ஒரே ஒரு கிளிக் செய்தால் நாம் செல்ல நினைக்கும் இடத்தில் நம்மை கொண்டு சேர்த்துவிட வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் காலம் இது. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் என எது வேண்டுமோ அதை புக் செய்துகொள்ளும் வசதி உள்ளது.
பெரும்பாலும் ஆண்களே வாகன ஓட்டுநர்களாக இருப்பதால், இந்த சேவையை பயன்படுத்திக்கொள்வதில் பெண் பயணிகளின் பாதுகாப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதே பெண் ஓட்டுநர்கள் அதிகளவில் இருந்தால் பாதுகாப்பு குறித்த அச்சம் இல்லாமல் பெண்கள் எந்த நேரத்திலும் பயணிக்கலாம்.
பெண் ஓட்டுநர்களை ஊக்குவிப்பதில் ரேபிடோ கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அரவிந்த் சங்கா. பெங்களூருவில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2025 நிகழ்வில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவுடனான உரையாடலில் இதுபற்றி விரிவாக பேசினார்.
பெண்களின் பாதுகாப்பிற்கு ரேபிடோ எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் பெருநகரங்களில் 35% ரைட்கள் பெண்களிடமிருந்தே வருவதாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் நிறைய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். பெண் பயணிகளின் பாதுகாப்பில் தனிப்பட்ட அக்கறை காட்டி வருகிறோம். இதனால் பெண் பயணிகளிடையே எங்களால் நம்பகத்தன்மையை உருவாக்க முடிந்துள்ளது. இதை நினைத்து பெருமை கொள்கிறோம்,” என்றார்.
இதன் தொடர்ச்சியாக அதிக பெண் ஓட்டுநர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ரேபிடோ, அதன் ஓட்டுநர்களை கேப்டன்கள் என்றழைக்கிறது.
“அதிகளவில் பெண்களை கேப்டன்களாக இணைத்துக்கொள்வதே எங்களது அடுத்தகட்ட திட்டம். தற்போது 98-99% ஓட்டுநர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம், பெண்களிடம் இந்த வேலை வாய்ப்பு பற்றி தகவல்கள் சென்றடைவதில்லை. அவர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. எந்த ஒரு மாற்றமும் தானாக வந்துவிடாது. அதற்கான முயற்சியை நாம் எடுக்கவேண்டும்,” என்றார்.
பெண்களுக்கு பயிற்சியளிப்பதற்கான வழிமுறைகளை ரேபிடோ ஆராய்ந்து, திட்டமிட்டு வருகிறது என்றார் சங்கா.
”ஒன்றை செய்யவேண்டும் என்கிற உண்மையான நோக்கம் இருந்தால் மட்டுமே, அது சாத்தியப்படும். எங்கள் நோக்கத்தில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். இது மிகப்பெரிய சவால் என்பதை அறிவோம். ஆனால் உறுதியான மனதுடன் கவனமாக செயல்பட்டால் நிச்சயம் செய்துகாட்ட முடியும்,” என்றார்.
ரேபிடோ, அதன் ‘பிங்க் மொபிலிட்டி’ முயற்சியின் ஒரு பகுதியாக 2,00,000 பெண்களை கேப்டன்களாக சேர்க்க இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில கட்டுரையாளர்: பார்வதி பெனு | தமிழில்: ஸ்ரீவித்யா