், ஆலோசனை நிறுவனம் டிப்பிங் பாயிண்டின் சி.இ.ஓ.விபுல் மேத்தா கூறியுள்ளார்.
உலகில் வேகமாக வளரும் ஸ்டார்ட் அப் சூழல்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் சிறிய நகரங்களில் கூட ஸ்டார்ட் அப் துவக்கும் ஆர்வம் இருக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கி நடத்துவதை பொருத்தவரை பல வகையான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படுகின்றன. வேகமான வளர்ச்சி, வேகமாக தோல்வி கண்டு மாற்று வழி தேடுவது உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கும், இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் டிப்பிங் பாயிண்ட் சி.இ.ஓ.விபுல் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார்.

லிங்க்டுஇன் பதிவு
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள லிங்க்டுஇன் பதிவில்,
"வேகமாக தோல்வி அடையுங்கள் எனும் ஆலோசனை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் சரியாக இருக்கலாம் ஆனால், இந்திய சூழலில் இது சூதாட்டம் போன்றது," என கூறியுள்ளார்.
அதிவேக வளர்ச்சியை விட ஸ்டார்ட் அப்கள் லாபத்தை முதன்மையாக கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க சூழல் சாத்தியமாகும் இடர் தன்மை இந்திய சூழலில் சாத்தியம் இல்லை, என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க ஊதியம்
“அமெரிக்காவில் ஒரு மென்பொருள் பொறியாளர் 1,20,000 டாலர் ஈட்டுகிறார். அவர்கள் ஸ்டார்ட் அப் தோல்வி அடைந்தால் ஆறு மாதங்களில் மீண்டு விடலாம். இந்தியாவில் அதே பொறியாளர் ரூ.12-15 லட்சம் சம்பாதிக்கலாம். அவருக்கு குடும்பம் இருக்கும். வாடகை உண்டு. அவர் தோல்வி அடைந்தால் 2 ஆண்டுகள் பின்னடைவு ஏற்படும்,” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கத்திய சூழலில் சாத்தியமாகும் நிதி பாதுகாப்பு இந்தியாவில் இல்லாததால், வெற்றி அடையும் வரை நிதியை செலவிடுவது எனும் ஆலோசனை இந்தியாவில் சரியாக வராது. வேகமாக தோல்வி அடைவது என்பது இந்தியாவில் சாத்தியம் இல்லாத ஆடம்பரம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நலன்கள், சுகாதார பாதுகாப்பு போன்றவை இல்லாத சூழலில் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், தோல்வி என்பது தொழில்முறையானது மட்டும் அல்ல, தனிப்பட்ட மற்றும் குடும்ப நெருக்கடி எனும் நிலையில் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோஹோ, ஃபிரெஷ்வொர்க்ஸ், ஜெப்டோ போன்ற லாபத்தை முதன்மையாக கொண்ட வர்த்தக மாதிரி இந்தியாவுக்கு ஏற்றது என்றும் கூறியுள்ளார். இந்திய நிறுவனர்கள் எப்படியேனும் வளர்ச்சி அடையலாம் எனும் நிலையில் செயல்பட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் லாபமீட்டும் தன்மை என்பது தொழில்முறை தேவை மட்டும் அல்ல, இது ஒரு தார்மீக தேவையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
”பெரிதாக இலக்கு கொள்ளுங்கள். ஆனால் லாபத்துடன் நிறுவனத்தை உருவாக்குங்கள்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் கவனத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Induja Raghunathan